விநாயகர் சிறப்பு

விநாயகர் அகவல் பாடல் – அவ்வைப் பாட்டி

விநாயகர் அகவல் தமிழ் மூதாட்டியான அவ்வைப் பாட்டியால் விநாயகரைக் குறித்து பாடப் பெற்றது. எல்லா இடத்திலும் இருக்கும் பிள்ளையாரின் தோற்றப் பெருமைகள், யோகாசன மூச்சுப் பயிற்சி ஆகியவை பற்றி இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.

வழிபாடு மற்றும் யோகாசன பயிற்சியின் மூலம் தன்னையும், இறைவனையும் அறியும் நிலை பற்றி விநாயகர் அகவல் விளக்குகிறது.

பாடல் தோன்றிய விதம்

ஒரு முறை சுந்தரரும், அவரது நண்பரான சேரமான் பெருமானும் திருகயிலாயத்தில் சிவபெருமானின் தரிசனம் வேண்டி கையிலையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

வழியில் விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவ்வை மூதாட்டியைக் கண்டனர்.

அப்போது அவ்வை அவர்களிடம் “நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டார். அவ்வையிடம் அவர்கள் இருவரும் “நாங்கள் கையிலாயத்தில் சிவபெருமானின் தரிசனம் பெற போய் கொண்டிருக்கிறோம்.” என்றனர்.

அதனைக் கேட்ட அவ்வைப் பாட்டிக்கும் சிவபெருமானின் கையிலாய தரிசனத்தைக் காணும் எண்ணம் ஏற்பட்டது. அதனால் வழிபாட்டினை அவசரமாக முடிக்கத் தயாரானார் அவ்வையார்.

அவ்வையின் எண்ணத்தை அறிந்த விநாயகப் பெருமான் “அவ்வையே என்னைப் பற்றி ஒரு பாடல் பாடேன். நானே உன்னை கையிலைக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார்.

அவ்வையாரும் ஞானத்தின் வடிவமான விநாயகப் பெருமானைப் பற்றி சீதக்களப எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். பாடல் பாடி முடித்ததும் விநாயகப் பெருமான் தனது துதிக்கையில் அவ்வையை இறுத்தி கையிலாயத்தில் சேர்த்தார்.

அவ்வையாரும் சுந்தரர் மற்றும் சேரமானுக்கு முன்னால் சிவபெருமானின் தரிசனம் பெற்றார்.

விநாயகப்பெருமானைப் பற்றி அவ்வை பாடிய சீதக்களப எனத் தொடங்கும் பாடலே விநாயகர் அகவல் என்று அழைக்கப்படுகிறது.

விநாயகர் வழிபாட்டில் இப்பாடலைப் பாடி மனமுருகி நல்லவற்றை வேண்டினால் நமக்கு அவற்றை விநாயகப்பெருமான் விரைந்து வழங்குவார்.

அவ்வைப் பாட்டியை கையிலாயத்துக்கு விரைந்து கொண்டு சென்ற பிள்ளையார் திருக்கோவிலூர் என்னும் திருத்தலத்தில் அருள்புரிகிறார்.

இவரது திருநாமம் பெரிய யானை கணபதி என்பதாகும். இத்தல இறைவன் வீரட்டேஸ்வரர் என்பவராவார். அம்மை சிவானந்தவல்லி என்று அழைக்கப்படுகிறார். இத்தலம் சிவனின் வீரத்திருவிளையாடல்கள் நிகழ்ந்த அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகும்.

விநாயகர் அகவல் பாடல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

 

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

 

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

முப்பழ நுகரும் மூஷிக வாகன!

 

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

 

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

 

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

 

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றும் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

 

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

 

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

 

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப்

 

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

 

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)

இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

 

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

 

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே!

 


Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.