விடை குறும்படம் வேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடூர முகம் எவ்வாறு தாண்டவம் ஆடும்? என்பதை விளக்குகிறது.
அது கை கால்கள் வெட்டப்பட்டு நிர்க்கதியாய், எதை நோக்கிய பாதையிலோ, நீண்ட வலியுடன் செல்லும் நிலையை உடையது.
வேலை இல்லாது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையிலுள்ள ஒருவனின் அல்லது ஒருத்தியின் நிலையே குறும்படத்தின் ஆழமான கதை ஆகும்.
குறும்படத்தின் கதை
ஓய்வூதியப் பணத்தில் அப்பா. அம்மா இல்லை. தனியார் நிறுவனத்தில் குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் தங்கை. இவர்களுடன் பொறியியல் படிப்பை முடித்து வேலை தேடும் கதாநாயகன். இதுதான் குடும்பம்.
வருமானம் குறைவு என்பதால் ’ஓவர் டைம்’ வேலைக்காகச் செல்லும் தங்கை, தாய் இடத்திலிருந்து சமைத்துப் பிற வேலைகளையும் பார்த்துக் குடும்பத்தை நகர்த்துகிறார்.
வேலை, வேலை என்று தேடித் தேடி அலைகிறான் கதாநாயகன். அவன் காதலி பணக்கார மாப்பிள்ளை கிடைத்தவுடன் இவனைக் கழற்றி விடுகிறாள்.
அந்த வெறுப்பும், வேலை கிடைக்காத வெறுப்பும் ஒன்று சேர, நண்பனிடம் கொட்டித் தீர்க்கின்றான் தன் கோபத்தை. ’இறந்து விடலாம்’ என்று கூடஇருக்கிறது என்கிறான்.
இவனின் மனதை மாற்றுவதற்காக ஒரு யோசனையைக் கூறுகிறான் நண்பன். அதன்படி, பணமும் கொடுத்து விலைமாது உள்ள லாட்ஜில் இறக்கி விடுகின்றான். கதாநாயகனும் அந்த லாட்ஜின் உள்ளே செல்லுகின்றான்.
அறையில் விலைமாதிற்காகக் காத்திருக்கும் பொழுது, விலைமாதாகத் தங்கையே உள்ளே நுழைகிறாள். இருவரும் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது அலறித் துடிக்கின்றனர். குறும்படம் முடிகிறது.
படத்தில் மூவரின் வலிகள்
வயதான தந்தையின் வலி
இயலாமை, மருத்துவச் செலவிற்குக் கூட பணம் போதாமல், ஓய்வூதியப் பணம் கொண்டுத் தன் மற்ற செலவினங்களுக்குத் தன் மகனைத் தேடவேண்டிய நிலை. வீட்டிற்கு எந்த விதத்திலும் பயனாக இல்லையே என்கிற வருத்தம். இவையெல்லாம் இந்தக் கதாபாத்திரத்தின் வலிகளாகக் காட்டப்படுகின்றன.
கதாநாயகனின் வலி
தங்கை சம்பாத்தியத்தில் சாப்பிட்டுக் கொண்டு, வேலை கிடைக்காமல் காதலியும் வேறு கைவிட்டதால் சோகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது கதாநாயகனின் வலி. இன்றைய இளைஞர்களின் அடையாளமான வலியாகக் காட்டப்பட்டுள்ளது.
தங்கையின் வலி
வீட்டின் சூழ்நிலையை அறிந்து குடும்பத்தை நகர்த்த வேண்டுமே என்பதற்காக, ’ஓவர் டைம்’ எனும் போர்வையில் விபச்சாரத்திற்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை. கொடுமையான வலியின் உச்சத்தில் இக்கதாபாத்திரத்தை இயக்குனர் தடுமாற விட்டுள்ளார்.
இப்படி மூன்று பேர்களின் வலிகள்; சமூகத்தில், பெரும் பகுதி மக்கள் இவற்றை அனுபவிக்கின்றனர் என்பதைப் படத்திலுள்ள ஒட்டுமொத்த வசனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.
இசையும் படத்தொகுப்பும் மிக அற்புதமாக அமைந்துள்ளன. உணர்வுகளின் வெளிப்பாட்டை இசையமைப்பாளர் நிஷாந்த் ஸ்ரீதர் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார். நீரோடை போல் கதை நகர்தலைப் படத்தொகுப்பு சிறப்பாகச் செய்திருக்கிறது.
வசனங்கள், சில இடங்களில் அனல் பறக்கிறது. சமூகத்தைச் சாடுவதற்கு வார்த்தைகளில் நெருப்புக் கட்டாயம் தேவைதான்.
மூன்று விருதுகளை இப்படம் பெற்றிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சில இடங்களில் தன் முழுத் திறமையையும் காட்டியுள்ளார். உதாரணமாக, லாட்ஜ் அறையில் சிவப்பு வெளிச்சம் முழுவதுமாக வியாபித்திருப்பது, இருட்டிலிருந்து அந்தப் பெண் வருவது மற்றும் ஆட்டோ பயணத்தில் ஒளி வெள்ளம் போன்றவற்றைக் கூறலாம்.
இயக்குனர் கதையின் வலியை அப்படியே பார்வையாளனுக்குக் கடத்தி இருக்கிறார். நெடு நேரம் ஆகிறது அந்த வலியில் இருந்து வெளியே நாம் வருவதற்கு.
இயக்குனரின் முதல் படம், அவரின் திறமையை மிக அற்புதமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.
நாட்டின் இன்றைய சூழ்நிலையைக் கவனித்துப் பார்த்தால், இக்குறும்படம் போல் ஆயிரம் ஆயிரம் கதைகள் சமூகத்தில் இருந்து வெளிப்படும்.
இன்றைய பள்ளிகள், கல்லூரிகள் வாழ்க்கைக் கல்வியைப் போதிக்கத் தவறுகின்றன. ஏட்டுச் சுரைக்காய் கல்வியாகவே மாணவனை நிர்மூலமாக்கிச் சுயமான சிந்தனை இல்லாது, உலகில் உலாவ விடுகின்றனர்.
இக்குறும்படம் கல்வி கற்று, வெளியே வருகிறவர்களிடம் ஏன் மாற்றுச் சிந்தனையை வழங்கி இருக்கக் கூடாது?
கதையில் இயக்குனர் புரட்சியாக ஏதாவது ஒரு கருத்தைப் புகுத்தி இருந்தால் இளைய சமூகம் திருந்தி இருப்பார்களே? என்றெல்லாம் இக்குறும்படம் பற்றிக் கேள்வி கேட்கலாம்.
சமூகத்தில் நடப்பதை அப்படியே ’எதார்த்தவியல் கோட்பாடு’ (Realistic theory) என்பார்களே, அதை அப்படியே கூறிப் படம் பார்ப்பவர்களைத் திருந்தச் செய்தால் என்ன தவறு?
அப்படித்தான் எடுக்கப்பட்டுள்ளது இக்குறும்படம். ஒரு குடும்பச் சூழலின் வலி, வேதனை, துன்பம் இவற்றைக் கொஞ்சம் கூடக் கூட்டிக் குறைக்காமல் படம் பிடித்துக் காட்டுவது, ’எதார்த்தவியல் கோட்பாடு’எனும் நவீனக் கோட்பாட்டின் முக்கிய வெளிப்பாடு தானே இது?
சாகித்ய எழுத்தாளரான, எழுத்தாளர் இமையம் அவர்கள் எழுதிய ’செல்லாப் பணம்’ புதினம் இவ்வகைக் கோட்பாட்டில் எழுதப்பட்டது தான். அப்புதினத்துடன் இக்குறும்படத்தை இணைத்துப் பார்க்கின்றோம். இரண்டும் சமூகச் சீரழிவையே படம் பிடித்திருக்கின்றன.
மொத்ததில், அரசாங்கத்தை நோக்கி ஈட்டியைப் பாய்ச்சியிருக்கிறது விடை குறும்படம்.
படக்குழு
இயக்குனர் – தேஜோ பரத்வாஜ்
நடிப்பு – பிரேம் ஷ்யாம், செளம்யா ஷெர்லீன், அஷ்ரித் ஈஷ்வர்
உரையாடல்கள் – கவுதம் ரமேஷ்
கலை இயக்குனர் – ஹரிஷ் ஆர்வி
இசை – நிஷாந்த் ஸ்ரீதர்
இயக்குநர் குழு – லெனின் ஸ்ரீகாந்த், ஆதேஷ்
உதவி ஒளிப்பதிவாளர் – சப்யசாச்சி
விமர்சகரின் விமர்சனம் ஒன்று
”கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, எல்லாம் சரியாக உள்ளது. நான் கண்ட சிறந்த குறும்படங்களில் இதுவும் ஒன்று. முற்றிலும் எதிர்பாராத ஒன்றில் கதை விரிகிறது. இது ஒரு சிந்தனையைத் தூண்டும் படம். இது அழகாக தயாரிக்கப்பட்டுள்ளது; அனைவரும் பார்க்க வேண்டிய படம்.” என்று S Bodhi கூறுகிறார்.
விடை குறும்படம் பாருங்கள்
(குறும்படம் விரியும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@admin
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!