வாழ்வில் ஒளிபெற செய்ய வேண்டியவை என்ற இக்கட்டுரை மணமக்களுக்கு என்னும் நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய அறவுரைகளில் மூன்றாவது மற்றும் நான்காவது ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.
சகிப்புத்தன்மை
வீட்டுச் சண்டையிலிருந்து நாட்டுச் சண்டை வரை, கணவன் மனைவி சண்டையிலிருந்து காங்கேய நாட்டுச் சண்டைவரை அடிப்படைக் காரணம் இரண்டே இரண்டுதான்.
பிறருடைய தேவையை அறிய மறுப்பது, பிறருடைய உரிமையை ஒப்ப மறப்பது ஆகிய இந்த இரண்டுந்தான்.
எங்கே பிறருடைய உரிமையை ஒப்ப மறுக்கிறார்களோ, அங்கே உடனே தோன்றுவது சண்டைதான்.
கணவனுடைய தேவையை அறிய மறுத்தாலும். மனைவியினுடைய உரிமையை ஒப்ப மறுத்தாலும், பாகிஸ்தானின் தேவையை அறிய மறுத்தாலும், இந்தியாவின் உரிமையை ஒப்ப மறுத்தாலும், உடனே அங்கு தோன்றுவது சண்டைதான்.
அச்சண்டை ஒழிய வாழ்வில் ஒளிபெற செய்ய வேண்டியவை இரண்டுதான்.
அவை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், சகிப்புத் தன்மையுமே.
இதை மணமக்கள் இருவரும் நன்குணர்ந்து வாழ்க்கையை நடத்துவது நல்லது.
வாழ்வில் ஒளி
ஆணாகப் பிறந்தவர்களெல்லாம் ஆணல்ல; ஆண்மையை உடையவனே ஆண்.
பெண்ணாகப் பிறந்தவர்களெல்லாம் பெண்ணல்ல; பெண்மையை உடையவளே பெண்.
இத்தகைய ஆண்மையையும் பெண்மையையும், இன்றைய மணமக்கள் நிலைநிறுத்திக் காட்ட வேண்டும்.
அப்படிக்காட்டினால், அவர்கள் வாழ்வில் ஓர் ஒளி வீசுவதை அவர்களே கண்டு மகிழ்வார்கள்.
புகுந்த வீடு
பெண்ணாகப் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் பிறந்த குடிப் பெருமையை நிலைநிறுத்தியாக வேண்டும்.
இதற்காகப் பிறந்த குடிப்பெருமைகளை எல்லாம் புகுந்த வீட்டிற்போய்ப் பேசிக் கொண்டிருப்பதல்ல இதற்கு வழி.
ஒரு பெண் பேசினாள். “எங்கள் வீட்டுச் சாக்கடையெல்லாம் பாலும் நெய்யும் ஓடும்” என்று.
மற்றொரு பெண் பேசக்கேட்டேன். “எங்கள் வீட்டில் பிச்சைக்காரர்களுக்குப் போடுகிற அரிசி கூட, இந்த வீட்டில் உலையில் போடுவதில்லை” என்று. என் உள்ளம் நடுங்குகிற்று.
அப்படிப் பேசினால், அது பிறந்த குடிக்குச் சிறுமையைத் தான் தேடித் தரும்.
பிறந்த குடிப் பெருமையை நிலைநிறுத்துவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது புகுந்த குடிப்பெருமையை உயர்த்துவதன் மூலம்தான் முடியும்.
ஆகவே, இன்றைய மணமகள் புகுந்த குடிப் பெருமையை உயர்த்துவதன் மூலம், பிறந்தகுடிப் பெருமையை நிலைநிறுத்தியாக வேண்டும்.
இது பிறந்த குடிக்கும், புகுந்த குடிக்கும் பெருமை தேடியதாக முடியும், இதை மணமகள் தன் உள்ளத்தில் வைத்து வாழ்க்கையைத் தொடங்குவது நல்லது.
முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்
பெண்ணின் கடமை, ஆணின் கற்பு, தியாக வாழ்வு ஆகியவை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.