வாழைத்தண்டு 65

வாழைத்தண்டு 65 செய்வது எப்படி?

வாழைத்தண்டு 65 வெஜிடபிள் பிரியாணி, காளான் பிரியாணி, எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்ட எல்லா வகையான சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள மிகவும் பொருத்தமானது.

வாழைத்தண்டு என்றதுமே அதனை எவ்வாறு சுத்தம் செய்வது என்றே எல்லோருக்கும் மலைப்பாகத் தெரியும். வாழைத்தண்டின் கையால் பிரிக்க இயலாத பகுதியையே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

 

சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாழைத்தண்டு
சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாழைத்தண்டு

 

வாழைத்தண்டினை 1/2 இன்ஞ் கனத்திற்கு வட்ட வட்டமாக வெட்டவும். வட்டமாக வெட்டும்போது வரும் நாரினை ஆட்காட்டி விரால் சுற்றி தனியே பிரித்து எடுக்கவும். இவ்வாறு செய்வதால் நார்  வந்து விடும்.

வாழைத்தண்டினை வெளியே வைத்திருக்கும்போது எளிதில் கருத்து விடும். எனவே வட்டமாக வெட்டியதும் அதனை தயிர் கலந்த தண்ணீரில் போடவும்.

இனி சுவையான வாழைத்தண்டு 65 செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்தேவையான பொருட்கள்

 

வாழைத்தண்டு – 250 கிராம்

கடலை மாவு – 2  1/2 ஸ்பூன்

பச்சரிசி மாவு – 2 ஸ்பூன்

சோள மாவு – 2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – 1 ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் பொடி – 3/4 ஸ்பூன்

கரம் மசாலா பொடி – 1 ஸ்பூன்

மிளகு பொடி – 1/2 ஸ்பூன்

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)

தயிர் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

 

செய்முறை

சிறிதளவு தண்ணீரில் தயிரினைக் கலக்கி வைத்துக் கொள்ளவும்.

வாழைத்தண்டினை வட்டமாக வெட்டி நாரினை நீக்கி, தயிர் கலந்த தண்ணீரில் போடவும்.

பின்னர் வாழைத்தண்டினை பாதி ஆட்காட்டி விரல் அளவுக்கு நீளவாக்கில் வெட்டி, அதே தண்ணீரில் போட்டு வைக்கவும்.

 

தேவையான வடிவத்தில் வாழைத்தண்டு
தேவையான வடிவத்தில் வாழைத்தண்டு

 

இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சுத்தம் செய்து விழுதாக்கிக் கொள்ளவும்.

வாழைத்தண்டினை தண்ணீரில் இருந்து வடித்து எடுத்து வாயகன்ற பாத்திரத்தில் சேர்க்கவும்.

அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கடலை மாவு, பச்சரிசி மாவு, சோள மாவு, மிளகாய் பொடி, கரம்மசாலா பொடி, காஷ்மீரி மிளகாய் பொடி, மிளகு பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

 

பொடி வகைகளைச் சேர்த்ததும்
பொடி வகைகளைச் சேர்த்ததும்

 

பின்னர் பொடி வகைகளை ஒரு சேர வாழைத்தண்டில் தண்ணீர் சேர்க்காமல் கலந்து விடவும்.

 

பொடி வகைகளைச் கலந்ததும்
பொடி வகைகளைச் கலந்ததும்

 

வாழைத்தண்டில் உள்ள தண்ணீரே மசாலா பொடி வகைகள் ஒட்டிக் கொள்ள சரியாக இருக்கும்.

இக்கலவையை குளிர்சாதனப் பெட்டியில் 1/2 மணி நேரம் வைக்கவும். இதனால் பொடி வகைகள் வாழைத்தண்டில் நன்கு ஊறுவதாடு உதிராமலும் இருக்கும்.

வாணலியை அடுப்பில் வைத்து பொரிக்கத் தேவையான எண்ணெயை ஊற்றிக் காய விடவும்.

 

எண்ணெய் காயும் போது
எண்ணெய் காயும் போது

 

பின்னர் குளிர்சாதன பெட்டியில் இருந்து வாழைத்தண்டு கலவையை வெளியே எடுக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் வாழைத்தண்டு துண்டுகளை பொரித்து எடுக்கவும்.

 

பொரிக்கும் போது
பொரிக்கும் போது

 

சுவையான வாழைத்தண்டு 65 தயார்.

 

வாழைத்தண்டு 65
வாழைத்தண்டு 65

 

இதனை குழந்தைகளுக்கு சிற்றுண்டியாகவும் செய்து கொடுக்கலாம்.

குறிப்பு

வாழைத்தண்டிலிருந்து நாரினை நன்கு எடுத்து விடவும். இல்லையெனில் உண்ணும்போது நார் வாயில் தட்டுப்படும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.