வாழைப்பூ சூப் ஆரோக்கியமான சூப் ஆகும். வாழைப்பூவினை சுத்தம் செய்து சமைக்க நேரமாகும் என்பதால், நம்மில் பலரும் இதனை ஒதுக்கி விடுவது உண்டு. ஆனால் சத்துக்கள் நிறைந்த வாழைப்பூவினை நம் உணவில் அடிக்கடி சேர்ப்பது உடல்நலத்திற்கு மிகவும் சிறந்தது.
வாழைப்பூவினை சுத்தம் செய்யும் போது உள்ள வெள்ளை மடல் பகுதிகளை வீண் செய்யாமல் சூப் தயார் செய்து அருந்தலாம்.
துவர்ப்பு சுவையை உணவில் சேர்ப்பது அவசியம். அதற்கு வாழைப்பூவினை உணவாகப் பயன்படுத்தலாம்.
வாழைப்பூவினைக் கொண்டு வாழைப்பூ குழம்பு, வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை உள்ளிட்ட உணவுகளைத் தயார் செய்யலாம்.
இனி எளிய முறையில் சுவையான வாழைப்பூ சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பூ ஒரு கைபிடி அளவு (நறுக்கியது)
சின்ன வெங்காயம் 5 எண்ணம்
வெள்ளைப் பூண்டு 3 பற்கள் (பெரியது)
சீரகம் 3/4 ஸ்பூன்
மிளகு 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி இலை 1 கொத்து
கறிவேப்பிலை 3 கீற்று
புதினா இலை 1 கொத்து
தக்காளி 1 எண்ணம் (பெரியது)
உப்பு தேவையான அளவு
மிளகுப் பொடி தேவையான அளவு
மஞ்சள் பொடி 2 டீஸ்பூன்
வாழைப்பூவினை சுத்தம் செய்யும் முறை
வாழைப்பூவில் கத்தரிப்பூ நிறத்தில் உள்ள மடலை உரித்து, உள்ளே வாழைப் பழச் சீப்பு வடிவில் உள்ள பூக்களைத் தனியே பிரித்து எடுக்கவும். அப்பூக்களின் உள்ளே மஞ்சள் கலந்த வெள்ளை நிற குச்சிகளுடன் வெள்ளை நிறத்தில் தடிமனான கள்ளான் இருக்கும்.
சூப்பிற்கு கள்ளானையும், பூவின் அடியில் வெளிர் வெள்ளை நிறத்தில் கள்ளான், வெள்ளை நிறக் குச்சிகளை பூவோடு இணைத்திருக்கும் மூடி போன்ற பகுதியையும் நீக்கி விட்டு, பூக்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும்.
வாழைப்பூவினை உரித்துக் கொண்டே செல்லும் போது, மடல் பகுதி கத்தரிப்பூ நிறத்தில் இருந்து வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த மடல் மிகவும் மெல்லிதாக வழுவழுப்பாக இருக்கும். இதனையும் சூப் செய்வதற்கு நறுக்கிக் கொள்ளவும்.
வாழைப்பூவின் உட்பகுதில் உள்ளவற்றை வாழைப்பூ குழம்பு செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பமிருந்தால் வாழைப்பூவின் உட்பகுதி முழுவதையும் பயன்படுத்தியும் சூப் தயார் செய்யலாம்.
வாழைப்பூ சூப் செய்முறை
சூப்பிற்கு தேவையான வாழைப்பூ பகுதியை நறுக்கி, ஒரு கைபிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நேராக நறுக்கிக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா இலை ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலை, புதினா இலை ஆகியவற்றின் தண்டுப் பகுதியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் நறுக்கிய வாழைப்பூ, சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா, சீரகம், மஞ்சள், மிளகு, தக்காளி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பின்னர் அதனுடன் 3 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.
குக்கரை மூடி மூன்று விசில் விடவும். அடுப்பினை சிம்மில் 10 நிமிடங்கள் வைத்து அணைத்து விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து கலவையை வடிகட்டவும்.
வடிகட்டியில் தங்கியவற்றை சிறிதளவு வடிகட்டிய தண்ணீருடன் சேர்த்து, கரண்டியால் நன்கு மசித்து விடவும். பின்னர் மீண்டும் வடிகட்டி மசிக்கவும்.
நன்கு மசிந்ததும் வடிகட்டிய தண்ணீருடனே சேர்த்து கலக்கவும். சுவையான வாழைப்பூ சூப் தயார்.
சூப்பினை பரிமாறும்போது மிளகுத் தூள், கொத்தமல்லி இலையைச் சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் நன்கு மசித்து சேர்த்த பின்பும் சூப்பினை வடிகட்டிப் பருகலாம்.
விருப்பமுள்ளவர்கள் சீரகத்துடன் சிறிதளவு பெருஞ்சீரகமும் சேர்த்து வேக வைத்து சூப் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் சூடான சூப்புடன் சிறிதளவு நல்ல எண்ணெய் சேர்த்து சூப்பினைப் பரிமாறலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!