விட்டமின் இ நிறைந்த வாழைப்பூ

சமைக்கப் பயன்படும் பூ எது தெரியுமா? அதுதான் வாழைப்பூ.

வாழைப்பூ தனிப்பட்ட துவர்ப்பு சுவை மற்றும் மணத்தினைக் கொண்டிருக்கிறது. இந்த துவர்ப்பு சுவையே இப்பூ மருந்தாகவும் அமையக் காரணமாகிறது.

வாழை மரத்திலிருந்து வாழைப்பூ பெறப்படுகிறது. வாழை மரத்தின் இலைகள், தண்டுகள், பூக்கள், காய்கள், பழங்கள், நார்கள் என அனைத்துப் பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே தான் வாழை மரமானது நம் நாட்டில் வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது.

 

வாழைப்பூவின் அமைப்பு

வாழைப்பூவானது வாழை மரத்தின் நுனியில் மையத் தண்டுப் பகுதியில் காணப்படுகிறது. இப்பூவானது வெளிப்புறத்தில் அடர் சிவப்பு நிறத்தில் மடல்களைக் கொண்டிருக்கும்.

இந்த மடல்கள் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்டிருப்பதால் இப்பூவிற்கு கூம்பு போன்ற அமைப்பினைத் தருகின்றன.

ஒவ்வொரு மடல் பகுதிக்குள்ளும் வாழைப்பூக்கள் சீப்பினை ஒத்த வடிவில் கொத்தாக காணப்படுகின்றன.

 

 

ஒவ்வொரு மலரும் தடிமனான மூடி போன்ற வெள்ளை நிறப் பகுதியைக் கொண்டுள்ளது. அதனுள் வெளிர் மஞ்சள் நிற மென்மையான மூன்று இதழ்களும் கடினமான வெள்ளை நிற கள்ளானும் காணப்படுகின்றன. இப்பூவிலிருந்தே வாழைக்காய் உண்டாகிறது.

 

 

 

 

 

வாழையானது வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில் காணப்படுகிறது. வாழை வளருவதற்கு நல்ல வளமான மண் மற்றும் போதுமான நீரும் தேவை.

வாழை மியுசா என்ற பேரினத்தைச் சார்ந்தது. இதன் தாயகம் தென்கிழக்கு ஆசியாவாகும்.

 

வாழைப்பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

வாழைப்பூவில் விட்டமின் ஏ,சி, இ போன்றவை காணப்படுகின்றன. தாதுஉப்புகளான பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்றை இப்பூவில் உள்ளன. மேலும் இதில் புரதச்சத்து, நார்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவையும் காணப்படுகின்றன.

 

வாழைப்பூவின் மருத்துவப் பண்புகள்

தொற்றுநோயைக் குணப்படுத்துதல்

இயற்கை வழியில் தொற்றுநோயை குணப்படுத்த விரும்புபவர்கள் வாழைப்பூவினைத் தேர்வு செய்யுங்கள். ஏனெனில் வாழைப்பூ சாற்றில் உள்ள எத்தனால் தொற்றுநோய் ஏற்படாமல் தடைசெய்கிறது.மேலும் காயங்களையும் தொற்றுநோய் தாக்கத்தலிருந்து வாழைப்பூ பாதுகாத்து விரைந்து குணப்படுத்துகிறது.

வாழைப்பூ சாறானது மலேரியாவை உண்டாக்கும் கிருமிகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆக்ஸினேற்றதால் உடலில் ஏற்படும் விளைவுகளைக் குறைத்தல்
நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளை வாழைப்பூவில் உள்ள டானின், ஃப்ளவனாய்டுகள், ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆகியவை கட்டுப்படுத்துகின்றன.

இதனால் புற்றுநோய் உண்டாதல், விரைவாக உண்டாகும் சருமச்சுருக்கம் போன்றவை தடை செய்யப்படுகின்றன. எனவே வாழைப்பூவினை உணவில் சேர்த்து பலன் பெறலாம்.

 

உற்சாக மனநிலையைப் பெற

வாழைப்பூவில் உள்ள அதிகளவு மெக்னீசியம் மனப்பதட்டத்தைக் குறைத்து மனஉற்சாகத்தை உண்டாக்குகிறது. எனவே வாழைப்பூவானது பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத இயற்கை எதிர்ப்பு மனதளர்ச்சி காரணி என்றழைக்கப்படுகிறது.

வாழைப்பூவினை உணவில் சேர்த்து உற்சாகமான மனநிலையைப் பெறலாம்.

 

அனீமியா குறைபாட்டினை நீக்க

இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டினால் அனீமியா நோய் ஏற்படுகிறது. வாழைப்பூவானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

இதனால் ஊட்டச்சத்துக்கள் உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு உடல்உறுப்புகள் சீரா இயங்குகின்றன. மேலும் அனீயா குறைபாடும் களைப்படுகிறது. எனவே வாழைப்பூவினை உட்கொண்டு ஆரோக்கியமான உடல்நிலையைப் பெறலாம்.

 

ஆரோக்கியமான உடல் இழப்பிற்கு

வாழைப்பூவானது குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது. மேலும் இதில் நார்ச்சத்துகள் காணப்படுவதால் இதனை உண்ணும்போது நீண்ட நேரத்திற்கு பசிப்பதில்லை.

மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துகளின் காரணமாக ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. எனவே ஆரோக்கியமான உடல் எடை குறைக்க விரும்புவர்கள் வாழைப்பூவினை உண்ணலாம்.

 

நல்ல செரிமானம் மற்றும் மலச்சிக்கல் தீர

வாழைப்பூவில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துகள் உள்ளன. கரையும் நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்து ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சு கொள்ள துணை புரிகிறது.

கரையாத நார்ச்சத்து குடலில் உள்ள செரிமானமாகாத நச்சுப்பொருட்களை ஒன்று திரட்டி கழிவாக வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல், மூல நோய் ஆகியவற்றிற்கு இப்பூ தீர்வாகிறது.

 

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயானது இன்சுலின் சுரப்பு குறைவு அல்லது உறிஞ்சு திறன் குறைபாட்டினால் ஏற்படுகிறது. வாழைப்பூவில் உள்ள பீனாலிக் சேர்மங்கள் இன்சுலின் உறிஞ்சு திறனை அதிகரிக்கிறது.

எனவே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் இதனை உண்டு இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தலாம்.

 

பெண்களுக்கு

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை வாழைப்பூ சரிசெய்வதோடு அதிக உதிரப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால்சுரப்பினை அதிகரிக்கச் செய்வதோடு நல்ல செரிமானத்தையும் ஏற்படுத்துகிறது.

பெண்களின் பல்வேறு உடல்உபாதைகளுக்கு இப்பூ தீர்வாக அமைகிறது.

 

வாழைப்பூவினை தேர்வு செய்யும் முறை

வாழைப்பூவினை தேர்வு செய்யும்போது புதிதாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். வாழைப்பூவின் மேற்தோல் ஒரே சீரான நிறத்துடன் மடல்கள் இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேற்தோலில் வெட்டுக்காயங்கள் ஏதுமின்றி மென்மையாக இருக்க வேண்டும். பூவின் காம்புப் பகுதி உறுதியாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும்.

வாழைப்பூவினை வாங்கி ஓரிரு நாட்களில் பயன்படுத்த வேண்டும். குளிர்பதகப் பெட்டியில் மூன்று நாட்கள் கவரில் சுற்றி வைத்துப் பயன்படுத்தலாம்.

வாழைப்பூவானது எளிதில் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து நிறம் மாறுவதால் இதனை மோரில் அல்லது உப்பு தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

 

வாழைப்பூவினை சுத்தம் செய்யும் முறை

வாழைப்பூவினை வெளிப்புற மடல்களை நீக்கிவிட்டு வேண்டும். இப்பூவின் உட்புறம் உள்ள மலரின் தடித்த தோல் பகுதிகள், கள்ளான் பகுதிகளை நீக்கிவிட்டு வெளிர் மஞ்சள் நிற இதழ்களை பயன்படுத்த வேண்டும்.

பூவின் உட்புறத்தில் உள்ள மென்மையானவற்றை முழுவதுமாக பயன்படுத்தலாம்.

வாழைப்பூவானது குழம்பு, பொரியல், சாலட், ஊறுகாய், சட்னி, சூப் தயார் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ குணம் நிறைந்த துவர்ப்பு சுவை மிக்க பொட்டாசியம், விட்டமின் இ அதிகம் உள்ள வாழைப்பூவினை உணவில் கொண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.