வாழ்க்கையும் விளையாட்டும்

வாழ்க்கையும் விளையாட்டும் என்ற இந்த கட்டுரை, எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை.

ஆனந்த ரகசியம்

எங்கே கிடைக்கும் இன்பம்? எனக்குக் கிடைக்குமா நிம்மதி? என்று ஏங்கி அலைபவர்க்கு இன்முகம் காட்டி ஈடற்ற இன்பங்களை வழங்குவது விளையாட்டுக்களாகும்.

எப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா!

தன்னுள்ளே தோன்றுகிற பயங்கர நினைவுகளிலிருந்து விளையாட்டுக்களில் பங்கு பெறுபவர் எளிதாக விடுபடுகிறார்.

தன்னுள்ளே தோன்றுகின்ற தாங்காதக் களைப்பிலிருந்து சமர்த்தாக வெளியேறி உல்லாசமான ஓய்வினைப் பெறுகின்றார்.

மனதிலே தைரியத்தையும், உடலிலே சக்தியையும் திரட்டி, வலிமையுடன் எதிர்படும் தடைகளுடன் போராடும் வல்லமையை விளையாட்டுக்காரர் வளர்த்துக் கொள்கிறார்.

 

இது மட்டுமா? இன்னும் கேளுங்கள்.

விளையாட்டில் ஈடுபடும் ஒருவரை தனது சக்தியின் அளவினை அறிந்து, சாமர்த்தியமாக செலவழித்து செய்யற்கரிய சாதனைகள் செய்திடவும் வைக்கின்றன.

அதாவது,

தனது வலிமை எத்தகையது?

தனக்குள்ள பலவீனம் என்ன?

திறமையின் அளவு எது?

செயலாற்றும் தன்மை, நெஞ்சுரம் எவ்வளவு?

புத்திசாலித்தனம் எப்படி?

உள்ளுணர்வுகளை விரைந்து வெளிப்படுத்தி இயங்கும் ஆற்றல் எப்படி?

துன்பத்தையும் நெருக்கடிகளையும் சமாளிக்கின்ற சாமர்த்தியம் எப்படி?

என்பன போன்ற எண்ணற்ற அரிய குணங்களை விளையாட்டு வளர்த்து விடுகிறது.

மனித குலத்தை விளையாட்டுக்கள் அற்புதமாக ஆட்சி செய்கின்றன. மாட்சியில் மகிமைப் படுத்துகின்றன.

வாழ்க்கையும் விளையாட்டும்

வாழ்க்கையும் விளையாட்டும் வெவ்வேறானவை அல்ல. இரண்டும் ஒன்றுதான். ‘இயற்கை என்பதுதான்’ இப்படி இரண்டாகப் பிரிந்து இன்பத்தின் திரண்ட வடிவமாக விளங்குகின்றது.

வாழ்க்கையிலும் விளையாட்டுக்களிலும் இலட்சியங்கள் உண்டு. அதாவது இறுதியில் சேர்கின்ற இலக்குகள் உண்டு. அவற்றை அடைந்திட கட்டுப்பாடுகள் உண்டு.

கடுமையான தடைகள், சோதனைகள், விதிமுறைகள், வழிநடத்தும் வழி முறைகள் எல்லாமே நிறைய உண்டு.

வாழ்க்கையில் இன்ப துன்பம் இருக்கின்றன. வெற்றி தோல்வி இருக்கின்றன. இவைகள் விளையாட்டுக்களிலும் உண்டு. அல்ல அல்ல அவைகள் தான் எல்லாமும்.

வாழ்க்கை உலகில் எதிர்ப்புகள், ஏமாற்றங்கள், பாதிப்புக்கள், நெருக்கடிகள், பதற்ற‌மான சூழ்நிலைகள் எதிர்ப்படுவது போலவே, விளையாட்டு உலகிலும் உண்டு.

நாம் ஒன்றை மட்டும் உறுதியாக உணர வேண்டும்.

வாழ்க்கை என்பது ஓர் அழகான கிண்ணம். அதில் விளையாட்டு என்னும் மகாசக்தி நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கின்ற சுவையான பழரசம் ஊற்றப் பட்டிருக்கிறது.

எண்ணத்தில் தேர்ந்து, கிண்ணத்தை எடுத்துப் பருகுவோர், உடல் வண்ணத்தில் பொலிவும், நினைவுகளில் தெளிவும், நிலையில் வலிவும் கொண்டு நிம்மதியுடன் வாழ்கின்றனர்.

பழரசத்தைப் பழித்து, புழுதியிலே ஊற்றுவோர், பெறுகிற பயன்களையெல்லாம் இழந்து, கிண்ணத்தையும் கவிழ்த்துக் கொண்டு காலாவதியாகிப் போகின்றனர்.

இவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்றால், வைக்கோல் போரில் படுத்துக் கொண்டு, மாட்டையும் தின்னவிடாமல், குலைத்துக் கொண்டு தானும் தின்னமுடியாமல் அதன்மேல் படுத்துக் கொண்டு கிடக்கும் தெரு நாய் போன்றவர்கள்.

இருந்தாலும், இப்படிப்பட்டவர்களால் விளையாட்டை இதுவரை ஒன்றுமே செய்ய முடியவில்லை. எதிர்த்தவர்கள் எல்லோருமே இடம் மாறி, தரம் மாறி, தாழ்ந்து வீழ்ந்து போனவர்களாகி விட்டார்கள்.

 

விளையாட்டை விரும்பாத மக்கள் எல்லாம் நலமாக வாழவில்லையா? என்று எதிர்வினா எழுப்புவாரும் உண்டு.

ஒன்றுமே செய்யாதவர்கள் உருப்படியாக வாழ்கின்றார்கள் என்றால், உடலை இயக்கி உற்சாகப் படுத்தி வாழ்பவர்கள் எவ்வளவு நலமாக வாழ்வார்கள்?.

அவர்கள் நலமும் பலமும் பெற்று நாளெல்லாம் ராஜ வாழ்வு வாழ்வார்கள், வாழ்கிறார்கள் என்பதுதான் நாம் கண்ட அனுபவமாகும்.

ஏனெனில், விளையாட்டின் இயல்புகளும், அடிப்படை குணங்களும் அப்படித்தான் அமைந்து கிடக்கின்றன.

வாழ்க்கையும் விளையாட்டும் மகிழ்ச்சியானவை; அனுபவித்துப் பாருங்கள்; உண்மை புரியும்.

எஸ்.நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.