விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் வைக்கப்பட்டுள்ள திருப்பள்ளியெழுச்சியின் ஒன்பதாவது பாடலாகும்.
திருவாதவூரார் என்றழைக்கப்படும் மாணிக்கவாசகாரால், உயிர்களின் இயக்கத்திற்குக் காரணமான இறைவனான சிவபெருமானின் மீது திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன.
திருவெம்பாவை பாடல்கள் 20, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் 10 சேர்த்து மொத்தம் 30 பாடல்கள், மார்கழி மாத இறைவழிபாட்டின் போது பாடப்படுகின்றன.
திருப்பள்ளியெழுச்சி தமிழின் தொண்ணூற்றாறு பிரபந்தங்களின் வகைகளுள் ஒன்று. உயிரினங்களைப் போன்று இறைவனும் இரவில் உறங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி, துயில் எழுப்புவதாக இப்பாடல்கள் அமையப் பெற்றுள்ளன.
அதாவது நம் உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் இறைஞானத்தை தட்டி எழுப்ப எனப் பொருள் கொள்ளலாம்.
பொதுவாக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில், அதிகாலைப் பொழுதில் சுற்றுப்புறத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.
திருப்பெருந்துறையில் இருக்கும் சிவபெருமானின் மீது மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும், ரங்கநாதப் பெருமானின் மீது தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் புகழ் பெற்றவை.
விண்ணுலகத் தேவர்களும் அணுக முடியாத பரம்பொருளே, நீ உன்னுடைய அடியவர்களுக்காக மண்ணுலகத்தில் வந்து அருள் செய்து வாழச் செய்கின்றாய்.
இனிக்கின்ற தேனாகவும், கரும்பாகவும், அமுதமாகவும் திகழ்கின்ற இறைவா, அருளுவாயாக என்று மாணிக்கவாசகர் இறைவனிடம் வேண்டுகிறார்.
விண்ணுலகத்தில் வாழும் தேவர்களாலும் அணுக முடியாத இறைவா, உன்னுடைய அடியவர்களின் அன்பிற்காக மண்ணுலகத்தில் வந்து அருள் செய்து வாழ வைத்தாய்.
பரம்பரையாக உன்னுடைய அடியவர்களாக விளங்குபவர்களுக்கு நீ தேனாகவும், அமுதமாகவும், கரும்பாகவும் திகழ்கின்றாய். உலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் உயிராக இருப்பவனே, பள்ளியிலிருந்து எழுந்து அருளுவாயாக என்று இறைவனை மாணிக்கவாசகர் வேண்டுகிறார்.
விண்ணுலக தேவர்களுக்கு எட்டாத இறைவன், எளிய அடியவர்களுக்கு தானே வந்து அருள் செய்வான் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.
இனி திருப்பள்ளியெழுச்சி ஒன்பதாவது பாடலைக் காண்போம்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் 9
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே
வண் திருப்பெருந்துறையாய் வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும்பும் அடியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
விளக்கம்
இறைவனால் அவரின் அடியவர்களுக்கு கிடைக்கும் பேரின்ப நிலையை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
வானுலகில் உள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத மேலான மெய்ப்பொருளே! உன்னுடைய அடியவர்கள் எளியவர்களாயினும் அவர்களுக்காக இந்த மண்ணுலகுக்கு வந்து வாழச் செய்தவனே!
வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்தவனே. பரம்பரையாக உனக்கு தொண்டு செய்யும் அடியவர்களாகிய எங்களின் கண்களுக்கு, காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பைத் தருகின்ற தித்திக்கின்ற தேனே!
பாற்கடலில் தோன்றிய அமுதமே! நெஞ்சில் இனிக்கும் கரும்பே! அன்பு செய்யும் தொண்டர்களின் எண்ணத்துள் நிறைந்தவனே! உலகம் அனைத்துக்கும் உயிரானவனே! எம்பெருமானே, பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக!
விண்ணுலகத் தேவர்களாலும் அணுக முடியாத இறைவன், தன்னுடைய அடியவர்கள் எளியவர்களாயினும் தானே முன்வந்து அருளுவான் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.