தமிழில் புரட்சியையும், அறிவு விழிப்புணர்ச்சியையும் தருவதற்கென உள்ள சிறந்த தளம் ”வினவு” ஆகும்.
மாற்றுச் சிந்தனைவாதிகளின் தர்க்க ரீதியான கருத்துக்களும், இன்றையச் சமூகத்தின் இழிநிலையைக் கண்டு கொதித்தெழும் அறிஞர்களின் கோபங்களும் இங்கு, நமக்கான விடிவிற்காக தீபமென எரிந்து கொண்டிருக்கின்றன.
‘வினவு’ தளம் குறித்து அவர்கள் மொழியில் கூற வேண்டுமென்றால்,
வினவு என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் ஆதரவாளர்கள். இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வினவின் நோக்கம்.
“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ். உலகத் தொழிலாளி வர்க்கத்தைச் சூறையாடும் உலக முதலாளித்துவத்தையும், அதன் பங்குச் சந்தை சூதாடிகளையும், உலகப் பணக்கார வர்க்கத்தின் உல்லாச வக்கிரங்களையும் ஒரு சொடுக்கில் பரப்புகிறது இணையம்.
வங்கி முதலாளிகளின் நிதிமோசடியால் வீடிழந்த அமெரிக்கனின் உணர்வையும், வேலையிழந்த சென்னை ஐ.டி தொழிலாளியின் உணர்வையும் ஒரு வலைப்பூவால் இணைக்க முடியாதா?
உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையை, போராட்டத்தை, எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, அவை குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் பொதுவானதோர் கனவை, இலட்சியத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியாதா? முடியும் என்றே நம்புகிறோம்.
இது கொஞ்சம் பேராசைதான். இணையம் எனும் இந்த மெய்நிகர் உலகில் (virtual world) ஒரு பதிவர், தன் மெய்யுடலை மறைத்துக் கொண்டு கருத்துகளை மட்டும் உலவச்செய்யலாம் என்ற சாத்தியம், இணையத்தை ஒரு மெய்நிகர் திண்ணையாக்கியிருப்பதையும் காண்கிறோம்.
அரட்டையாளர்கள் கேள்வி கேட்பதில்லை. பதிலும் அளிப்பதில்லை. அறிவியலின் உன்னதத்தை ‘சொடுக்குப் போட்டு’ அழைக்கும் பல பதிவர்களின் கைகள் அரசையும் மதத்தையும் கைகூப்பித் தொழுகின்றன; சாதியின் விரல் பிடித்து நடக்கின்றன. சமூக அநீதிகள் கண்டு நடுக்கம் கொள்கின்றன அல்லது எனக்கென்ன என்று தோளைக் குலுக்குகின்றன.
அரட்டைக்கும் செயலின்மைக்கு இணையம் வழங்கியிருக்கும் இந்த வாய்ப்பை உதறுங்கள் என்று கோருவதற்காகத்தான், எமது வலைப்பூவுக்கு வினவு, வினை செய் என்று பெயரிட்டிருக்கிறோம்.
மெய்யுலகத்தின் அநீதிகளிலிருந்து மக்களை விடுவிக்கும் பணியை மெய்நிகர் உலகமும் ஆற்ற வேண்டும் என்பதே எம் அவா.
மாற்றுக் கருத்து கொண்டோர் உரையாட வருக. ஒத்த கருத்துள்ளோர் வினையாற்ற வருக. நாம் மெய் நிகர் மனிதர்களல்ல, மெய் மனிதர்கள்
இந்தத் தளத்தில் நிறைய மின்னூல்கள் காணப்படுகின்றன.அவை பயனுள்ள நூல்களாகும். அப்பட்டியலானது கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளன.
வினவு, புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் வெளியீடுகள் அனைத்தும் மின் நூல்களாக இங்கே விற்பனைக்கு உள்ளன.
இந்திய அரசியல், தமிழக அரசியல், உலக அரசியல், பண்பாடு, மார்க்சியம், துறை சார்ந்த நூல்கள், சினிமா, அறிவியல், ஆளுமைகள், காதல் – பாலியல், உலகமயம், தனியார்மயம், பெண், குழந்தைகள், பார்ப்பனியம் என பல்துறை தலைப்புக்களில் இந்த நூல்கள் கிடைக்கும்.
இந்த நூல்கள் படிப்பவர்களது அரசியல் பார்வையை கூர்மைப்படுத்துகின்ற ஆயுதமாக நிச்சயம் இருக்கும்.
இத்தளத்தின் பெரும்தலைப்புகளாக,
செய்தி
அரசியல்
கருத்தாடல்
சமூகம்
வீடியோ
களம்
புதிய ஜனநாயகம்
இதர
என்பவையுள்ளன.
இவை ஒவ்வொன்றிலும் நிறைய உள்தலைப்புகள் உள்ளன. இலக்கியம், சமூகம், அரசியல், நாட்டு நடப்பு என விரிந்த தளத்தில் செல்லுகிறது இதன் பாதை.
படைப்பாளி வெறும் இலக்கிய அறிவினை மட்டும் கொண்டு ஒரு படைப்பை படைத்து விட முடியாது. அவன் உலகம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். அதற்கு மிக அதிகமாக உதவும் இந்த வினவு.
தளத்தில் சென்று மாற்றுச் சிந்தனை பெற… https://www.vinavu.com எனும் சொடுக்கியைச் சொடுக்குங்கள்.
(இணையம் அறிவோமா? தொடரும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
அருமையான பயனுள்ள கட்டுரைகள் பகிர்ந்து வருகிறீர்கள்.
வாழ்த்துக்கள் ஐயா!
மிகச் சிறந்த பதிவு.
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்ற தத்துவ சிந்தனைக்கு ஏற்ப, நீங்கள் தொடர்ந்து இணையதளத்தையும் அது தொடர்பான மிகச் சிறந்த பதிவுகளை தொடராக எழுதி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
மகிழ்ச்சி ஐயா. வாழ்த்துக்கள்!