விடியல் வெகு தொலைவில் இல்லை

இருட்டறை ஜன்னலின் வழியே

விடியலைத் தேடும் பெண்ணே!

ஒற்றை மின்னலின் வேகம்

கண்டு அஞ்சாதே!

கள்ளிப் பாலின் ருசி அறிந்த உன் தேகம்

காலனைக் காலில் நசுக்காதா?

செந்நெல்லையும் செரித்த உன்னுடல்

வெந்நெருப்பை உமிழாதா?

உனை இரைக்க நினைக்கும்

மதயானைத் தோல் உரித்து

உந்தன் கால் உறையாக்க மாட்டாயா?

சேயைக் காக்க சாவின் விழிம்பைக்

கண்ட உன் உயிர் – காம

நாயைக் கண்டு நடுங்குவதா?

மனிதமே உன் கொடை என மறந்து

மனிதனைக் கண்டு மிரளுவதா?

இனியும் ஐயம் வேண்டாம்

இரும்பு நெஞ்சில் பயம் வேண்டாம்

மெல்ல நடை இனி வேண்டாம்

மலர்பாதம் என்ற வஞ்சகனார் வரி வேண்டாம்

வன்மைத் தழைத்தோங்கி

உண்மையைக் கொன்று

பெண்மையை வெல்லும் காலம் இது

நீதி தேவதை போல் கண்கட்டு உனக்கெதற்கு?

பூவினம் என வேறினப்படுத்திய உன்னை

என்னினம் என இம்மண்ணினம் வியக்க வா!

சிற்றினம் என சிறுமைப்படுத்திய உன்னை

பெண்ணினம் என அப்பேதையார் போற்ற வா!

வெறும் சன்னலின் வழி ஒளியைக் கண்டால்

சரித்திரம் உன்னைப் பேசாது!

சாதனை வரிகளில் நீ தொலைந்திருந்தால்

வரும் சந்ததி உன்னைப் போற்றாது!

கட்டவிழ்த்த காளைகளின்

மணிக்கட்டை நீ உடைத்து

ஆட்டி வைத்த அரக்கர் இன

ஆளுமையை நீ பறித்து

பூட்டி வைத்த பூவுலகம்

உன் மணிமகுடம் ஆகும்படி

உன் பாதச்சுவடுகளை

ஏட்டில் பொறிக்கும்படி பதித்து வா!

இம்மண்மீது

விடியல் வெகுதொலைவில் இல்லை!

சி.பபினா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.