வினை விதைத்தவன் வினை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. இதனை விளக்கும் சிறுகதை இதோ. இக்கதையின் மூலம் நாம் தகாத செயல்களைச் செய்யக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மருதூர் என்னும் ஊரில் நாராயண பெருமாள் கோவில் ஒன்று இருந்தது. அக்கோவிலுக்குச் சொந்தமான கோவிந்தன் யானையை அவ்வூரில் உள்ள எல்லோருக்கும் பிடிக்கும்.

கோவிந்தன் யானையிடம் கொண்ட பிரியத்தால் மக்கள் எல்லோரும் அதற்கு உண்பதற்கு பழங்கள், தேங்காய் உள்ளிட்டவைகளை வழங்குவர். கோவிந்தன் யானையும் தன்னுடைய துதிக்கையால் மக்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்கும்.

தினந்தோறும் கோவிந்தன் யானை குளிக்க ஆற்றுக்கு அழைத்துச் செல்வதை யானை பாகன் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

யானை ஆற்றுக்குச் செல்லும் வழியில் மாதவன் என்பவன் தையல் கடை நடத்தி வந்தான். அவனும் ஆற்றுக்குக் குளிக்கச் செல்லும் யானை கோவிந்தனுக்கு அவ்வப்போது பழங்களை வழங்கி வந்தான்.

வழக்கம் போல் ஒரு நாள் யானை கோவிந்தனை குளிக்க ஆற்றுக்கு யானைப் பாகன் அழைத்து வந்தார்.

மாதவனின் கடை அருகே கோவிந்தன் யானை வந்ததும், வழக்கம் போல் துதிக்கையை நீட்டியது. மாதவனுக்கு அன்று ஒரு தப்பான யோசனை தோன்றியது. யானையைச் சீண்டிப் பார்க்க நினைத்தான்.

மாதவன் அன்று கோவிந்தன் யானைக்கு பழத்தினைத் தராமல் ஊசியால் குத்தி விட்டான்.

ஊசியால் குத்தப்பட்ட கோவிந்தன் யானை வலியால் துடித்தது. இருந்தாலும் எதனையும் வெளிக் காட்டிக் கொள்ளமால் அவ்விடத்தை விட்டு ஆற்றுக்குக் குளிக்கச் சென்றது.

மாதவனுக்கு தக்க பாடத்தை புகட்ட கோவிந்தன் யானை நினைத்தது. ஆற்றில் குளித்து விட்டு வெளியேறும் போது வாய் நிறைய சேற்றினை உறிஞ்சிக் கொண்டது.

மாதவன் கடை அருகே வந்ததும் கோவிந்தன் யானை வாயில் வைத்திருந்த சேற்றினை மாதவனின் கடையில் இருந்த துணிகளின் மேல் பீய்ச்சி அடித்தது.

அது திருவிழா சமயம் ஆதலால் மாதவனின் தையல் கடையில் தைப்பதற்காக புதுத்துணிகள் ஏராளமாக இருந்தன. புதுத்துணிகளில் சேறு பட்டதும் மாதவன் அதிர்ச்சி அடைந்தான். தன்னுடைய செய்கைக்காக மிகவும் வருந்தினான்.

விலங்கு தானே என்று கோவிந்தன் யானைக்கு செய்த கெடுதல் தனக்கு கேடாக முடிந்ததை எல்லோரிடமும் விவரித்தான் மாதவன். ஆதலால் யாரையும் குறைவாக எண்ணி யாருக்கும் துன்பம் செய்யாதீர்கள்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பெரியவர்கள் கூறியது உண்மைதான் என்பதை இக்கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Comments

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” மீது ஒரு மறுமொழி

  1. Prabhavathi Prabhavathi

    Nice story