வாழை – மருத்துவ பயன்கள்

வாழை மரத்தின் பெரும்பாலான பகுதிகள் நமக்கு பயனுள்ளவை. பூ, பிஞ்சு, காய் ஆகியவை துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; வெள்ளைபடுதலைக் கட்டுப்படுத்தும். தண்டு நீர், இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.கட்டை, தண்டு ஆகியவை பித்தத்தைக் கட்டுப்படுத்தும்; சிறுநீரைப் பெருக்கும்.

இலை, பட்டை ஆகியவை குளிர்ச்சியுண்டாக்கும். பழம் உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; மலமிளக்கும்; உடலைப் பலப்படுத்தும். வாழை இலையில் உணவு சாப்பிட உடல் ஆரோக்கியம் பெருகும். இரு ஒரு பாரம்பரியப் பழக்கவழக்கமாகும்.

வாழை மரத்தில் நீள்சதுர வடிவிலான பெரிய இலைகள் தண்டில் சுற்று அமைப்பாக வளர்ந்திருக்கும். இலைக்குருத்து, நீண்டு உருண்டவை. இலைக்காம்புப் பகுதி குறுகிய உறை போன்றது.

பூவடிச் செதில்கள், செங்கருநீலம். மலர்கள் ஒருபால் தன்மையானவை, மஞ்சரிக் கொத்தின் கீழே பெண் மலர்களும், மேலே ஆண் மலர்களும் காணப்படும். காய்கள், பெரிய குலையாக வளர்பவை.

கனி, சதைப்பற்றானது. வாழையில் பல வகைகள் காணப்படுகின்றன. அம்பணம், அரம்பை, கதலி போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. தமிழகம் முழுவதும் உணவு உபயோகங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது.

 

எச்சரிக்கை

மூட்டுவலி உள்ளவர்கள் வாழைக்காயை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே பல நோய்கள் வருவதைத் தடுக்கலாம்.

 

வாழைத்தண்டு பொரியல், சாம்பார் செய்து வாரம் இருமுறைகள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றாது; சிறுநீர் நன்றாகக் கழியும்.

ஒரு டம்ளர் அளவு வாழைப்பட்டைச் சாற்றைப் பாம்புக்கடி பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாகக் கொடுக்கலாம்.

வாழைப்பழம் இரவில் சாப்பிட்டால் உண்ட உணவு நன்றாகச் செரிமானம் ஆகும்; மலச்சிக்கல் இருக்காது. நோயாளிகளின் உடல் தேற மிகவும் உகந்த பழமாகும்.

வாழை இலைக் குருத்தைத் தீப்புண்கள் மீது கட்ட வேண்டும். கொப்புளங்கள் இருந்தாலும் அவற்றின் மீது வைத்துக் கட்ட அவை மறையும்.

பிஞ்சு வாழைக்காய் கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் உறுதி அதிகரிக்கும். வயிற்றுப் புண்கள் மாறும். வாரம் ஒரு முறை வாழைக்காய் பொரியல், வறுவல் போன்றவை செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்; உடல் உறுதியாகும்.

துவரம் பருப்புடன் வாழைப்பூசேர்த்து கூட்டுவைத்து சாப்பிட வேண்டும். பித்த நோய்கள் குணமாகும்; இரத்தம் விருத்தியாகும்.

 

வாழைப்பழம் தரும் சத்துகள்

ஈரம் : 61.3%

சர்க்கரை : 36.4%

புரதம் : 1.3%

கொழுப்பு : 0.2%

தாதுப்பொருட்கள் : 0.7%

சுண்ணாம்புச் சத்து : 0.01%

இரும்புச் சத்து : 0.04%

 

சிறுநீரகக் கற்கள் கரைய வாழைத்தண்டைச் சமைத்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் இரண்டு முறைகள் இவ்வாறு தொடர்ந்து செய்துவர வேண்டும்.

எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பது குணமாக வாழைத்தண்டு கிழங்குகளை, பொடியாக அரிந்து, இடித்துப் பிழிந்த சாறு ½ டம்ளர் அளவு, தினமும் இரண்டு வேளை சரியாகும் வரை குடிக்க வேண்டும்.

 

அன்றாட வாழ்வில் 

மருத்துவத்தில் மட்டுமின்றி வாழையின் எல்லா பாகங்களும் நமது அன்றாட வாழ்வில் பல வகைகளிலும் பயன்படுபவை ஆகும்.

முகம் பொலிவு பெறவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் இலையில் சாப்பிடுவது மிகுந்த பயன் தரும். பண்டிகைகள், விழாக்கள், சடங்குகளின்போது, வாழை இலையில் பரிமாறப்படும் சாப்பாடே சிறப்பிடம் வகிக்கின்றது.

வாழைப்பழம், மிக முக்கியமான பழ வகையாகும், முக்கனிகளுள் ஒன்றாகும். பூசை, படையலிலும் வாழைப்பழம் இன்றி செய்யப்படும் சடங்கு முழுமை பெறுவதில்லை. நார் பூக்களையும், பூ மாலைகளையும் கட்டுவதற்கு பயன்படும் கயிறாகும்.

வாழை மரம் திருமணம், புனித காரியங்கள், புண்ணிய காரியங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் வாயிலில் கட்டப்படுகின்றது. பூ, பிஞ்சு, காய், தண்டு ஆகியவை நமது அன்றாட உணவு தயாரிப்பில் பயன்படுபவை.