வாழ்வில் இல்லாதது என்ன?

வாழ்வில் இல்லாதது என்ன?

வாழ்வில் இல்லாதது என்ன? என்ற இக்கட்டுரை மணமக்களுக்கு என்னும் நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய அறவுரைகளில் இரண்டாவது ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.

திருவள்ளுவர் ஒருநாள் ஒரு சாலையில் நடந்து செல்லும் பொழுது, ஓர் ஏழைக் குடிசையில் புகுந்தார். கூரைத் தாழ்வாராம், அதிலுள்ள பல ஓட்டைகள், கிழிந்த பாய், சில சட்டிகள் மட்டுமே இருந்தன.

அந்த ஏழை, வள்ளுவரைக் கண்டதும் வணங்கி, ‘ஐயா! என் குடிசைக்கா வந்தீர்கள்? என்னிடம் ஒன்றும் இல்லையே’ என்றான்.

வள்ளுவர் மனமகிழ்வோடு பார்த்தார். அவன் அருகிலுள்ள மனைவி நற்குண நற்செய்கைகளை உடையவளாய்க் காணப்பட்டாள்.

தன்னிடம் ஒன்றும் இல்லை என்று சொன்ன ஏழையிடம் கேட்டார். ‘அடே! உனக்கு என்னடா இல்லை’ என்று வெளியில் வந்தார்.

 

எதிர் வீட்டில் ஒரு செல்வன் ஏழு அடுக்கு மாளிகையைக் கட்டிக்கொண்டு, வள்ளுவரை என் இல்லத்திற்கு வாருங்கள் என்று எதிர் கொண்டு அழைத்தான்.

வெள்ளிக் கொப்பறை, தங்கத் தாம்பாளங்கள், பட்டுப் பீதாம்பரங்கள், முத்துக்கள், மணிகள், எளிதில் உருளும் நிலைப்பெட்டிகள், என்றும் அசையாத இரும்புப் பெட்டிகள் முதலியவைகளெல்லாம் காட்டினான்.

ஏழாவது மாடிக்கு அழைத்துச் சென்று, இங்குத் தெரிகின்ற 200 காணி நன்செய் நிலங்களும் என்னுடையவை. இரண்டு குளத்து நீரும் எனக்குச் சொந்தப் பாசனம்.

இருபது காளைகள், பத்துப் பசுக்கள், இரண்டு குதிரைகள் யாவும் இருக்கின்றன. ஒரு யானையும் நாளை வந்து விடும் “எனக்கு எல்லாம் இருக்கிறது” என்று மகிழ்ந்து கூறினான்.

வள்ளுவர் உற்றுக் கவனித்தார். அவன் அருகிலிருந்த மனைவி நற்குண நற்செய்கைகளை உடையவளாய்க் காணப்படவில்லை.

‘தனக்கு எல்லாம் இருக்கிறது’ என்று சொன்ன செல்வனிடம், “பாவிப் பாயலே உனக்கு என்னடா இருக்கிறது?” என்று கேட்டுவிட்டு, வெளியில் வந்துவிட்டார்.

 

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது?

ஒருவனுக்கு நற்குண நற்செய்கைகளையுடைய மனைவி வாய்க்கப் பெற்றுவிட்டால், அவனுக்கு என்ன இல்லாவிட்டாலும் எல்லாம் இருக்கிறது.

ஒருவனுக்கு நற்குண நற்செய்கைகளையுடைய மனைவி வாய்க்கப் பெறாவிட்டால் அவனுக்கு எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும், ஒன்றும் இல்லை.

 

வாழ்வில் இல்லாதது என்ன இல்லவள் மாண்பானால்? உள்ளது என்ன இல்லவள் மாண்பின்றி இருந்தால்?

குறளும் இதுதான்:

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை”

இக்குறளை மணமகனும் மணமகளும் தங்கள் உள்ளத்தே வைத்து, வாழ்க்கையை நடத்துவது நல்லது.

முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்

 

சகிப்புத் தன்மையின் அவசியம், வாழ்வின் ஒளி பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.