விட்டமின் என்னும் உயிர்மூலம் நமது உடலின் இயல்பான வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு குறைந்த அளவு தேவைப்படும் இன்றியமையாத கரிமப்பொருள் ஆகும்.
விட்டமின்கள் பெரும்பாலும் நாம் உண்ணும் உணவிலேயே இருக்கின்றது. ஆதலால்தான் நம்மை சரிவிகித உணவினை எப்போதும் எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
மனிதர்களில் விட்டமின்களின் அளவு கூடினாலும், குறைந்தாலும் நோய்கள் உருவாகின்றன. சிலநேரங்களில் உயிரிழப்பும் நிகழ்கிறது. எனவேதான் விட்டமின்கள் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டியவை.
ஒவ்வொரு விட்டமினும் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு உடல் செயல்பாட்டிற்காக நமக்கு அவசியமாகிறது.
மனித உடலானது பொதுவாக விட்டமின்களை உற்பத்தி செய்வதில்லை.
ஆனால் நம்உடலால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களில் உள்ள சத்துகளை விட்டமின்களாக மாற்ற இயலும். எடுத்துக்காட்டாக ஏ-விட்டமினை பீட்டா கரோடீனிலிருந்தும், சூரியனின் புறஊதாக்கதிர்களிடமிருந்து டி-விட்டமினையும் நம்உடலால் தயார் செய்ய இயலும்.
நாயானது சி-விட்டமினை தனது உடலில் இருந்து தயார் செய்து கொள்ளும்.
தற்போது வரை மொத்தம் 13 விட்டமின்கள் நமது உடலுக்கு அவசியமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அவை ஏ, பி1, பி2, பி3, பி5, பி6, பி7, பி9, பி12, சி, டி, இ, கே ஆகும்.
இந்த 13 விட்டமின்களை கொழுப்பில் கரைபவை, நீரில் கரைபவை என இருவகைகளாகப் பிரிக்கலாம்.
கொழுப்பில் கரையும் விட்டமின்கள்
ஏ, இ, டி, கே ஆகியவை கொழுப்பில் கரையும் விட்டமின்கள் ஆகும்.நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பில் கரையும் விட்டமின்கள் நமது உடலில் உள்ள சிறுகுடல் மூலம் உறிஞ்சப்பட்டு செல்களிலும், கல்லீரலிலும் சேமித்து வைக்கப்படுகின்றன.
இவ்வாறு சேமிக்கப்படும் இவ்வகை விட்டமின்கள் அளவுக்கு அதிகமாகும்போது நோய்களை உண்டாக்குகின்றன. இவ்வகை விட்டமின்களை முழுமையாக கரைத்து அவற்றின் பலன்களை பெற நாம் தேவையான கொழுப்பினை நம்உடலில் கொண்டிருக்க வேண்டும்.
நீரில் கரையும் விட்டமின்கள்
பி1, பி2, பி3, பி5, பி6, பி7, பி9, பி12, சி ஆகியவை நீரில் கரையும் விட்டமின்கள் ஆகும். இவ்வகை விட்டமின்கள் பொதுவாக உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லை. இவை அவ்வப்போது உடலின் கழிவுப் பொருளான சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது.
எனவே இவ்வகை விட்டமின்கள் நிறைந்த உணவினை நாம் அடிக்கடி சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வகையில் பி12 மட்டும் உடலில் சேகரித்து வைக்கப்படுகிறது.
விட்டமினின் வரலாறு
விட்டமின் என்ற சொல்லானது 1911-ல் போலாந்து நாட்டைச் சார்ந்த உயிர்வேதியலாளர் கசிமிர்சு ஃபங்க் என்பவரால் பயன்படுத்தப்பட்டது.
அவர் லண்டனில் உள்ள லிஸ்டர் நிறுவனத்தில் ஆராய்ச்சி செய்தபோது ஒரு குறிப்பிட்ட பொருளை கோழிக்குஞ்சிகளின் உணவில் தொடர்ந்து கொடுத்தபோது அது நரம்புகளில் வீக்கத்தினைக் குறைக்கச் செய்வதைக் கண்டறிந்தார்.
அந்த குறிப்பிட்ட பொருளுக்கு விட்டமின் (Vitamine) எனப் பெயரிட்டார். பின்னர் e அகற்றப்பட்டு Vitamin என்று வழங்கப்படலாயிற்று.
அதன் பின்னர் விட்டமின்களுக்கு ஆங்கில அகரவரிசையில் பெயர் வைக்கும்முறை வழக்கத்திற்கு வந்தது.
விட்டமின் ஏ
இது விழித்திரைக்கு தேவைப்படும் அவசியமான உயிர்ச்சத்து. இது ரெட்டினோல், ரெட்டினல், நான்கு வகை கரோடினாய்டுகள் என வேதியியலில் அழைக்கப்படுகின்றது.
இது பால் மற்றும் பால்பொருட்கள், ஆரஞ்சு, மஞ்சள்நிறப் பழங்கள், கீரைகள், காரட், பூசணி, மீன், குடைமிளகாய், முட்டை, முட்டைக்கோஸ், ஈரல் போன்றவற்றில் உள்ளது.
ஏ-விட்டமினின் குறைபாட்டால் மாலைக்கண் நோய், உலர்கண் நோய் உள்ளிட்ட கண் நோய்கள், சருமநோய்கள் ஏற்படும்.
இது கொழுப்பில் கரையக்கூடிய விட்டமினாகையால் இதன் அளவு உடலில் அதிகரிக்கும்போது எலும்புகள், சருமம், கண், ஈரல், இரத்தம் ஆகியவற்றில் நோய்கள் பரவுகின்றன. மேலும் பிறப்புக் குறைபாடும் உண்டாகும்.
ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவு 0.7 மில்லிகிராம் ஆகும்.
அதிகளவாக 3 மில்லிகிராம் வரை இதனை எடுத்துக் கொள்ளலாம்.
விட்டமின் பி1
இது வேதியியலில் தயமின் என்றழைக்கப்படுகிறது. மிகவும் அவசியமான ஒன்று. உடலின் வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற இது அவசியம்.
இது தானிய வகைகள், அவரை வகைகள், பன்றி இறைச்சி, உருளைக்கிழங்கு, ஈரல், முட்டை, காளான்கள் ஆகியவற்றில் காணப்படுகிறது.
இதன் குறைபாட்டால் பெரிபெரி என்ற நரம்புசம்பந்தமான நோய் தோன்றும். இதனை சரிசெய்யவிடில் உயிர் இழப்பை ஏற்படுத்தும். மூளை, நரம்பு மண்டலம், இதய சம்பந்தமான நோய்களை ஏற்படும்.
இந்த விட்டமினின் அளவு அதிகமாகும்போது அதிகளவு தூக்கம், தசைதளர்வு ஏற்படும்.
ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவு 1-1.1 மில்லிகிராம்.
விட்டமின் பி2
இதனுடைய வேதியியல் பெயர் ரிபோஃப்ளோவின் என்பதாகும். உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு அவசியமானது.
இது பால் மற்றும் பால்பொருட்கள், வாழைப்பழம், பச்சை காய்கறிகள், ஈரல், சிறுநீரகம், பயிறு வகைகள், தக்காளி, காளான்கள், பாதாம் பருப்பு ஆகியவற்றில் இது காணப்படுகிறது.
இதனுடைய குறைபாட்டினால் வாய்புண், நாக்குஅழற்சி, சருமநோய்கள் ஏற்படும்.
ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவு 1.1 மில்லிகிராம்.
விட்டமின் பி3
இதனுடைய வேதியியல் பெயர் நியாசின் ஆகும்.
இது கொட்டைகள், காளான்கள், இறைச்சி, தானியங்கள், முட்டை, பால், பயிறு வகைள், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படுகிறது.
இதனுடைய குறைபாட்டால் பெல்லகரா, தோல் வறட்சி, வயிற்றுப்போக்கு, டிமென்சியா போன்றவை ஏற்படும்.
இதனை அதிகமாக மருந்தாக உட்கொண்டால் கல்லீரல் சிதைவு ஏற்படும்.
ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவு 14 மில்லிகிராம் ஆகும்.
விட்டமின் பி5
இதனுடைய வேதியியல் பெயர் பான்டாதெனிக் அமிலம் ஆகும். புரதங்கள், மாவுப்பொருட்கள் மற்றும் கொழுப்பினைத் தொகுக்கவும், வளர்ச்சிதை மாற்றம் செய்யவும் இது அவசியமானதாகும்.
இது தானியங்கள், பயிறுவகைகள், முட்டை, இறைச்சி, தேன், தயிர், பிரேக்கோலி, அவகோடா, காளான்கள், ஈரல், ஸ்டாபெர்ரி ஆகியவற்றில் உள்ளது.
இதன் குறைபாட்டால் பாரஸ்தீஸ்சியா என்ற சருமநோய் ஏற்படும்.
இதனை அதிகமாக உட்கொண்டால் நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும்.
ஒரு நாளை தேவைப்படும் அளவு 5 மில்லிகிராம் ஆகும்.
விட்டமின் பி6
இதனுடைய வேதியியல் பெயர் பைரிடாக்ஸின் ஆகும். அமினோ அமிலம், குளுக்கோஸ், கொழுப்பு ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு இது அவசியமானது.
இது முழுதானியங்கள், பச்சை காய்கறிகள், பயிறு வகைகள், வாழைப்பழம், தக்காளி, வால்நட், இறைச்சி, மீன் ஆகியவற்றில் உள்ளது.
இதனுடைய குறைபாட்டால் அனீமியா எனப்படும் இரத்த சோகை, நரம்பு நோய், தூக்கமின்மை, குழப்பம், மனச்சோர்வு ஆகியவை ஏற்படும்.
இதனை அதிகமாக உட்கொண்டால் நரம்பு கோளாறுகளை ஏற்படுத்தும்.
ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவு 1.3-1.7 மில்லிகிராம் ஆகும்.
விட்டமின் பி7
இதனுடைய வேதியியல் பெயர் பயோடின் ஆகும். கொழுப்பு அமிலங்கள் மற்றும் லியூசின் வளர்ச்சிதை மாற்றத்தில் இது இணை நொதியாகச் செயல்படுகிறது. குளுக்கோஸின் புத்தாக்கத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
இது பச்சை முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், சிலகாய்கறிகள், வேர்க்கடலை ஆகியவற்றில் இது உள்ளது.
இதன் குறைபாட்டால் வழிவெண்படல அழற்சி நோய், முடி கொட்டுதல், கண்கள், மூக்கு, வாய் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளைச் சுற்றிலும் செதில் போன்ற சிவப்புதன்மையுடைய சரும அழற்சி ஆகியவை ஆகும்.
ஒரு நாளைக்கு உட்கொள்ளும் அளவு 0.03 மில்லிகிராம் ஆகும்.
விட்டமின் பி9
இதனுடைய அறிவியல் பெயர் ஃபோலேட் என்பதாகும். இது செல் பிரிதலுக்கும், டிஎன்ஏ, ஆர்என்ஏ உற்பத்திக்கும், அமினோ அமிலங்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் அவசியமானது.
பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் ஆரம்பநிலையில் இது அவசியமானது.
இது பழங்கள், காய்கறிகள், ஈரல் ஆகியவற்றில் உள்ளது.
இதனுடைய குறைபாட்டால் பிறவிக்குறைபாடுகள், அனீமியா உண்டாகும்.
ஒரு நாளைக்கு உட்கொள்ளும் அளவு 0.2 மில்லிகிராம்
விட்டமின் பி12
இதனுடைய வேதியியல் பெயர் சையனோ கோபாலமைன். இது மூளை மற்றும் நரம்பு செயல்பாட்டிலும், இரத்த உருவாக்கத்திலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
இது பொதுவாக விலங்குகளிடமிருந்து பெறப்படுகிறது. இறைச்சி, ஈரல், நட்சத்திரமீன், பால் மற்றும் பால்பொருட்கள், முட்டை ஆகியவற்றில் காணப்படுகிறது.
இதனுடைய குறைபாட்டினால் கடுமையான பாதிப்புகளை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படலாம். மனச்சோர்வு, அயற்சி, ஞாபகமறதி, தற்கொலை எண்ணங்கள் போன்றவையும் இதன் குறைபாடால் ஏற்படலாம்.
ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவு 0.0024 மில்லிகிராம் ஆகும்.
விட்டமின் சி
இதனுடைய வேதியியல் பெயர் அஸ்கார்பிக் அமிலம் ஆகும். இது உடலின் சீரான வளர்ச்சிதை மாற்றத்திற்கு அவசியமானது.
இது பழங்கள், காய்கறிகள், ஈரல், முளைகட்டிய தானியங்கள் ஆகியவற்றில் இருக்கிறது.
இதனுடைய குறைபாட்டால் ஸ்கர்வி என்னும் ஈறுகளில் ஏற்படும் இரத்தகசிவு, பற்சிதைவு, சருமம் மற்றும் கேச வறட்சி, இணைப்பு திசுக்களில் வலி, அனீமியா ஆகியவை ஏற்படும்.
இதனை அதிகமாக உட்கொண்டால் சிறுநீரகக்கற்கள், பற்களில் எனாமல் இல்லாமல் போதல் ஆகியவை உண்டாகும்.
ஒரு நாளைக்கான தேவை 90 மில்லிகிராம் ஆகும்.
விட்டமின் டி
இதனுடைய வேதியியல் பெயர் ஏர்கோகல்சிபெரோல் என்பதாகும். இது கால்சியம், மெக்னீசியம், பாஸ்பேட் உள்ளிட்டவைகளை குடல் உட்கிரகிக்க அவசியமானது.
இது சூரிய ஒளிக்கதிர், காளான், சாலமன் மீன் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த மீன்கள், முட்டை ஆகியவற்றில் காணப்படுகிறது.
இதனுடைய குறைபாட்டால் ரிக்கட்ஸ் எனப்படும் எலும்பு நோய், எலும்புகள், பற்கள் மென்மையாதல், விரைவில் வயதான தோற்றம் ஆகியவை ஏற்படும்.
இதனை செயற்கைப்பொருளாக அதிகமாக உட்கொண்டால் தலைவலி, வாந்தி, அதிகதாகம், அடிக்கடி சிறுநீர்கழித்தல், தசை பலமிழப்பு, இணைப்பு திசுக்களில் வலி ஆகியவை உண்டாகும்.
ஒரு நாளைக்கான தேவை 0.01 மில்லிகிராம் ஆகும்.
விட்டமின் இ
இதனுடைய வேதியியல் பெயர் டொக்கோஃபெரோல், டொக்கோ ட்ரையீனால் என்பதாகும். உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், இரத்தம் உறைதலைத் தடுக்கும். கண்புரையைத் தடுக்கும்.
இது எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், கொட்டைகள், பழங்கள் போன்றவற்றில் காணப்படுகின்றது.
இதனுடைய குறைபாட்டால் நரம்பியல் கோளாறு, தள்ளாட்டம், இரத்தமுறிச்சோகை ஆகியவை ஏற்படும்.
இதனை அதிகமாக உட்கொள்ளும்போது மூளை நரம்புகளில் இரத்த கசிவினை உண்டாக்கும்.
ஒரு நாளைக்கு தேவையான அளவு 15 மில்லிகிராம் ஆகும்.
விட்டமின் கே
இதனுடைய அறிவியல் பெயர் ஃபில்லோகுவினோனின், மெனோகுவினொனின் என்பதாகும். இது இரத்தம் உறைதலுக்கு மிகவும் அவசியமானது.
இது கீரை வகைகள், முட்டைக்கோசு காலிஃப்ளவர் உள்ளிட்ட இலைக்காய்கறிகள், முட்டை, ஈரல் உள்ளிட்டவைகளில் அதிகம் உள்ளது.
இதனுடைய குறைபாட்டால் இரத்தம் உறையாமை, இரத்த போக்கு, எலும்புப்புரை, இரத்தசோகை போன்றவை ஏற்படும்.
இதனை அதிகமாக உட்கொண்டால் இரத்த உறைதல் விரைவாக ஏற்படும்.
ஒரு நாளைக்கு தேவையான அளவு 0.12 மில்லிகிராம் ஆகும்.
உடலுக்கு மிகவும் அவசியமான விட்டமின் என்னும் உயிர்மூலத்தை அளவோடு உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!