விதைத்ததே கிடைக்கும் என்பது ஒரு குறுங்கதை.
நாம் எதனை விதைக்கிறோமோ, அதுவே நமக்கு திரும்பக் கிடைக்கும் என்பதை இக்கதை கூறுகிறது.
நன்மை செய்தால் நன்மை கிடைக்கும். தீமை செய்தால் தீமை கிடைக்கும் என்ற பெரியோர்களின் வாக்கு உண்மையானது.
ஒருநாள் தெரு நாய் ஒன்று அரண்மனையின் கண்ணாடி அறையினுள் தெரியாமல் நுழைந்து விட்டது. அந்த அறையில் சுவர்கள் அனைத்தும் கண்ணாடியால் ஆனது.
அந்த அறைக்குள் நுழைந்ததும் அதற்கு மிகவும் அதிர்ச்சி.
காரணம் சுற்றிலும் நூற்றுக்கணக்கான நாய்கள் தெரிந்தன.
இதனால் எரிச்சலடைந்த நாய் “உர்.. உர்..” என்று உறுமியது.
நூற்றுக்கணக்கான நாய்களும் பதிலுக்கு “உர்.. உர்..” என்று உறுமின.
நடந்ததைக் கண்டதும் அந்த நாய் பயந்து விட்டது.
நாய் கோபத்துடன் “லொள் லொள்” என்று குரைக்க ஆரம்பித்தது.
உடனே எல்லா நாய்களும் குரைத்தன.
நாய் குரைப்பதை நிறுத்தியது.
உடனே எல்லா நாய்களும் குறைப்பதை நிறுத்தின.
தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகரித்தது; வெறி பிடித்ததைப் போன்று குரைக்க ஆரம்பித்தது.
உடனே பதிலுக்கு எல்லா நாய்களும் குரைக்க ஆரம்பித்தன.
தெரு நாய் பயத்தின் உச்சியில் வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்துக் கொண்டே மயங்கியது.
இறுதியில் பயத்தில் தெரு நாய் இறந்து விட்டது.
தெரு நாய், தான் நுழைந்தது கண்ணாடி அறை என்றும், நூற்றுக்கணக்கான நாய்கள் தன்னுடைய பிம்பங்கள் என்றும் உணரவில்லை.
குரைத்தது தன்னுடைய பிம்பங்கள் என்பதையும் மற்ற நாய்களின் ஒலி தன்னுடைய குரலின் எதிரொலி என்பதையும் தெரு நாய் அறியவில்லை.
இக்கதையில் கூறப்பட்டுள்ள கண்ணாடி அறை என்பது உலகமே.
நாம் கோபப்பட்டால், பதிலுக்கு கோபம் நமக்கு பரிசாகக் கிடைக்கும்.
நாம் அன்பு செலுத்தினால், அன்பு நமக்கு பரிசாகக் கிடைக்கும்.
நாம் எதனை விதைக்கிறோமோ அதுவே முளைக்கும். விதைத்ததே கிடைக்கும்.
அது பிறருக்கு செய்யும் உதவி ஆனாலும் சரி அல்லது துரோகம் ஆனாலும் சரி.
இதைதான் வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்ற பழமொழி கூறுகிறது.
ஆதலால் நல்லதை விதைத்து நன்மையைப் பெறுவோம்.
மறுமொழி இடவும்