விட்டமின் ஏ நிறைந்த வாழைக்காய்

வாழைக்காய் நம் நாட்டில் சமையலில் பயன்படும் முக்கிய காய்களில் ஒன்று.

வாழைக்காய் சிப்ஸ், பஜ்ஜி என இக்காயிலிருந்து தயார் செய்யப்படும் சிற்றுண்டி வகைகளை யாராலும் மறக்க முடியாது.

அன்னதானத்திலும் இக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாழைக்காயானது வாழை மரத்திலிருந்து பெறப்படுகிறது. வாழை மரத்தின் இலைகள், பூக்கள், தண்டுகள், காய்கள், பழங்கள், நார்கள் என அனைத்து பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் வாழை மரம் பெரும்பாலான வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

வாழைக்காயானது சமைத்தே உண்ணப்படுகிறது. வாழைக்காய் சீப்பாக குலையில் அமையப் பெற்றிருக்கிறது. வெளித்தோல் பச்சை நிறத்தில் கடினமானதாக உள்ளது. வாழைக்காயின் உட்புறம் வெள்ளை நிற சதைப்பகுதியும், கறுப்பு நிற போலி விதைகளையும் கொண்டுள்ளது.

வாழை மரமானது பூண்டுத்தாவரங்களை உள்ளடக்கிய மியூசா என்ற பேரினத்தைச் சார்ந்தது. இம்மரமானது போலித் தண்டுகளைக் கொண்டுள்ளது. இம்மரமானது பக்க வாழை அல்லது வாழைக் கிழங்கின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனுடைய தாயகம் தென்கிழக்கு ஆசியாவாகும்.

 

வாழை மரம்
வாழை மரம்

 

வாழைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

வாழைக்காயில் விட்டமின் ஏ, சி, பி6(பைரிடாக்ஸின்) ஆகியவை அதிகளவு உள்ளன. இக்காயில் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), ஃபோலேட்டுகள், இ, கே முதலியவை காணப்படுகின்றன.

இக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம் ஆகியவை உள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதம் (குறைந்தளவு), நார்ச்சத்து, எரிசக்தி போன்றவைகளும் இருக்கின்றன.

 

வாழைக்காயின் மருத்துவப் பண்புகள்

நல்ல செரிமானத்திற்கு

இக்காயில் காணப்படும் நார்ச்சத்தானது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை ஒன்று திரட்டி கழிவாக வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிற்றுக் கோளாறுகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

மேலும் உடலானது உணவில் உள்ள ஊட்டச்சத்தினை முழுவதும் உறிஞ்ச உதவி செய்கிறது. ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்தினை வழங்கும் உணவில் இக்காய் ஐந்தாவது இடத்தைப் பெறுகிறது.

 

ஆரோக்கியமான உடல்எடை இழப்பிற்கு

உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் கார்போஹைட்ரேட்டை தவிர்க்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறான கருத்தாகும். ஊடல் எடை குறைப்பிற்கு நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட்டை எடுத்துக் கொள்ளலாம்.

கார்போஹைட்ரேட்டுடன் கூடிய நார்ச்சத்து உணவு செரிமானத்தைத் தாமதமாக்குகிறது. மேலும் சிறிதளவு உண்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது. இதனால் இடைவேளை உணவு என்பது அவசியமற்றதாகிறது.

வாழைக்காயானது கார்போஹைட்ரேட்டுடன் கூடிய நார்ச்சததினைக் கொண்டுள்ளது. எனவே ஆரோக்கியமான உடல் எடை இழப்பினை வேண்டுவோர் இக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

 

இதய நலத்திற்கு

வாழைக்காயில் காணப்படும் பொட்டாசியம் உடலில் உள்ள சோடியத்தின் அளவினை சமன் செய்து உயர் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

இக்காயில் காணப்படும் பி6(பைரிடாக்ஸின்) இதய நோயினைத் தோற்றுவிக்கும் ஹோமோசைஸ்டீன் அளவினைக் குறைக்கிறது.

இக்காயில் காணப்படும் நார்ச்சத்து உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாப்படுகிறது.

 

நோய் எதிர்ப்பாற்றலைப் பெற

வாழைக்காயில் காணப்படும் விட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. இதனால் நோய் எதிர்பாற்றல் இல்லாமல் ஏற்படும் சளி, வைரஸ் தொற்றுதல்களிலிருந்து நம்மை இக்காய் பாதுகாக்கிறது.

 

மூளையின் புத்துணர்ச்சிக்கு

வாழைக்காயில் உள்ள விட்டமின் பி6(பைரிடாக்ஸின்) மூளையினை நன்கு செயல்படச் செய்யும் ஹார்மோன்களான செரோடோனின் மற்றும் நோர்பைன்ப்ரைன் ஆகியவற்றை நன்கு சுரக்கச் செய்கிறது. இந்த ஹார்மோன்கள் தூக்கத்தை வரவழைத்து மூளையினை நன்கு செயல்படச் செய்கிறது.

 

கண்கள், சரும பாதுகாப்பிற்கு

வாழைக்காயானது அதிகளவு விட்டமின் ஏ, பி6(பைரிடாக்ஸின்) போன்றவை கொண்டுள்ளது. இந்த விட்டமின்கள் கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் போன்றவை ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.

மேலும் இந்த விட்டமின்கள் தோலில் சுருக்கள் ஏற்படுவதை தடைசெய்கிறது. சருமத்தில் வறட்சி ஏற்படாமலும், அதிக எண்ணெய் பசை இல்லாமலும் இவை பாதுகாக்கின்றன.

 

வாழைக்காயினை தேர்வு செய்யும் முறை

வாழைக்காயினைத் தேர்வு செய்யும்போது ஒரே சீரான நிறத்தில், கனமானதாக, விறைப்பானதாக இருப்பவற்றை தேர்வு செய்யவும்.

பழுத்த, மேற்பரப்பில் வெட்டுக்காயங்கள், நோய் தொற்று இருப்பவற்றைத் தடை செய்யவும்.

அறையின் வெப்பநிலையில் ஓரிரு நாட்கள் இக்காயினை வைத்திருந்து பயன்படுத்தவும்.

சத்துக்கள் நிறைந்த வாழைக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.