விண்மீன்கள்

விண்மீன்கள் என்பவை வாயுக்களிலான வெப்பக் கோளங்களாகும். இவை வெப்பத்தையும், ஒளியையும் உமிழ்கின்றன.

விண்மீன்கள் பல்வேறு அளவுகளில் வெவ்வேறு நிறங்களில் காணப்படுகின்றன. இவை வெவ்வேறு வெப்பநிலைகளை உடையவையாக உள்ளன.

வெப்பநிலைகளைப் பொறுத்தே விண்மீன்களின் ஒளிச்செறிவும், தொலைவும் மாறுபடுகின்றன.

சூரியன் நடுத்தர அளவுடைய விண்மீன் ஆகும். இது பூமிக்கு மிக அருகில் உள்ளது. எனவே அளவில் பெரிதாகத் தென்படுகிறது.

 

சூரியன்
சூரியன்

 

8 மில்லியனுக்கும் மேலான அண்டங்கள் (காலக்ஸி) இருப்பதாக அறிவியலாளர் கருத்து உரைத்துள்ளனர். ஒவ்வோர் அண்டத்திலும் சுமார் 14,000 கோடி விண்மீன்கள் இருப்பதாகக் கணித்துள்ளனர்.

 

விண்மீன்களின் தோற்றம்

விண்மீனின் தோற்றம்
விண்மீனின் தோற்றம்

விண்மீன்கள் தூசு நிரம்பிய வாயு விண் முகில்களிலிருந்து உண்டானவை ஆகும். விண்வெளியில் தூசுவும் வாயுவும் உள்ளன.

இவை மிகக்குறைந்த அடர்த்தியில் காணப்படுகின்றன. விண்வெளியில் உள்ள தூசும், வாயுவும் இணைந்து விண் முகில்களை உருவாக்குகின்றன.

நிறை ஈர்ப்பினால் குறிப்பிட்ட பொதுமையத்தை நோக்கி விண்முகில் சுருங்கத் தொடங்குகிறது. இதனால் மெதுவாக அடர்த்தி அதிகரிக்கிறது; அழுத்தமும் கூடுகிறது; வெப்பநிலை உயருகிறது.

சில நூறு ஆயிரம் ஆண்டுகளில் வெப்பநிலை சில ஆயிரம் டிகிரி அளவு உயரும். மைய அழுத்தம், நிறை ஈர்ப்பு ஆற்றலை ஈடுகட்டும் அளவுக்கு அதிகரித்தபின் விண்முகில் சுருங்குவது நிற்கும். இந்நிலையில் விண்மீனானது உருவாகத் தொடங்குகிறது.

விண்மீன் சுருங்குவது நின்றாலும் மையத்தில் நிறை ஈர்ப்பு ஆற்றல் சுருக்கம் பல மில்லியன் ஆண்டுகளுக்குத் தொடரும். அப்போது விண்மீனின் வெப்பநிலை ஒரு கோடி டிகிரி வரை உயரும்.

உயர் வெப்பநிலையில் ஹைட்ரஜன் அணுக்கருக்கள் பிணைந்து ஹீலியமாக மாறுகிறது. அணுக்கருப் பிணைப்பின்போது ஆற்றல் அதிக அளவு வெளிப்படுகிறது.

இந்நிகழ்வு பலகோடி ஆண்டுகளுக்கு ஆற்றலைத் தந்து, முழுமையான விண்மீனாகத் தோற்றமளிக்கச் செய்கிறது. சுமார் 2000 லட்சம் ஆண்டுகளில் உறுதிநிலை பெறும் விண்மீன், ஆயிரம் கோடி ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.

விண்மீன்கள் பெரும்பாலும் கூட்டமாகவே பிறக்கின்றன. சில இரட்டைகளாகவும், சில சூரியனைப் போல் குடும்பக் கோள்களுடனும் பிறக்கின்றன.

 

நிறமும் வயதும்

இரவு வானில் விண்மீன்கள் வெவ்வேறு நிறங்களில் ஒளிர்வதைக் காணலாம். அவற்றின் நிறவேறுபாட்டை அறிய நிறக்குறிப்பு எண் (கலர் இன்டெக்ஸ்) பயன்படுத்தப்படுகிறது.

சைரஸ், சுழி நிறக்குறிப்பு எண்ணுடைய ஒரு வெள்ளை விண்மீன்.

நிறக்குறிப்பு எண் 0.81 பெற்ற சூரியன் ஒரு மஞ்சள் நிற விண்மீன்.

1.5 நிறக்குறிப்பு எண் கொண்ட அன்ட்ராரஸ் சிவப்பு நிற விண்மீன்.

நிறமாலைமானின் துணையுடன் ஆராய்ந்து விண்மீன்களின் நிறம், வயது, அளவு, செல்லும் திசை, வேகம் ஆகியவற்றையும் அவற்றில் அடங்கியுள்ள தனிமங்களையும் அறியமுடிகிறது.

நிறைமாலைமானியைக் கொண்டு சுமார் 5,00,000 விண்மீன்களை ஆய்வு செய்துள்ளனர். அவற்றின் நிறமாலை வரிகளைக் கொண்டு ஓ,பி,ஏ,எஃப்,ஜி,கே மற்றும் எம் என ஏழு தொகுப்பு அடையாளக் குறிப்புகளை இட்டுள்ளனர்.

 

விண்மீன்களின் ஆயுள்

நிறை, வெப்ப ஆற்றல்களைப் பொறுத்து விண்மீன்களின் ஆயுள் அமையும். விண்மீனின் நிறை இரு பங்காக அதிகரித்தால் ஆயுள் நான்கில் ஒரு பங்காகக் குறையும்.

அளவும் நிறையும் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும். சூரியன் நடுத்தர அளவுடைய விண்மீன். இதன் ஆயுள் சுமார் 10,000 மில்லியன் ஆண்டுகள். சூரியன் இதுவரை பாதி ஆயுளை இழந்துள்ளது.

 

சிவப்பு ராட்சசன்

சிவப்பு ராட்சசன்
சிவப்பு ராட்சசன்

சூரியன் அல்லது அதற்கு மேலான நிறையுடைய விண்மீன்கள் முதலில் விண் முகில் சுருங்குவதால் உருவாகி மையக்கருவில் நிகழும் அணுக்கருப் பிணைவால் ஹைட்ரஜன் எரிந்து தீர்ந்ததும், மைக்கரு சுருங்கும்.

அப்போது விண்மீனின் மேல் அடுக்கு வெளிப்புறம் விரியும். உருவில் மிகப் பெரிதாக மாறும். நிறமும் சிவந்து காணப்படும். இவ்வகை விண்மீன் சிவப்பு ராட்சசன் எனப்படும்.

இவற்றை இரவு விண்ணில் எளிதில் காணலாம். விருச்சிக உடுக்கூட்ட அண்டாரஸ், இடப உடுக்கூட்ட ரோகினி, மிதுன உடுக்கூட்ட புனர்வசு, பூட்டஸ் உடுக்கூட்ட சுவாதி ஆகியவை இவ்வகையைச் சார்ந்தவை.

சூரியன் 500 கோடி வருடங்களுக்குப் பிறகு 100 மடங்கு விரிவடைந்து சிவப்பு ராட்சசனாக மாறும்.

 

வெள்ளைக் குள்ளன்

வெள்ளைக் குள்ளன்
வெள்ளைக் குள்ளன்

சிவப்பு ராட்சசனின் மேல் அடுக்கு விரிவடையும்போது மையக்கரு தொடர்ந்து சுருங்கும்.

அழுத்த மிகுதியால் மையக் கருவில் வெப்பநிலை உயரும். இக்கட்டத்தில் மேல் அடுக்கு வெடித்து வெளிப்புறமாக வளையம் போல் விரிவடையும். இதனை நோவா வெடிப்பு என்பர்.

நோவா வெடிப்பிற்குப்பின் இவ்விண்மீன் வெள்ளைக் குள்ளன் எனப்படுகிறது.

 

நியூட்ரான் விண்மீன்

சுருங்கிய விண்மீனின் மையக்கரு வெப்பம், சுமார் 60 கோடி டிகிரியை எட்டும். அப்போது ஏற்படும் அணுவினையால் வெப்பம் அதிகரித்து 500 கோடி டிகிரியை அடையும். இந்நிலையில் நியூட்ரினோக்கள் உருவாகின்றன.

வெப்பம் 600 கோடி டிகிரியைத் தாண்டும்போது இவ்விண்மீனின் அணுக்கருவில் புரோட்டான்களுடன் எலக்ட்ரான்கள் அழுத்தப்பட்டு நியூட்ரான்களாக மாறும்.

இந்நிலையில் விண்மீனில் வெறும் நியூட்ரான்கள் மட்டுமே இருப்பதால் இவ்விண்மீன் நியூட்ரான் விண்மீன் என்றழைக்கப்படுகிறது. இதன் விட்டம் சுமார் 40 கிலோமீட்டருக்கும் குறைவாக இருக்கும்.

 

கருப்புத் துளை

நியூட்ரான் விண்மீன்களின் நிறை குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் நிறையீர்ப்பினால் மேலும் சுருங்கிக் கருப்புத் துளை உண்டாகும்.

கருப்புத்துளைக்கு ஈர்ப்பு ஆற்றல் மிக அதிகம். இதனால் இதிலிருந்து ஒளிவிடு பட முடியாது. இந்நிலையில் விண்மீன் ஒளியினை உமிழாது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.