வாழைப்பழம்

மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் மூன்றாவது பழமாக வருவது வாழைப்பழம் ஆகும். இது இயற்கையிலேயே அதிக ஆற்றலை தன்னுள் கொண்டு, உண்ணுபவர்க்கு அதிகளவு சக்தியைக் கொடுக்ககூடிய பழமாகும்.

வாழைப்பழம் இனிப்புச் சுவையுடன் மென்மையாக சதைப்பகுதியைக் கொண்டு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலோரின் தினசரி உணவில் வாழைப்பழம் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இது குறைவான விலையில் அதிக சத்துக்களுடன் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.

வாழைப்பழங்கள், வாழையிலைகள், குலையுடன் கூடிய வாழைமரம் போன்றவை தமிழ்நாட்டில் விழாக்களின்போது மங்கலப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இப்பழம் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் அதிக அளவு விளைகிறது. இதன் தாயகம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. இது சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பே பயிரிடப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வாழையானது நிலத்தடி வேர்த்தண்டிலிருந்து வளரும் வற்றாத மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள தாவரம். இது வெப்பமான ஈரப்பதம் நிறைந்த சூழ்நிலையில் நன்கு செழித்து வளரும்.

வாழை தனக்கான தனித்துவமான வளரியல்பைப் பெற்றுள்ளது. வாழை, மரம் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் தாவரம் முழுவதும் நீண்ட இலைக்காம்புகளைக் கொண்ட இலைகள் ஒன்றுக்கொன்று ஒரு வட்டு போன்ற பாணியில் அமைந்த பொய் தண்டினால் ஆனது. மற்ற தாவரங்களைப் போல இதற்கு கிளைகள் கிடையாது.

வாழையானது அதன் வகையினைப் பொறுத்து தரையிலிருந்து சுமார் 2 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மையுடையது. இத்தாவரம் வளர்ந்த பின்பு மையத்தண்டிலிருந்து மலரினைத் தருகிறது.

இம்மலரிலிருந்தே சீப்பு சீப்பாக வாழை மேல் நோக்கியவாறு காய்க்கிறது. ஒரு வாழைக்குலையில் சுமார் 50லிருந்து 150வரை எண்ணிக்கையில் பழங்கள் காணப்படுகின்றன.

வாழையானது இனிப்பான பழவகை மற்றும் சமையலுக்கான காய்வகை என இருவகைகளில் காணப்படுகிறது. காய்வகையானது பெரும்பாலும் பழுப்பதில்லை எனினும் பழுத்தாலும் சாப்பிட முடிவதில்லை.

இப்பழத்தின் தோலானது பச்சை, மஞ்சள், சிவப்பு, கறுப்பு என பலநிறங்களில் காணப்படுகிறது. அதேபோல் சிறியது, தட்டையானது, வழவழப்பானது, சொரசொரப்பானது, நீளமானது, விரல் நீளம் என பலவடிவங்களில் காணப்படுகிறது.

இப்பழமானது இயற்கையான மூடிபோன்ற தோலினைக் கொண்டுள்ளது. அதனை உரித்தால் உள்ளே வெண்ணிற மென்மையான இனிய மணத்துடன் கூடிய வெண்ணெய் போன்ற சதைப்பகுதி காணப்படுகிறது.

 

வாழைப்பழத்தில் காணப்படும் சத்துக்கள்

இப்பழத்தில் எளிய சர்க்கரை மூலக்கூறுகளான சுக்ரோஸ், பிரக்டோஸ், குளுக்கோஸ், விட்டமின்கள் ஏ, பைரிடாக்ஸின் (பி6), ரிபோஃப்ளோவின்(பி2), தயாமின்(பி1), சி, பான்தோதொனிக் அமிலம் போன்றவைகளும், தாதுஉப்புக்களான பொட்டாசியம், கால்சியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவையும், கார்போஹைட்ரேட், எரிசக்தி, புரதம், ஆல்பா, பீட்டா கரோட்டின்கள், லுடீன்-ஸீக்ஸாக்தைன் போன்றவைகளும் காணப்படுகின்றன.

 

வாழைப்பழத்தின் மருத்துவப் பண்புகள்

மூளை வலுப்பெற மற்றும் ஆரோக்கியமான மனநிலையைப் பெற

வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் காணப்படுகிறது. இது மூளை செயல்படும் திறனை அதிகரிக்கிறது. மனதினை நல்லநிலையில் வைத்துக் கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளின் செயல் திறனைச் சீராக்குகிறது.

விளையாட்டு வீரர்களின் கடைசிநேர மனநிலையை வெற்றியா தோல்வியா என நிர்ணயிப்பது, அதன்படி முழுவேகத்துடன் செயல்படுவது என அனைத்தையும் நிர்ணயிப்பது அவர்களின் உடலில் உள்ள பொட்டாசியம்தான்.

எனவே விளையாட்டு வீரர்களுக்கும், தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற உறுதியானவர்களுக்கும் பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம்தான் சரியான தேர்வாகும்.

மேலும் இப்பழத்தினை உண்ணுவதால் மனஅழுத்தம் குறைந்து மனப்புத்துணர்ச்சி கிடைக்கிறது. இப்பழத்தில் காணப்படும் டிரிப்டொபென் என்ற அமினோ அமிலம் மனஅழுத்தத்தினைக் குறைத்து சந்தோசமான மனநிலையை உண்டாக்குகிறது.

 

உடனடியான ஆற்றலைப் பெற

வாழைப்பழத்தில் உடனடி சக்தி வழங்கும் சர்க்கரை மூலக்கூறுகளான சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் அதிக அளவு உள்ளன. மென்மையான சதைப்பற்றான இப்பழத்தினை ஒரு கடியின் மூலம் உண்டு உடனடி ஆற்றலை ஓட்டப்பந்தய வீரர்கள் பெறுகின்றனர். ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு வாழைப்பழம் மிகச்சிறந்த தேர்வாகும்.

 

சீரான செரிமானத்திற்கு

வாழைப்பழத்தில் ஃப்ரக்டோஒலிக்கோசாக்கரைடுகள் காணப்படுகின்றன. இவை செரிமான பாதையில் நன்மை செய்யும் பாக்டீரிகளை வளரச் செய்கிறது. இப்பாக்டீரியாக்கள் ஊட்டச்சத்துகளை உடல் உட்கிரகிப்பதை ஊக்குவிக்கின்றன. மேலும் சீரான செரிமானத்திற்கு இப்பழம் உதவி செய்கிறது.

இப்பழத்தில் காணப்படும் நார்சத்து மலச்சிக்கலைத் தவிர்க்கிறது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு முதல் திடஉணவாக வாழைப்பழமே பயன்படுத்தப்படுகிறது.

 

அல்சர் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு

வாழைப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அவை அல்சர் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் ஏற்பட்ட புண்களின் மீது மெல்லிய படலம் வளர்வதை ஊக்குவித்து அல்சர் நோயிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும் அல்சர் நோய் ஏற்படக் காரணமான பாக்டீரியாவினைத் தடுக்கும் புரதநொதிச்சத்தினை இப்பழம் கொண்டுள்ளது. வாழைப்பழமானது செரிமான மண்டலத்தின் பிஎச் அளவினை சரிசெய்து நெஞ்செரிச்சலை குணமாக்குகிறது. மேலும் இப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து உணவின் செரித்தலுக்கு துணைபுரிகிறது.

 

சீரான இதய இயக்கத்திற்கு

இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து சீரான இரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது. மேலும் இதயம் சீராக இயக்குவதற்கும் இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் துணை புரிகின்றன.

 

எலும்புகள் பலம் மற்றும் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க

வாழைப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் கால்சியம் கழிவாக வெளியேறுவதைத் தடை செய்கிறது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் இப்பழம் தடைசெய்கிறது.

வாழைப்பழமானது உடல் உட்கிரகிக்கும் கால்சியம் அளவினை அதிகரிக்கிறது. இதனால் எலும்புகள் வலுப்பெறுகின்றன.

 

காலைத்தூக்க நோயிலிருந்து பாதுகாக்க

சிலர் காலையில் படுக்கையைவிட்டு எழவே மனமில்லாமல் தூங்கிக் கொண்டிருப்பர். இது காலைத்தூக்க நோய் எனப்படும். இதற்கு ஒரு நாளின் உணவு இடைவேளைக்கு நடுவில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

 

சருமம் மற்றும் கேச பராமரிப்பிற்கு

இப்பழத்தில் காணப்படும் ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் சருமம் மற்றும் கேசத்தில் உள்ள குறைபாடுள்ள செல்களை சரிசெய்கிறது. இப்பழத்தின் தோலின் உட்பகுதியை பருக்கள் மீது தடவ பருக்களின் பாதிப்பைக் குறைக்கிறது.

இப்பழத்தினை நசுக்கி அதனுடன் தயிர் மற்றும் மஞ்சளைச் சேர்த்து முகத்தில் பூச பருக்கள் மறைவதோடு முகத்தைப் பளிச்சிடச் செய்கிறது. எண்ணெய்பசை உள்ள சருமத்திற்கு இப்பழத்தினை நசுக்கி அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேனினைச் சேர்த்து முகத்தில் தடவ முகம் பளிச்சிடும்.

இப்பழத்தில் காணப்படும் விட்டமின் பி சத்து சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடை செய்கிறது. இப்பழத்தினை நசுக்கி கேசத்தில் தடவ கேசத்தின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது.

இப்பழத்தோலின் உட்பகுதியை கண்களைச் சுற்றி தடவ கண்களின் கருவளையங்கள் நீங்கி கண்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. கொசுக்கடியால் ஏற்படும் அரிப்புகள், தடிப்புகள் ஆகியவற்றிற்கு இப்பழத்தோலின் உட்பகுதியைத் தடவலாம்.

 

நிக்கோடின் பாதிப்பிலிருந்து விடுபட

வாழைப்பழத்தில் அதிகம் உள்ள விட்டமின் பி6,பி12 புகைப்பிடிப்பதால் ஏற்படும் நிகோடினை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பதற்கு உதவுகின்றன. இதயநோய், காய்ச்சல், மூட்டுவலி, மனஉளைச்சல் ஆகியவற்றை எளிதில் குணமாக்கும்.

 

வாழைப்பழத்தினை வாங்கும் முறை

வாழை பழுத்துவிட்டால் சீக்கிரமே கெட்டுபோய்விடும். ஆதலால் பொதுவாக வாழை நன்றாக முற்றியவுடன் காயாகவே அறுவடை செய்யப்படும். பொதுவாக எத்திலீன் வாயுவைத் தெளித்தே காயினை பழுக்கச் செய்கின்றனர்.

பச்சை கலந்த மஞ்சள்நிற வாழைப்பழத்தினை வாங்கும்போது பழமானது ஓரிரு நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும். மஞ்சள் நிறத்தில் பழுப்புப்புள்ளிகளுடன் உள்ள பழத்தினை வாங்கினால் உடனடியாக பயன்படுத்த வேண்டும். காம்புகளுடன் கூடிய விறைப்பான தொட்டால் மெதுவாக உள்ள பழத்தினை வாங்கவேண்டும்.

 

வாழைப்பழம் பற்றிய எச்சரிக்கை

கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.

ஒரு சிலருக்கு வாழைப்பழம் ஒவ்வாமையினால் வாய் மற்றும் தொண்டைப்பகுதிகளில் எரிச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும். அவர்கள் வாழைப்பழத்தினை தவிர்ப்பது நல்லது.

வாழைப்பழம் பொதுவாக அப்படியே உண்ணப்படுகிறது. பழக்கூழாகவும் உண்ணப்படுகிறது. பாலுடன் சேர்த்து மில்க்சேக்காக பயன்படுத்தப்படுகிறது. கேக், ஐஸ்கிரீம், சிப்ஸ், பிரட் புட்டிங் வடிவிலும் பயன்படுத்தப்படுகிறது.

சத்துகள் நிறைந்த வாழைப்பழத்தினை அளவோடு அடிக்கடி உணவில் சேர்த்து வளமோடு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.