வாழ்க்கை இன்பம் நிறைந்ததா இல்லை துன்பம் நிறைந்ததா என்ற கேள்வி எல்லோரிடமும் உள்ளது.
என்ன வாழ்க்கை இது? இதில் எத்தனை மேடுபள்ளங்கள்? என்று பலர் அலுத்துக் கொள்கின்றனர்; வாழ்க்கையை வெறுத்து போனது போல் நினைக்கின்றனர்.
அவர்களுக்கு வாழ்க்கையின் தன்மை மற்றும் அது எவ்வாறு இன்பமாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
ஒருவன் காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான். அப்போது திடீரென அவனை புலி ஒன்று துரத்தத் தொடங்கியது. அவன் புலிக்குப் பயந்து ஓடத் தொடங்கினான்.
அவன் ஓடிக் கொண்டிருக்கும்போது வழியில் பாழடைந்த பெரிய கிணறு ஒன்று இருந்தது. கிணற்று அருகே வந்த போது கிணற்றுக்குள் குதித்து தப்பிக்கலாம் என்று எண்ணினான். அதனால் கிணற்றை எட்டிப் பார்த்தான்.
கிணற்றினுள் கொடிய பாம்பு ஒன்று தலையைத் தூக்கி அவனைப் பார்த்தது. பாம்பினைப் பார்த்த அதிர்ச்சியில் தவறி கிணற்றுக்குள் விழுந்தான்.
கிணற்றில் விழுந்த போது கிணற்று சுவரில் இருந்த ஆலமரத்தின் விழுதினைப் பிடித்துத் தொங்கினான்.
அப்போது எலி ஒன்று அவன் தொங்கிய விழுதை சிறிது சிறிதாகக் கடித்து விழுதினை அறுத்துக் கொண்டிருந்தது.
கிணற்றுக்குள்ளே பாம்பு, கிணற்றின் வெளியே புலி, இவற்றிடமிருந்து பாதுகாக்கும் ஆலமர விழுதோ இன்னும் சிறிது நேரத்தில் அறுந்து விடும் என்று எண்ணி அவன் வேதனையில் துடித்தான்.
அப்பொழுது அந்த மரத்திலிருந்த தேன் கூட்டிலிருந்து தேன் சொட்டு சொட்டாக அவன் வாயருகே விழுந்தது. தன் கவலைகளை எல்லாம் மறந்த அவன் நாக்கை நீட்டி தேனைச் சுவைத்து மகிழ்ந்தான்.
இதுபோலவே நம்முடைய வாழ்க்கையும். வெளியே புலி போலவும் அலுவலகத்தில் பாம்பு போலவும் வீட்டில் எலி போலவும் அன்றாடம் ஏதேனும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.
ஆனாலும் தேன் போல இன்பமான விசயங்கள் நம் வாழ்வில் அவ்வப்போது வரும்.
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை மட்டும் எண்ணாது அவ்வப்போது வரும் இனிமையான விசயங்களை ரசித்து அனுபவிக்க வேண்டும்.
இனிமையான விசங்களை கருத்தில் கொண்டு வாழ்வின் துன்பங்களை மறக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை மனநிறைவுடன் செல்லும்.
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் மேடுபள்ளமான பிரச்சினைகளை புறந்தள்ளி தேன் போன்று இனிமையான விசயங்களை மனதில் வைத்து நிம்மதியான மனதுடன் வளமான வாழ்க்கை வாழ்வோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!