வியத்தகு வில்வ மரம்

நமது உள்ளூர் மரவகையான வில்வ மரம் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியை தாங்கி வளரக் கூடியது. 48 டிகிரி சென்டிகிரேடு (118.4 டிகிரி பாரன்கீட்) வெப்பநிலையைக் கூடத் தாங்கிக் கொள்ளும் திறன் பெற்றது.

கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியின் போது தன்னிடம் உள்ள இலைகளை உதிர்த்து நீர் ஆவியாகாமல் பார்த்துக் கொள்ளும் தன்மை உடையது. இது மிகக் கடுமையான குளிரையும் சமாளித்து விடும். மைனஸ் 5 டிகிரி சென்டிகிரேட் (23 டிகிரி பாரன்கீட்) குளிர்நிலை வரை கூட தாக்கு பிடிக்கும்.

இப்படி மிகக் குறைவான வெப்பநிலை மற்றும் மிகக்கடுமையான வெயில், வறட்சி என்ற இரு வேறுபட்ட சூழ்நிலைகளைத் தாங்கி வளரும் தனித்தன்மை உடையது இம்மரம்.

இது விவசாயத்திற்கு பயன்படாத தரிசு நிலங்களிலும், களர் நிலங்களிலும் நன்கு வளரும். உப்பு மண், சரளை மண், உவர் மண் என்று எல்லா வகை மண்ணிலும் செழித்து வளரும்.

மண்ணின் ஆழம் மூன்று அடி இருந்தால் போதும். வடிகால் வசதியுள்ள மணல் பாங்கான நிலத்தில் செழிப்பாக வளரும். பாரம்பரிய இந்திய ரகங்கள் 60 அடி உயரம் வரை வளரும் தன்மை உடையது.

 

பொருளாதார பயன்கள்

வில்வ மரத்தின் வேர், மரப்பட்டை, இலை, பூ, பழம் என்று எல்லா பாகங்களும், மருத்துவ குணம் நிறைந்தவை. இதில் 69 வகையான காப்புரிமை பெற்ற மருந்துப் பொருட்கள் உள்ளன.

இதன் இலைகளிலிருந்து மூலிகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் உள்ள லிமோனிளி என்ற இயற்கையான ஆன்டிபயாடிக் 21 வகையான பாக்டீரிய கிருமிகளை அழிக்க வல்லது.

ஏ பிளாஸ்டிக் அனீமியா என்ற இரத்தம் வடிதல் நோய் உள்ளவர்களுக்கு வில்வப் பழம் ஒரு அருமையான மருந்தாகும். பழத்தில் உள்ள சதைப்பற்றை எடுத்து தண்ணீரில் கரைத்து சோம்பு மற்றும் இஞ்சியுடன் சுண்டக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.

வில்வம் பழத்தில் உள்ள மார்மலொசின் என்ற மருந்துப் பொருள் மன அழுத்தத்தை நீக்கி தூங்க வைக்கும். பொதுவாக வில்வப் பழம் நமது ஆரோக்கியத்திற்கு நல்ல டானிக். புத்துணர்ச்சி தர வல்லது. வேர்க்கசாயம் காயம், வீக்கத்தையும், மரப்பட்டை கசாயம் சர்க்கரை நோயையும் குணப்படுத்தும்.

தென் இந்தியாவை விட வட இந்திய வறட்சிப் பகுதிகளில் வில்வ மர சாகுபடி பிரபலம். சிவன், ராம்பூரி போன்றவை பாரம்பரிய பழைய ரகங்கள். ஆனால் தற்போது விவசாய ஆராய்ச்சி மையங்களில் இருந்து அதிக மகசூல் தரும் பல புதிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பந்த் ஊர்வசி, பந்த் அபர்னா போன்றவை லாபம் மிகுந்த புதிய ரகங்கள். இந்த ரகங்களில் ஒரு மரம் சராசரியாக வருடத்திற்கு 50 முதல் 60 கிலோ பழ மகசூல் தரவல்லவை.

 

நடவு முறை

வில்வ மர நாற்றுகளை நடுவதற்கு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உள்ள பருவம் ஏற்றது. நடவு குழியின் அளவு 3”X3”X3” கொண்டதாக இருக்க வேண்டும். எட்டு மீட்டர் இடைவெளியில் வரிசையாக குழிகள் எடுத்து நட்டால் ஒரு ஏக்கர் நடவிற்கு 70 கன்றுகள் நடலாம்.

ஒவ்வொரு நடவு குழிக்கும் கன்று நடும்போது மண்ணுடன் 50 கிலோ தொழு உரம் மற்றும் ஒருகிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து நடவேண்டும். மழை இல்லாவிட்டால் 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும்.

 

பராமரிப்பு

நடவு செய்த கன்றுகள் சாய்ந்து விழுந்து விடாமல் இருக்க முதலில் குச்சி நட்டு கட்டி விடவேண்டும். நட்டு ஒரு வருடம் கழித்து ஏப்ரல் மே மாதத்தில் மூன்று அடி உயரத்தில் செடியை வெட்டி விடுவது அவசியம் ஆகும்.

இதன் மூலம் நிறைய புதிய கிளைகள் உருவாகும். மீண்டும் ஆறு மாதம் கழித்து 4 கிளைகளை பாதி அளவு வெட்டி விடவேண்டும். இவை ஒவ்வொன்றிலும் நான்கு கிளைகளை விட்டு வளர விடலாம்.

பாசன வசதி இருந்தால் குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் உளுந்து, பாசிப்பயறு, தட்டை, துவரை, ஆமணக்கு, பயிர்களை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம்.

பத்துவருட வயதானதும் மரங்களுக்கு உரம் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும். நல்ல வளர்ச்சி இல்லை என்றால் அதற்கு முன்பே வைக்கலாம். ஆடி, அவணியில் மழை பெய்யும் பொழுது மரத்துக்கு 50 கிலோ தொழு உரம் இடலாம்.

 

அறுவடை

ஒட்டுக்கட்டிய மரங்கள் 3 முதல் 4 வருடங்களிலும் விதைக்கன்று மரங்கள் 7 முதல் 8 வருடங்களிலும் காய்க்கத் தொடங்கும். மே, ஜூன் மாதங்களில் பூக்க ஆரம்பித்து அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் அறுவடைக்கு தயாராகும்.

பழங்களை கீழே விழாமல் பறிக்க வேண்டும். பத்து வருட வயதான வில்வ மரம் ஒன்று சராசரியாக 150 முதல் 200 பழங்களைக் கொடுக்கும்.

எந்த சூழ்நிலையிலும் வளர்ந்து சர்வரோக நிவராணியாக விளங்கும் வில்வ மரம் வறட்சிப் பகுதி விவசாயிகளுக்கு வியத்தகு வரப்பிரசாதம்.