விமர்சனங்கள் பற்றி அறிய ஒரு சிறிய கதை.
முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி – இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? என்று வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்.
“முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது” என்றான் ஒரு மாணவன்.
“ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனைக் கண்டு மனம் துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான் என்பதில் நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்றான் இன்னொரு மாணவன்.
“இதென்ன பைத்தியக்காரத்தனம்? ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம். அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” என்று சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன்.
“தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டுத், தான் நடந்து செல்லத் துணிந்த அரசன்தான் எவ்வளவு பெரிய வள்ளல்!” என்றாள் ஒரு மாணவி.
“முதலில் தேர் செய்ததே மரத்தில்தான். மரத்தை வெட்டித் தேர் செய்துவிட்டுக் கொடியைக் காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்த வேண்டும் எனச் சொல்லியிருக்க வேண்டும் அந்த அரசன்” என்பது இன்னொரு மாணவியின் பதில்.
ஆயிரம் விமர்சனங்கள்
செயல் ஒன்றுதான். எத்தனை பார்வை? எத்தனை கண்ணோட்டம்?
ஒரு விசயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை. அவரவர் பார்வை; அவரவர் கண்ணோட்டம்.
இப்படித்தான் நமது செயல்களைப் பற்றி விமர்சனங்கள் இருக்கும். நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம்.
அதற்கெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல், மற்றவர்க்குத் தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதே சிறப்பு!
நிதானமாக அணுக வேண்டும்
நம் மீது சொல்லப்படும் விமர்சனங்களை எல்லாம் நாம் நிதானமாக அணுக வேண்டும்.
நம் மீது சொல்லப்படும் விமர்சனம் எப்படிப்பட்டது என்பதை நாம் உணர வேண்டும். விமர்சனம் உண்மையானதாக இருந்தால் நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நமக்கு, நம்முடைய கருத்தை, நடவடிக்கைகளை மாற்றுவது கடினமானதாகத்தான் இருக்கும். ஆனாலும் மாறுவது நல்லது என்றால் மாறிவிட வேண்டும். அதன் பலன் அதிகமாக இருக்கும்.
நமது மதிப்பைக் குறைக்க வேண்டும் என்ற தவறான நோக்கத்தோடு விமர்சனங்கள் இருந்தால் அவற்றை ஒதுக்கிவிட வேண்டும்.
தகுதியில்லாத விமர்சனத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. அதற்குப் பதில் கொடுத்து நமது நேரத்தை நாம் வீணாக்கக் கூடாது.
அதே நேரத்தில் தவறான விமர்சனங்கள் நமது மதிப்பைக் குறைக்கும் விதமாகப் பிறரால் தொடர்ந்து முன்வைக்கப்படும்போது நாம் கவனமாக எதிர்வினை ஆற்ற வேண்டும்.
பிறரது தவறான விமர்சனங்களால் நாம் வீழ்ந்து விடாமல் சமாளிக்கும் திறமை நமக்கு வேண்டும்.
நாம் என்றும் நதி போல ஓடிக் கொண்டிருக்க வேண்டும். எந்த விமர்சனமும் நம்மை நிறுத்திவிடக் கூடாது.
பொது வாழ்வில் நாம் நுழைந்தால் விமர்சனம் என்பது ஒரு வாழ்க்கைமுறை என்று மாறிவிடும்.
நம்முடைய செயல்களை மற்றவர்கள் விமர்சிப்பார்கள். மற்றவர்களுடைய செயல்களை நாம் விமர்சிக்க வேண்டி வரும்.
மற்றவர்களை நாம் விமர்சிக்கும் போது நாகரிகமாக, அவர்கள் மனது புண்படாமல் அவர்களை யோசிக்க வைக்கும் வண்ணம் விமர்சிக்க வேண்டும்.
சாதாரணமாகக் கொடுத்தால் தண்ணீர்; பக்தியுடன் கொடுத்தால் தீர்த்தம்.
தண்ணீரைப் போலவே சொற்களையும் நாம் பண்புடன் பயன்படுத்தினால் வாழ்க்கை அனைவருக்கும் இனிதாகும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!