விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தி (பிள்ளையாா் சதுர்த்தி) என்பது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்படுகிறது.

அமாவாசை அல்லது பௌர்ணமி முடிந்து நான்காவது நாளில் வருவது சதுர்த்தி ஆகும். அமாவாசை முடிந்து நான்காவது நாளில் வருவது ‘சுக்லபட்ச சதுர்த்தி’ அல்லது ‘வளர்பிறை சதுர்த்தி’ ஆகும்.

பௌர்ணமி முடிந்து நான்காவது நாளில் வருவது ‘கிருஷ்ணபட்ச சதுர்த்தி’ அல்லது ‘தேய்பிறை சதுர்த்தி’ ஆகும். மாதந்தோறும் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தியையே ‘சங்கடஹர சதுர்த்தி’ என்கின்றோம்.

விநாயகர் சதுர்த்தி வரலாறு

விநாயகர் சதுர்த்தியை மராட்டிய மன்னன் சிவாஜி முதலில் சமுதாயப் பொது விழாவாகக் கொண்டாடினார்.

1892ல் புனேயில் பாசுகாப் லட்சுமண் ஜவாலே என்பவர், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று பொது விழாவாகக் கொண்டாடினார்.

அதன்பின் பாலகங்காதர திலகர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்ட உணர்வை எல்லாத் தரப்பு மக்களிடமும் விநாயகர் சதுர்த்தி விழாவின் மூலம் சென்றடையச் செய்தார்.

சதுர்த்தி விரதம்

சதுரம் என்பது நான்கு பக்கங்களால் ஆன ஒரு முழுமையாக அமைப்பாகும். நம் வாழ்க்கைத் தேவைகள் அனைத்தும் முழுமையாக பூர்த்தியடைய சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

பார்வதி தேவி விநாயகர் சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டே சிவபெருமானை கணவனாக அடைந்ததாகக் கூறப்படுகிறது. எனவே பெண்கள் தங்களுக்கு நல்ல கணவனைப் பெற விநாயகர் சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

மேலும் விநாயகர் சதுர்த்தியின் போது விரதத்தை மேற்கொண்டால் செல்வ செழிப்பு, காரிய வெற்றி, புத்திக்கூர்மை, மக்கட்பேறு, தொழில்வளம் ஆகியன பெருகும். உள்ள மேன்மை, உடல் ஆரோக்கியம் முதலியவைகள் கிட்டும்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு சர்க்கரைப் பொங்கல், மோதகம், அவல் பொரி, சுண்டல், விளாம்பழம், அப்பம், கொழுக்கட்டை ஆகியவைகளைப் படைத்து வழிபட வேண்டும்.

விநாயகருக்கு படைக்கும் ஒவ்வொரு பொருளிலும் அர்த்தம் இருக்கிறது.

மோதகம் படைப்பதன் காரணம், மோதும் மனங்கள் (அகங்கள்) இருக்கக்கூடாது. குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஏற்படாமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க மோதகத்தைப் படைக்கின்றோம்.

விளாம்பழத்தில் கடினமான ஓட்டிற்குள்ளே கனியிருக்கும். கடின உழைப்பினால் தான் கனிவான வாழ்க்கை கிடைக்கும் என்பதை உணர்த்தவே விளாம்பழத்தைப் படைக்கின்றோம்.

அவல் பொரி குசேலனை குபேரனாக்கிய பொருள். எனவே, அவல் பொரி படைப்பதால் மனம் மகிழும் வாழ்க்கை கிட்டும்.

கொய்யா பழத்தில் கடினமான கொட்டைகளுடன் இனிப்பான சதைப்பகுதி உள்ளது. அதே போல் வாழ்க்கையும், இனிப்பான சதைப் பகுதியைப் போன்று இன்பமும், கடினமான கொட்டைப்பகுதியைப் போன்று துன்பமும் நிறைந்திருக்கும் என்பதை உணர்த்துகிறது.

 

விநாயகர் சதுர்த்திக்கு, ஆரம்ப காலத்தில் களிமண்ணால் விநாயகர் திருவுருவம் செய்து, விநாயகர் சதுர்த்தி நாளிலிருந்து பத்து நாள் வரை ஊர் பொது இடத்தில் வைத்து, அதற்கு இயற்கைப் பூக்கள் மற்றும் மூலிகைகளால் அர்ச்சனை செய்து சதுர்த்தசி (பத்தாவது) நாளில் திருவுருவத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று, இறுதியில் ஊர் பொதுக்குடிநீர் குளத்தில் கரைத்து விடுவர்.

களிமண் குளத்து நீரில் உள்ள கலங்கலை (Turbid) ஈர்த்து குடிநீரைத் தெளிவடையச் செய்யும் தன்மையுள்ளது. மூலிகைகள் மற்றும் இயற்கைப் பூக்கள் குடிநீரில் கலந்து மருத்துவத் தன்மையை உண்டாக்கும் தன்மையுள்ளது. இக்குடிநீரானது ஆவணி மாத பருவகால மாற்றத்தால் ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்கும் தன்மை வாய்ந்ததாக இருந்தது.

ஆனால் தற்போது பாரிசு சாந்து (Plaster of Paris) வினால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜை செய்து, இறுதியில் நீர் நிலைகளில் விடப்படும் போது, சிலைகளின் மீதுள்ள வண்ணப்பூச்சுவிலுள்ள காட்மியம், குரோமியம் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் நீரில் கரைந்து நோய்களைத் தோற்றுவிக்கிறது.

மேலும் பாரிசு சாந்து நீரில் எளிதில் மட்காது, நீரின் தன்மையை மாற்றிவிடுகிறது. எனவே பாரிசு சாந்தினாலான சிலைகளைப் பயன்படுத்தாது, களிமண்ணாலான சிலைகளைப் பயன்படுத்தி, அதனை பூஜிக்க இயற்கைப் பூக்களை மட்டுமே பயன்படுத்தினால், சுற்றுச்சூழல் மாசுபடாமலும் உடல்நலத்தையும் அதிலிருந்து காக்கலாம்.