விபரீத எண்ணத்தின் விளைவு – சிறுகதை

அருண் மீது விக்டருக்கு ரொம்ப நாட்களாகவே அளவு கடந்த பொறாமை.

அனைத்து ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பெற்று வகுப்பிலேயே முதலாவதாகத் திகழும் அவனை, ஒரே ஒரு தடவையாவது அனைவர் முன்னிலையிலும் தலைகுனிய வைக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.

வழக்கம் போல் அன்றும் அருகிலிருந்த அவனது வகுப்பாசிரியர் வீட்டிற்கு டியூசனுக்காகச் சென்றான் விக்டர். மாலை மயங்கி இருள் சாயும் நேரம்.

ஆசிரியர் காலாண்டுத் தேர்வு கணக்குப் பாட விடைத்தாள்களைத் திருத்துவதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்.

அவரது மேஜை மீது அவனது வகுப்பு மாணவர்களின் கணக்குப் பாட விடைத்தாள்கள் அனைத்தும் ஆங்கில எழுத்து வரிசைப்படி அருணில் ஆரம்பித்து கடைசியாக விக்டரில் முடியும் வகையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அருணின் விடைத்தாள் முதலாவதாக இருந்ததைக் கண்ட விக்டரின் மனதிற்குள் திடீரென ஓர் கெட்ட எண்ணம் உதித்தது.

அதை எப்படிச் செயல்படுத்துவது என சிந்தித்துக் கொண்டிருந்த போது ஆசிரியர் அவனிடம், ‘விக்டர் எனக்கொரு உதவி செய்’ என்று அவன் கையில் சில பொருட்களை எழுதிக் கொடுத்து அருகிலிருந்த கடையிலிருந்து வாங்கி வரும்படிச் சொன்னார்.

விக்டர் பொருட்களுடன் திரும்பி வந்த சமயம் மின்சாரம் இன்றி வீடு முழுக்க இருளாயிருந்தது. ஆசிரியர் மெழுகுவர்த்தியைத் தேடிக் கொண்டிருக்க, விக்டர் பரபரப்புடன் தன் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தான்.

முதலாவதாக இருந்த விடைத்தாளிலிருந்து நான்கைந்து தாள்களை வெகு ஜாக்கிரதையாகப் பிரித்தெடுத்து மடித்துத் தனது கால்சட்டைப் பாக்கெட்டிற்குள் பத்திரப்படுத்தி கொண்டான்.

உள்ளுற சந்தோசம் விக்டருக்கு, பக்கம் பக்கமாக எழுதி நூற்றுக்கு நூறு வாங்கும் அருண் இந்த தடவை அவுட். நான்கைந்து தாள்கள் அபேஸ்.

மிகக்குறைந்த மதிப்பெண்கள் அவனை அனைவரது முன்னிலையிலும் நிச்சயம் தலைகுனிய வைக்கும்.

டியூசன் அன்று இல்லை என ஆசிரியர் சொல்லி விட்டதால் மேலும் அங்கு இருக்காமல் உடனே கிளம்பி விட்டான். வெளியே வந்ததும் அவசரமாக‌ அந்த தாள்களைச் சுக்குநூறாகக் கிழித்து குப்பையில் எறிந்தான்.

மறுநாள் ஆசிரியர் கணக்குப்பாட விடைத்தாள்களுடன் வகுப்பினுள் நுழைந்தார். விடைத்தாள் கட்டைப் பிரித்து ஒவ்வொருவர் பெயராக அழைத்து வழங்கினார்.

அருண் வழக்கம் போல் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தான். விக்டருக்கு மனதில் குழப்பமாக இருந்தது.

கடைசியாக விக்டர் பெயரை அழைத்து, அவனது விடைத்தாளை நோட்டமிட்டு உதட்டைப் பிதுக்கினார்.

விக்டரும் ஆசிரியர் அருகில் சென்று ஒருவித பயத்துடன் அவனது விடைத்தாளை எட்டிப் பார்க்க, அவனது விடைத்தாள்கள் சில காணாமல் போயிருந்தன.

எஞ்சியிருந்த பக்கங்களில் விடைகள் அனைத்தும் தவறாக இருந்ததால் பூஜ்ஜியம் கொடுக்கப்பட்டிருந்தது.

மின்சாரம் போவதற்கு முன்பே, விக்டர் கடைக்குச் சென்றிருந்த சமயம், ஆசிரியர் விடைத்தாள்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சரி பார்த்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தபோது, முதலாவதாக இருந்த அருணின் விடைத்தாள் கடைசியாகவும், விக்டரின் விடைத்தாள் முதலாவதாகவும் இடம் மாறியிருந்தது விக்டருக்கு தெரியாது.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

ஆசிரியரின் பிற படைப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: