வாழ்க்கை இனிதாக‌

வாழ்க்கை இனிதாக

வாழ்க்கை இனிதாக அமைய என்ன செய்ய வேண்டும் என சொல்லும் ஒரு சிறிய கதை.

நெடூர் என்ற ஊரில் முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் அவருடைய ஆசிரமத்திற்கு வருபவர்களுக்கு வாழ்க்கை நடைமுறைகளையும் இலவச மருத்துவத்தையும் போதித்து வந்தார்.

ஒருநாள் நெடூரில் வசித்த சில பேர் முனிவரைச் சந்தித்து அவரிடம் “ஐயா நாங்கள் புனித நதிகளில் நீராடினால் எங்களுடைய வாழ்க்கை இனிதாக என நினைக்கின்றோம். அதற்காக தீர்த்த யாத்திரை செல்ல இருக்கிறோம். நீங்களும் எங்களுடன் வந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினர்.

அதற்கு முனிவர் “என்னால் உங்களுடன் வர இயலாது. ஆதாலால் நீங்கள் நீராடும் புனித நதிகளில் இந்த மிளகாயையும் நீராட்டி, திரும்ப என்னிடம் சேர்த்து விடுங்கள்” என்று கூறினார்.

அவர்களும் அவ்வாறே செய்வதாகக் கூறி மிளகாயை வாங்கிச் சென்றனர். சில நாட்கள் கழித்து அவர்கள் திரும்பி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தனர்.

முனிவரிடம் அவர் கொடுத்த மிளகாயை திருப்பி கொடுத்து “ஐயா, நீங்கள் கூறியவாறே புனித நதிகளில் மிளகாயை நீராட்டி விட்டோம்” என்று கூறினர்.

முனிவரும் மிளகாயை சிறு துண்டுகளாக்கி அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் கொடுக்கச் சொன்னார்.

பின் அவர்களிடம் “புனித நதிகளில் நீராடியதால் இம்மிளகாய் இனிக்கும். நீங்கள் இப்போது அதனை உண்ணுங்கள்” என்று கூறினார். எல்லோரும் ஆர்வத்துடன் மிளகாயை வாயில் போட்டு உண்டனர்.

அம்மிளகாய் துண்டுகளும் எல்லா மிளகாயைப் போலவே காரமாகவே இருந்தது. எல்லோருடைய முகமும் மிளகாயின் காரத்தால் வெளிறியது.

கூட்டத்தில் ஒருவர் முனிவரிடம் “ஐயா, புனித நதிகளில் நீராடிய மிளகாய் இனிக்கும் என்றீர்கள். ஆனால் இது காரமாக இருக்கிறதே” என்றார்.

அதற்கு முனிவர் அவர்களிடம் “மிளகாய் புனித நதிகளில் நீராடினாலும் அதனுடைய சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே நாமும் நம்முடைய தவறான செயல்கள், தீய பழக்கங்கள், துர்குணங்களை மாற்றிக் கொள்ளமால் எத்தனை புனித நதிகளில் நீராடினாலும் எந்த பயனும் ஏற்படாது.

எத்தனை கோவிலுக்கு போனாலும், எத்தனை வழிபாடுகள் மேற்கொண்டாலும் எந்த மாற்றம் உண்டாகாது.

நம்முடைய மனங்களிலும், குணங்களிலும் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் உண்டானால்தான் வாழ்க்கை இனிதாக மாறும். ஆதலால் நல்ல நடவடிக்கைகளால் நிறைந்த மனத்துடன் இனிதான வாழ்க்கை வாழுங்கள்.” என்று அறிவுரை வழங்கினார்.