வாழைப்பூ குழம்பு என்பது வாழைப்பூவினைப் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகளுள் ஒன்று.
வாழைப்பூவினைப் பயன்படுத்தி வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை போன்றவற்றையும் செய்யலாம்.
வாழைப்பூ சுத்தம் செய்வதற்கு சிறிது நேரம் எடுத்தாலும் அதில் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைய உள்ளன.
எளிய முறையில் சுவையான வாழைப்பூ குழம்பு செய்முறை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பூ – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
சின்ன வெங்காயம் – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – 2 கொத்து
மசால் அரைக்க
தேங்காய் – ½ மூடி
மல்லி தூள் – 2 ஸ்பூன்
சீரகத் தூள் – 1¼ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1¼ ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கீற்று
செய்முறை
வாழைப்பூவினை சுத்தம் செய்யும் முறை
வாழைப்பூவில் வெளியில் உள்ள கத்தரிப்பூ நிறத்தில் உள்ள மடலை உரித்தால் உள்ளே வாழைப்பழ சீப்பு வடிவில் உள்ள பூக்களை தனியே பிரித்தெடுக்கவும்.
உள்ளே மஞ்சள் கலந்த வெள்ளைநிற குச்சிகளுடன் வெள்ளை நிற தடிமனான கள்ளான் இருக்கும். அதில் கள்ளானை விட்டுவிட்டு குச்சிகளை மட்டும் சேகரித்துக் கொள்ளவும்.
இதே போல் வாழைப்பூவின் 2 / 3 பகுதி வரை செய்யவும். மீதமுள்ள பூ பகுதி மெல்லியதாக இருப்பதால் அதனை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது சுத்தம் செய்த வாழைப்பூ தயார்.
மிக்ஸியில் துண்டுகளாக்கிய தேங்காய், மல்லித்தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை கொண்டு மசால் தயார் செய்யவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். மல்லி இலையை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின் அதனுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வெந்த நிலையில் சுத்தம் செய்து வைத்துள்ள வாழைப்பூவினைச் சேர்த்து வதக்கவும்.
வாழைப்பூ சேர்த்தவுடன்
சின்ன வெங்காயம், வாழைப்பூ வதங்கிய நிலையில் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலைச் சேர்க்கவும்.
பின் அதனுடன் தேவையான அளவு நீர் மற்றும் உப்பினைச் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
மசால் வாடை போனவுடன் அடுப்பினை அணைத்து விடவும். பின் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்க்கவும். சுவையான வாழைப்பூ குழம்பு தயார்.
இக்குழம்பு சாதம், தோசை ஆகியவற்றுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.
குறிப்பு
இக்குழம்பிற்கு நாட்டு வாழைப்பூவினைப் பயன்படுத்தினால் சுவை நன்றாக இருக்கும்.
விருப்பமுள்ளவர்கள் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் ஆகியவற்றிற்கு பதில் மசாலா பொடி (2½ ஸ்பூன்) யைப் பயன்படுத்தி இக்குழம்பினை தயார் செய்யலாம்.
–ஜான்சிராணி வேலாயுதம்