வாழ்வும் வலிமையும்

வாழ்வும் வலிமையும் என்னும் கட்டுரை டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்னும் நூலில் இடம் பெற்றது ஆகும்.

ஆனந்தமான வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குவது உடலேயாகும். அந்த உடலுக்குத் தேவை உறுதியாகும்.

உறுதியான உடலில்தான் அறிவும் ஆற்றலும் அளவில்லாமல் பெருகி நிற்கின்றன. பெருமை தருகின்றன.

ஆற்றலும் ஆண்மையும், அத்துடன் ஆராய்ந்து அறிகின்ற அறிவுக் கூர்மையும் எப்பொழுதும் கொண்டு மனிதன் விளங்குவதால் தான், மனிதனுக்கு மற்றொரு பெயர் வலிமை என்றே கூறுகின்றார்கள்.

ஆற்றல் இல்லா தேகத்தில் அழகு இல்லை. ஆண்மை இல்லை. அறிவும் இல்லை. அத்துடன் நில்லாமல் இன்னொன்றும் கூறலாம். அதாவது, அவர்கள் வாழ்வது வாழ்க்கையே இல்லை என்றும் கூறலாம்.

அவ்வாறென்றால் மனிதன் மாண்புமிகு இலட்சியம் தான் என்ன? அவனது இனிய வாழ்க்கையின் ரகசியம் தான் என்ன?

உடலை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்றுதான் அவனது இலட்சியமாகும்; இரகசிய நுட்பமாகும். அதுவுமின்றி, அவனது தலையாய கடமையே என்றே கொள்ளவும் வேண்டும்.

உடலுக்கு வலிமையைப் பெறுவது உணவால் மட்டுமன்று. உன்னதம் நிறைந்த உடற்பயிற்சியாலும்தான். இது உலகம் ஒத்துக்கொண்ட உண்மை. ஏற்றுக் கொண்டு நடக்கும் இனிய பாதை.

உற்ற துணை என்று பற்றி நடந்து, பாங்குடன் செல்ல உதவும் பண்புமிகு வழிநடைத் துணைவன் என்றே உடற்பயிற்சியை நம்பிச் செய்கின்றார்கள்; தெம்பினையும் திரண்ட தேகத்தையும் பெரிதும் பெற்றுக் கொள்கின்றார்கள்.

ஆகவே உடலுக்கு வலிமையைப் பெறுவது எப்படி என்று ஒரு வினா எழுகின்றதல்லவா! வலிமையைப் பெற விரும்பினால் வலிமையைப் பயன்படுத்திட வேண்டும்.

தேகத்தில் இருக்கின்ற வலிமையைக் கொண்டு தமக்குத் தேவையான வலிமையை உண்டாக்கி, தேக்கி வைத்துக் கொள்வது. அதாவது முதலாகப் பணம் வைத்துக்கொண்டு பணம் பண்ணுவதுபோல, முன்னது பயிற்சி விவகாரம், பின்னது முயற்சி வியாபாரம்.

பயிற்சிகளில் புத்துணர்ச்சி

ஆற்றலை அளிக்கின்ற உடற்பயிற்சிகளை மேல் நாட்டுப் பயிற்சிகள் என்றும் இந்திய நாட்டுப் பயிற்சிகள் என்றும் பிரித்துக் கூறுவார்கள் வல்லுநர்கள்.

ஆடுகளங்களில் ஆடப்படுகின்ற விளையாட்டுக்கள் எல்லாம் உடற்பயிற்சியின் வகையில் சேரா.

அவை உடலுக்குத் தெம்பையும் மனதுக்கு ஆனந்தத்தையும் மொத்தத்தில் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையையும் விளையாட்டுக்களில் பங்கேற்பவர்களுக்கு உருவாக்கவும் உரமாக்கவும் உதவுகின்றன.

ஆனால், உடற்பயிற்சிகள் உடலுறுப்புக்களையும் மனநிலையையும் பதப்படுத்தி இதப்படுத்துகின்றன. மெருகேற்றித் தரம் கூட்டுகின்றன. சோம்பலை நீக்கி சுகப்படுத்துகின்றன.

அலையும் நினைவுகளையும் அடக்கி ஒருமுகப்படுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, புத்துணர்வையும் புதுப்பொலிவையும் கூட்டி வருகின்றன. உயிரூட்டித் தருகின்றன.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்கின்ற ஒரு உண்மையானது. எல்லாவகையான உடற்பயிற்சிகளும் உடலுக்கு நலத்தையும் பலத்தையும் நீண்ட ஆயுளையும் தரவல்லவனாகவே இருக்கின்றன. மேலும் அவை நமக்கு வாழ்வும், வலிமையும் தருகின்றன.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.