வாழ்க்கையின் ரகசியம் பற்றித் தெரியாமல் நம்மில் பலர் அலைந்து, திரிந்து வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கின்றோம்.
வாழ்க்கையின் ரகசியமே மகிழ்ச்சியைப் பெறுவதாகும்.
அந்த மகிழ்ச்சியை எப்படி பெற்று வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதை ஒரு சிறு கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு பெரிய குருவின் ஆசிரமத்தில் சீடன் ஒருவன் மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருந்தான்.
அவனின் சோகத்தைப் பார்த்த குரு சீடனிடம் “நீ ஏன் மிகவும் சோர்வாகக் காணப்படுகிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு சீடன் “என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை” என்று கூறினான்.
குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பட்டாம் பூச்சிகள் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன.
குரு சீடனிடம் “இங்கு பறந்து திரிந்து கொண்டு இருக்கும் பட்டாம் பூச்சிகளில் ஒன்றை பிடித்து விட்டு வா” என்று கூறினார்.
சீடனும் குருவின் ஆணைப் படி பட்டாம் பூச்சிகளைப் பிடிக்க ஓடினான்.
ஆனால் சீடனால் பட்டாம் பூச்சிகளில் ஒன்றையும் பிடிக்க முடியவில்லை.
சோர்ந்து களைப்புடன் திரும்பிய சீடனைப் பார்த்து “பரவாயில்லை வா. நாம் தோட்டத்தின் அழகினைப் பார்த்து ரசிக்கலாம்” என்று கூறினார்.
பின் சீடனை தோட்டத்தின் மையப் பகுதிக்கு அழைத்து வந்தார்.
அங்கு இருவரும் தோட்டத்தின் அழகினை கண் குளிரப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த பட்டாம் பூச்சிகள் அவர்களையும் சுற்றத் தொடங்கின.
சற்று நேரத்திற்கு முன்பு சீடன் பிடிக்க முயன்ற பட்டாம் பூச்சி இப்போது அவன் கைகளில் வந்து அமர்ந்தது.
குரு சிரித்த படி சீடனிடம் “இது தான் வாழ்க்கை. மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை. நாம் வாழ்வினை அமைதியாய் ரசிக்கும் போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்து விடும்” என்றார்.
அதனைக் கேட்டவுடன் “வாழ்க்கையின் ரகசியத்தை நான் புரிந்து கொண்டேன். வாழ்க்கையினை ரசித்து மகிழ்ச்சியுடன் வாழ்வேன்” என்று கூறினான்.
ஆதலால் நாமும் நம்முடைய வாழ்வினை பொறுமையாக ரசித்து மகிழ்ச்சியைப் பெற்று வளமான வாழ்வு வாழ்வோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!