விடுகதைகள் – விடைகள் – பகுதி 6

1.மூன்று கோடுள்ளவன்; அழகு வாலுள்ளவன்; பழத்துக்கு மட்டும் எதிரி. அவன் யார்?

அணில்

 

2. கல்லை சுமந்தவன்; கறிக்கு ருசியானவன். அவன் யார்?

புடலங்காய்

 

3. அள்ளலாம்; கிள்ள முடியாது. அது என்ன?

தண்ணீர்

 

4. உடல் இல்லாதவன் ஊரெல்லாம் திரிவான். அவன் யார்?

புகை

 

5. உலகத்துக்கெல்லாம் ஒரே துப்பட்டி. அது என்ன?

வானம்

 

6. என்னைப் பார்த்தால் உன்னை காட்டுவேன். நான் யார்?

கண்ணாடி

 

7. ஆத்தாள் சடைச்சி; அப்பன் சொறியன்; நானோ சர்க்கரைக் குட்டி. நான் யார்?

பலாப்பழம்

 

8. இரவல் கிடைக்காதது, இரவில் கிடைப்பது. அது என்ன?

தூக்கம்

 

9. உலகமெங்கும் படுக்கை விரித்து, உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

கடல்

 

10. ஊளையிடும்; ஊரைச் சுமக்கும். அது என்ன?

புகை வண்டி

 

11. எங்க வீட்டுக் கிணத்திலே, வெள்ளிக் கிண்ணம் மிதக்குது. அது என்ன?

நிலவு

 

12. ஒரு சாண் குச்சிக்குள்ளே, ஒளிந்திருக்கான் கறுப்பு மனிதன். அவன் யார்?

பென்சில்

 

13. ஒளி தந்த உத்தமன், உருக்குலைவான் அதனாலே. அவன் யார்?

மெழுகுவர்த்தி

 

14. ஒற்றைக் காலில் ஆடுவான்; ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?

பம்பரம்

 

15. ஓடியாடிக் கத்தும்; உடலைத் தேடிக் குத்தும். அது என்ன?

கொசு

 

16. கண் உண்டு, பார்க்காது; கால் உண்டு, நடக்காது. அது என்ன?

கட்டில்

 

17. கண்டு பூப் பூக்கும், காணாமல் காய் காய்க்கும். அது என்ன?

வேர்க்கடலை

 

18. கண்ணால் பார்க்கலாம்; கையால் பிடிக்க முடியாது. அது என்ன?

நிழல்

 

19. கண் இல்லாத நான், குருடருக்கு வழி காட்டுகிறேன். நான் யார்?

கைத்தடி

 

20. கண்ணுக்குத் தெரியாதவன்; கண்ணை மறைப்பான். அவன் யார்?

கண் இமை

 

21. கல்லிலே காய்க்கும் பூ; தண்ணீரில் மலரும் பூ. அது என்ன?

சுண்ணாம்பு

 

22. காய் காய்க்கும்; பழம் பழுக்காத மரம்.  அது என்ன?

முருங்கை மரம்

 

23. காலை மாலை நெட்டை; மற்ற நேரம் குட்டை. அது என்ன?

நிழல்

 

24. காற்றைக் குடித்து, கைகளில் தவழும். அது என்ன?

பலூன்

 

25. கிளை உண்டு, இலை இல்லை – அது என்ன?

மான் கொம்பு

 

One Reply to “விடுகதைகள் – விடைகள் – பகுதி 6”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.