காலை மணி பத்து முப்பது.
கேஸ் அடுப்பின் மீது அங்குமிங்குமாய்ச் சிந்தியிருந்த சாம்பார்த் துளிகள் கறிகாய்த் துணுக்குகளை ஈரத்துணியால் துடைத்துவிட்டு அடுப்பினை லேசாய்த் தூக்கி அதன் கீழே மேடையையும் துடைத்துக் கொண்டிருந்த பிருந்தாவின் மனசு பொருமிக் கொண்டிருந்தது.
‘என்ன பேச்சு, என்ன பேச்சு கட்டின பொண்டாட்டிட்ட இப்பிடியா பேசுறது. தாலி கட்டின பொண்டாட்டி, பெத்த புள்ளைங்க இவுங்கள காப்பாத்த வேண்டியது யாரோட பொறுப்பு? குடும்பத் தலைவனோட பொறுப்பு தானே? தன் குடும்பத்துத் தேவைகளை தான்தானே பாத்துக்கனும். அதுக்கு இப்பிடியா கணக்குப் பார்ப்பது. அத எடுத்துச் சொல்லிக் கேட்டா இப்பிடியா பேசறது. அப்படி கணவன் தியாகு பேசுவது புதிதல்ல என்றாலும் இப்பொழுதெல்லாம் மனசு அவனின் வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள மாட்டேன்கிறது.
தன் கணவன்போல் குணம் கொண்டவர்கள் வேறு யாராவதுகூட இருப்பார்களா என்று சந்தேகமா இருந்தது பிருந்தாவுக்கு.
கண்களில் கண்ணீர் அரும்பி கன்னங்களில் வழியத் தயாராய் இருந்தது. வழியத் தயாராய் இருந்த கண்ணீரை வலது தோள் பட்டையை லேசாய் உயர்த்தி முகத்தை தோள்பட்டை அருகே தாழ்த்தி வலது கண் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
பின்னர் இடது தோள்பட்டையை உயர்த்தி மீண்டும் முகத்தை இடது பக்கம் தாழ்த்தி இடது கண் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
அடுப்பையும் மேடையையும் துடைத்துவிட்டு, பாத்திரங்களைத் தேய்த்துவிட்டு கையிலிருந்த துணியை சலவைப் பவுடரில் ஊற வைத்து அலச வேண்டும் என்று நினைத்தவளாய் மேடையின் ஓரமாய்ச் சுருட்டி வைத்தாள்.
ஸிங்க்கில் பாத்திரங்கள் குவிந்து கிடந்தன. கிடக்கும் பாத்திரங்களை எப்படித் தேய்க்கப் போகிறோமோ என்று மலைப்பாய் இருந்தது பிருந்தாவுக்கு.
உடலும் மனமும் ஓய்ந்து போயிருந்த நிலையில் சின்ன வேலையும் மலையளவு தெரிந்தது.
‘ம்கூம், பாத்திரங்களை இப்போது தேய்த்துக் கழுவ முடியாது’ என்று நினைத்தவளாய் கிச்சன் லைட்டை அணைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் பிருந்தா.
காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை; சாப்பிடப் பிடிக்கவில்லை. வாயெல்லாம் கசந்தது.
ஒருவாரம் பாடாய்ப்படுத்திவிட்டு நேற்று முதல்தான் தொலைந்து போ போனாப் போகுதுன்னு ஒன்ன விட்டுட்டுப் போறேன் என்று சொல்லாமல் சொல்லி விட்டுப் போனது பாழாய்ப் போன புதுவகை ஜுரம்.
ஏற்கனவே மனதால் பலவீனப்பட்டுப் போயிருந்த பிருந்தாவை உடலாலும் பலவீனப்பட வைத்துவிட்டுப் போயிருந்தது ஜுரம். வாய்க் கசப்பால் காபிகூட குடிக்கப் பிடிக்கவில்லை.
கணவன் தியாகு அலுவலகமும் ஒன்பதாவது படிக்கும் மகனும் ஆறாம் வகுப்பு படிக்கும் மகளும் பள்ளி சென்றாயிற்று.
தனியார் பள்ளியில் ஆசிரியையாய்ப் பணியாற்றும் பிருந்தா ஜுரம் காரணமாய் எடுத்திருந்த பத்துநாள் மருத்துவ விடுப்பு ஞாயிற்றுக் கிழமையோடு முடிந்து திங்கள் முதல் பணிக்குச் செல்ல வேண்டும்.
‘குவிந்து கிடக்கும் பாடங்களை நடந்தி முடிக்க வேண்டுமே’ என்ற கவலையோடு சேர்ந்து பள்ளி நிர்வாகம் கொடுக்கப் போகும் நெருக்கடி, அழுத்தம் இவற்றையும் எண்ணி கவலைப்பட்டது மனசு.
கொடுக்கும் பனிரெண்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றும் ஆசிரியர்களை அடிமையாகவே நடத்தும் நிர்வாகத்தை கேள்வி கேட்கும் தெம்பு பிருந்தா உட்பட எந்த ஆசிரியர்க்கும் இல்லை. காரணம் அந்த சம்பளப் பணம் இல்லாமல் போனால் குடும்பத்தேர் ஓடாது.
பட்டதாரி ஆசிரியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வருடம் பனிரெண்டாகப் போகிறது. இன்னமும் அரசுப்பள்ளி ஆசிரியையாகும் பாக்கியம் கிடைக்கவில்லை. இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் லிஸ்ட்டில் இருப்பவள். வயது முப்பத்து எட்டு.
ஹாலின் ஜன்னல் கதவைத் திறந்தாள் பிருந்தா. காலை பத்தரை மணி வெய்யில் ‘பளீர்’ ‘சுளீரெ’ன அடித்துத் தன் வீரியத்தைக் காட்ட ஆரம்பித்திருந்தது.
சூரியனின் வீரியம்மிக்க கதிர்களின் வெப்பம் காற்றில் கலந்து சூட்டை வாரியிறைத்தது. வெப்பக் காற்று ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்த பிருந்தாவின் முகத்தில் பட்டது. முகத்தில் வெப்பத்தை உணர்ந்தாள் பிருந்தா.
நாக்கு வறண்டு போனது. உதடுகள் காய்ந்து போயின. காய்ந்து போன உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொள்ள முயன்றாள். வந்து போன ஜுரத்தால் உதடுகள் நீர்ப்பசையின்றி வறண்டு போய் ‘பாளம் பாளமாக’ வெடித்து போயிருப்பதை உதடுகளை வருடிய நாக்கு உணர்ந்தது.
ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த மேற்பரப்பில் கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவற்றின் மேல் கூர்மையான கண்ணாடிச் சில்லுகளைப் பொருட்படுத்தாமல் வரிசையாய் பதினைந்து இருபது தவிட்டுக் குருவிகள் ‘காச்மூச்’சென்று கத்திக் கொண்டு அமர்ந்திருந்தன.
அவற்றைப் பார்த்த பிருந்தாவுக்கு அவைகளுக்கிடையே ஏதோ பஞ்சாயத்து நடப்பது போலவே தோன்றியது.
வரிசையாய் அமர்ந்திருந்த குருவிகளில் திடீரென வலதுபக்கம் அமர்ந்திருந்த ஐந்தாறு குருவிகள் ‘காச்சாச்’சென்று கத்தின. மற்றவை அமைதியாய் இருந்தன.
அவை கத்தி முடித்ததும் இடதுபக்கதில் அமர்ந்திருந்த ஏழெட்டு குருவிகள் கத்தித் தீர்த்தன.
நடுவிலிருந்த ஐந்தாறு குருவிகள் அமைதியாய் இருந்தன. கத்திய குருவிகள் வழக்காடுபவையாகவும் நடுவில் அமைதியாய் இருந்தவை ஜட்ஜுகளாகவும் தோன்றியது பிருந்தாவுக்கு.
திடீரென ஜட்ச் குருவிகளில் மூன்று குருவிகள் ‘சடசட’வெனப் பறந்து போயின.கத்திய இருபக்கக் குருவிகளிடையேயும் குழப்பம் ஏற்பட்டாற் போல் வித்தியாசமான ‘குறுக்குறுக்’கென்ற ஒலி எழுந்தது. பறந்து போன அதே குருவிகளோ வேறு குருவிகளோ இப்போது நான்கு குருவிகள் புதிதாய் வந்து அமர்ந்தன.
காரசாரமாய் தவிட்டுக் குருவிகள் கத்திக்கத்தி ஒலியெழுப்பின.நிமிட நேரத்தில் அமைதியாயின. நடுவில் அமைதியாய் அமர்ந்தி ருந்த குருவிகள் இப்போது கத்த ஆரம்பித்தன.
மீண்டும் நிமிட நேர அமைதி. அமைதியைக் கிழித்துக் கொண்டு இருபுறத்திலும் அமர்ந்திருந்த குருவிகள் சப்தம் போட ஆரம்பித்தன. சில குருவிகள் பறந்து போயின. சிலகுருவிகள் நகர்ந்துபோய் வேறிடம் அமர்ந்து கத்தின.
சில குருவிகள் சிறுசிறு செடிகளின் மெல்லிய கிளைகளில் அமர்ந்து ஊஞ்சலாடின. மொத்தத்தில் அந்த இடமே களேபரம் ஆனதுபோல் ஆனது.
எந்தப்பக்க வரிசைக் குருவிகளுக்குச் சாதகமாய் பஞ்சாயத்துத் தீர்ப்பு சொல்லப்பட்டதோ?..
பிருந்தா ‘தவிட்டுக் குருவிகளுக்குள் என்ன வழக்கு? என்ன தீர்ப்பு கொடுக்கப்பட்டது?’ என்று புரியாதவளாய் நின்றாள்.
கொத்தாய்க் குருவிகள் நாலாபக்கமும் பறந்து போயின. அமைதியானது அந்த கண்ணாடிசில்லுகள் பதிக்கப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவரின் அந்தப்பகுதி.
பெருமுச்சு விட்டாள் பிருந்தா.
‘தவிட்டுக்குருவிகளின் வழக்குகூட பஞ்சாயத்து பண்ணி தீர்ப்பு சொல்லப்பட்டு விட்டது. தனக்கும் தன் கணவன் தியாகுவுக்குமிடையே நடக்கும் போராட்டத்தை எந்தப் பஞ்சாயதிற்குக் கொண்டு செல்வது? யாரிடம் முறையிடுவது? யார் தீர்ப்பு சொல்வார்? இது போன்ற வழக்கை பெக்கூலியர் என்றோ ரேர் இன் ரேர் என்றோ சொல்லிச் சிரிக்க மாட்டார்கள்?‘ என்ற கேள்வி எழுந்தது மனதில்.
சமையலறைக்குள் சென்று ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரை எடுத்துக் குடித்தாள் பிருந்தா.வெறும் வயிற்றில் நீர் ‘டொர் டொர்’ என்று சப்த மெழுப்பிக் கொண்டே இறங்கியது. நாக்கால் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டாள்; சோஃபாவில் வந்து அமர்ந்தவள் அப்படியே சுருண்டு படுத்துக்கொண்டாள்.
பிருந்தா நடுத்தர குடும்பதில் பிறந்தவள்தான். நான்கு உடன்பிறப்புக்கள். அப்பாவுக்கு டிவிஎஸ் கம்பெனியில் வேலை. குறைந்த சம்பளம்; நிறைந்த பிள்ளைச் செல்வம். பற்றாக்குறையால் தள்ளாடும் வாழ்க்கைப்படகு.
நன்றாகப் படிக்கும் பிருந்தாவை கஷ்டப்பட்டு பி.எஸ்ஸி.பி எட். படிக்க வைத்தார் பிருந்தாவின் தந்தை.
தன்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்த அப்பாவின் குடும்பச் சுமையைத் தான் வேலைக்குப் போய்க் குறைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஆசிரியர்த் தேர்வு எழுதி மெரிட்டில் பாஸ்செய்தாள்.
ஆனாலும் ‘நாமொன்று நினைக்க தெய்வம் வேறு விதமாய் நினைத்து விட்டது’ என்பதுபோல் ‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது’ என்பதுபோல் எந்த ஆட்சியிலும் பிருந்தாவுக்கு அரசு ஆசிரியப் பணி கிட்டவே இல்லை. தனியார் பள்ளியில் மூவாயிரம் சம்பளத்திற்கு வேலைக்குப் போனாள் பிருந்தா.
பிருந்தாவின் அப்பா அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டவராய்த் தெரியவில்லை. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத குணம்.
‘நீ கவர்மென்ட் வேலைக்குப் போய் ஒம்புருஷனுக்கு சம்பாதிச்சுக் குடு’ என்று சொல்வதைப்போல் தியாகுவை. கடனோ உடனோ பட்டுக் கல்யாணத்தை முடித்துப் பிருந்தாவின் கணவராக்கி விட்டார்.
கல்யாணம் நிச்சயமான உடனேயே பிருந்தாவின் பயோடேட்டாவை வாங்கி தனியார் பள்ளியொன்றில் தியாகு கொடுத்து வைத்திருந்ததால் திருமணமான மறுமாசமே தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தாள் பிருந்தா.
கல்யாணமாகி வந்த உடனேயே தியாகுவின் குணம் தெரிந்து போயிற்று பிருந்தாவுக்கு.
குடும்பம் நடத்த ஆகும் செலவில் வீட்டுவாடகை உட்பட அனைத்திலும் பாதி செலவை, பாதிப்பங்கை பிருந்தா அவள் சம்பளத்திலிருந்து கொடுக்க வேண்டும்.
வாடகை, மளிகை, ஜவுளி, ஹோட்டல், சினிமா, வைத்தியம், கரண்ட்பில் தொடங்கி அல்ப விஷய செலவுகளிலும் பிருந்தா பங்கேற்க வேண்டும்.
பழம், பூ வாங்கி வந்தால்கூட அதற்காகும் செலவு ஐம்பது என்றால் பேப்பரில் ஆன செலவினை எழுதிக் காண்பித்து அந்த செலவில் பாதிப்பணத்தை கேட்டு வாங்கிவிடுவான்.
‘இதென்ன குணம். இப்படிக்கூட உலகில் ஆண்கள் இருப்பார்களா?’ தவித்துப் போனாள் பிருந்தா. பெற்றவார்களிடம் கூடச் சொல்லாமல் மறைத்தாள்.
பிருந்தாவுக்கு ஜுரம், கிரம் வந்துவிட்டால் தியாகு அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்வான்.ஆனால் டாக்டர் ஃபீஸ் மருந்துக்கான செலவை அவளே கொடுக்க வேண்டும்.
அவனுக்கு வந்தால் இவள் தரவேண்டாம். குழந்தைகள் பிறந்த பின்னரும் துளியும் மாறவில்லை தியாகு.
குழந்தைகளை வளர்க்க ஆகும் செலவில் பாதியை பிருந்தா கொடுத்து விட வேண்டும். டாய்ஸ், தின்பண்டம், வெளியில் அழைத்து சென்றால் ஆகும் செலவு, ட்ரெஸ்கள், பள்ளிக் கட்டணம், ஸ்கூல் பஸ் கட்டணம், ஏன் குழந்தைகளுக்கு சாதாரணமாய் வரும் சளி காய்ச்சலென்று மருத்தவரிடம் செல்ல ஆகும் செலவைக்கூட பாதியளவு வாங்கி விடுவான்.
மனமொடிந்து போனாள் பிருந்தா. அடிக்கடி சண்டை வந்தது இருவர்க்குள்ளும்.
“குடும்பத்தை நடத்த இந்தக் காலத்தில் ஒருவர் சம்பளம் போதாது. மனைவியும் வேலைக்குப்போய் சம்பாதிப்பதுதான் நல்லது. இது எனக்கும் தெரியும். இது எனது குடும்பமும்தான். நான் சம்பாதிப்பதை நான்தான் வைத்துக் கொள்வேன். நான் ஆசைபட்டதையெல்லாம் வாங்கிக் கொள்வேன் என்று சொல்பவளல்ல நான்.
ஆனால் குழந்தைகளுக்கு திண்பண்டம் வாங்கி வந்தால் முப்பது ரூபாயென்றால் கூட, பாதி பணம் பதினைந்து ரூபாயைக் கேட்பதும், ஒரு முழம் பூ வாங்கி விட்டு பாதி பணம் பத்து ரூபாயைக் கேட்பதும் ச்சே! எவ்வளவு அல்பத்தனம். கேவலமா இல்ல. சைக்கியாட்ரிஸ்ட்டுட்டதான் அழைச்சிட்டுப் போகணும் ஒங்கள.
என் வீட்டுலேந்து யாராவது பாக்க வந்தா பால் பாக்கெட்கூட நானேதான் வாங்கனும்கிறீங்க. ஒங்க அல்பத்தனத்துக்கு ஒரு எல்லையே இல்லையா?” கத்துவாள் பிருந்தா.
தியாகு அசைந்து கொடுக்க மாட்டான்.
கடைசியாய் இப்போது ஒருவாரம் பிருந்தா ஜுரத்தில் படுத்தபோது ப்ளட்டெஸ்ட், டாக்டர் ஃபீஸ், மருந்து மாத்திரை, ஆட்டோ சார்ஜ் என்று ரெண்டாயிரத்து எண்ணூத்தி நாற்பது ரூபாய் செலவானதாக தியாகு கணக்குக் காட்டிய போது நொந்து போனாள் பிருந்தா.
ரெண்டாயிரத்து எண்ணூறு ரூபாயை நீட்டியபோது வாங்கிக் கொண்டான்.
நாப்பது ரூவா சில்ற இல்ல; தந்துர்றேன்.
காலை அலுவலம் கிளம்பும் போது “பிருந்தா நீ நாப்பது ரூவா தரணும்”
தன்னை கன்ட்ரோல் பண்ண முடியாமல் கத்தினாள் பிருந்தா.
தலையில் அடித்துக் கொண்டாள். “என்ன மனுஷன் நீங்க. பொண்டாட்டிக்கு வைத்தியம் பாத்துட்டு அதுக்கான செலவ கேட்டு வாங்குறீங்களே கேவலமா இல்ல. கட்டுன மனைவிக்குதானே செஞ்சீங்க. அடுத்த வீட்டுக்காரிக்கா செஞ்சீங்க. பணத்த குடுத்த பின்னும் மிச்சம் நாப்பது தரணும் எப்ப குடுப்பனு கேக்காம கேக்குறீங்களே. நா இந்த வீட்டுக்கும் ஒங்க மனைவியா வந்த அன்னிலேந்து சமைக்கிறேன்; பத்துப் பாத்ரம் தேய்க்கிறேன்; வீடு கூட்றேன்; ஒங்க புள்ளைங்கள பாத்துக்கிறேன். நா என்ன வேலைக்காரியா? நீங்க சம்பளமா குடுக்குறீங்க. நா சம்பளமில் வேலைக்காரி தானே?” கத்தினாள்.
ஏன் ராத்திரி ஒங்க பொண்டாட்டியா இருக்கேனேயென்று கேட்கத் தோன்றியதை தவிர்த்தாள்.
‘ஓ! அதுக்கும் சம்பளம் வேணுமா? அப்ப அவளா நீ?’ என்று கேட்டு விடுவானோ என்று பயமாய் இருந்தது.
“சரி.. சரி.. ரொம்ப கத்தாத. இப்ப என்ன நீ வீட்டு வேல செய்யிறதுக்கு சம்பளம் வேணும். அதானே வேலைக்காரி அஞ்சாயிரம் கேப்பான்னு வெச்சுப்போம். நீ ரெண்டாயிரத்து ஐநூறு குடுக்கனும். அதுபோக மீதி ரெண்டாயிரத்து ஐநூறு நா ஒங்கிட்டத் தந்துடறேன். சில்ற கெடச்சதும் நாப்பத குடுத்துடு” என்று அதிரடியாய்ச் சொல்லிவிட்டுப் போனான்.
கணவன் கிளம்பிப் போன பிறகு அழ ஆரம்பித்தவள்தான் பிருந்தா.
சோஃபாவில் சுருண்டு கிடந்த பிருந்தாவின் மனதுக்குள் கணவனை எந்த விதத்திலாவது பழிவாங்க வேண்டுமென்ற வன்மம் வந்து ஆக்ரமித்துக் கொண்டது.
அடுத்த சிலவாரங்களில் சோர்வாய்த் தெரிந்தான் தியாகு. பசி இல்லை என்றான்.வயிற்றில் வலதுபக்கம் வலிப்பதாகச் சொன்னான். ஒடபெல்லாம் அரிப்பதாக சொல்லி சொரிந்து கொண்டே இருந்தான்.
நிஜத்தில் பயந்துபோனாள் பிருந்தா.
மருத்துவமனை.ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கப்பட்டு கல்லீரல் பிரர்ச்சனை என்றார்கள். ஆல்கஹால் பழக்கம் இல்லையேயென்று டாக்டரிடம் அழுதாள் பிருந்தா. “கல்லீரல் கெட்டுப் போச்சா?” என்று கேவினாள்.
“ஆல்கஹால்னா ஃபேட்டி லிவர்தா ஆகும். இது அப்டியில்ல. அழாதிங்க மிஸஸ் தியாகு. சரியாயிடும். வடநாட்டு நடிகர் ஒருத்தர் கால்பாகக் கல்லீரலோடு சூப்பரா வாழுறார். இப்பகூட அவர் நடிச்ச படம் வந்திருக்கு. நீங்க வேற பயந்துகிட்டு” டாக்டர் ஆறுதல் கூறினார்.
நாலுநாள் ஸ்பெஷல் வார்டில் ரூமெடுத்துத் தங்க வைக்கப்பட்டான் தியாகு. பணம் தண்ணீராய் செலவாயிற்று. அவன் சேமிப்பு முழுதும் கரைந்து போனது.
மாலை மணி ஆறு. மருத்துவமனை சிப்பந்தி ஒருவர் தியாகுவின் அறைக்குள் நுழைந்தார்.
“மிஸ்டர் தியாகு நீங்க நாளை காலை ஒன்பது மணிக்கு டிஸ்சார்ஜ் ஆகறீங்க. மீதம் எண்பதாயிரத்த ரிசப்ஷன் கவுன்ட்டர்ல கட்டிட்டு நீங்க வீட்டுக்குக் கிளம்பலாம். டாக்டர் ரவுன்ட்ஸ் வரும்போது ஒங்களப் பார்ப்பாரு” சொல்லிவிட்டுப் போனார்.
பயந்து போனான் தியாகு.
“இன்னும் எண்பதாயிரமா? ம்..சொல்லுங்க” ஃபோன் செய்யும் கணவனிடம் கேட்டாள் பிருந்தா.
“பிருந்தா!”
“சொல்லுங்க”
“நாளைக்கு காலேல ஒம்பது மணிக்கு என்னைய டிஸ்சார்ஜ் பண்றாங்களாம். எண்பதாயிரம் மிச்ச பணம் கட்டனுமாம்.”
“ஓ! அதுக்கு?”
“எங்கிட்ட பணமில்ல. எல்லாம் செலவாயிட்டு. நீதான் கட்டனும்”
“நானா?”
“ம்.. ம்…சரி கட்டுறேன் எப்ப திருப்பித் தருவீங்க?”
“என்ன யார்ட்டியோ பேசுறா மாரி பேசுற. நா ஒம் புருஷன்!” அதிகாரமாய்க் கத்தினான் தியாகு.
“நீங்க இருவது ரூவாய்க்கு ஒரு மொழம் பூ வாங்கிட்டு பத்து ரூவாய ஒடனே கேக்குறதில்ல. குடும்பத்த காக்க வேண்டிய ஆம்பள நீங்க குடும்பச் செலவுல பாதிய என்னக் கேட்டு ஒடனே குடுக்கச் சொல்லி கிட்டி போட்டுள்ள பணத்த கேப்பிங்க. போனவாரம் எனக்கு ஜொரம் வந்தப்ப ஹாஸ்பிடல்ல செலவழிச்ச பணத்த ஒடனே கேட்டு வாங்கல. நாப்பது ரூவா மீதிய டைம் குடுத்து அந்த டைத்துக்குள்ள கேட்டு வாங்கல”
“வெறும் அம்பதும் நூறுக்குமே இந்த டைம்குள்ள குடுன்னு கேக்குற. ஒங்குளுக்கு எண்பதாயிரத்த குடுத்துட்டு எப்ப குடுப்பீங்கன்னு கேட்டா தப்பா? நா ஒம் புருஷன்னு அதிகாரமா சொல்றீங்க. நா ஒங்க மனைவிதான்னு நீங்க ஒங்க பணத்த ஒடனே குடுன்னு கேக்கும்போது மறந்து போய்டுதா?”
எதிர் முனையில் சப்தமே இல்லை.
மறுநாள் காலை மணி ஒன்பது. மருத்துவமனை ரிசப்ஷன் கவுன்டரில் எண்பதாயிரத்தைக் கட்டிவிட்டு தியாகுவின் அறைக்குள் நுழைந்தாள் பிருந்தா.
மனதால் மாறிப்போய் காசை நேசிக்காத மனைவியை நேசிக்கும் கணவனாய் வீட்டுக்குக் கிளம்ப ரெடியாக கட்டிலில் அமர்ந்திருந்தான் தியாகு.
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்