நமது உடலிலிருந்து வியர்வை வெளியேறுவது ஒரு சாதாரண செயலாக நமக்குத் தோன்றலாம்; ஆனால் அதன் பின் இருக்கும் அறிவியல் பிரம்மாண்டமானது.
நமது உடலில் சுரக்கும் ஒரு துளி வியர்வையை மட்டும் வைத்து, நமக்கு இருக்கும் உடல் உபாதைகளை கண்டறிவது சாத்தியமே!
பிறந்தது முதல், நம் உடலில் நிகழும் பல உடற் செயல்களில் ஒன்று ‘வியர்த்தல்’. இது அவசியமும், இயற்கையுமான உடலின் தன்னிச்சையான செயல் ஆகும்.
இருப்பினும், கால நிலை, ஆரோக்கியம், உடல் எடை உள்ளிட்ட சில காரணிகளை பொருத்து ஒவ்வொருவருக்கும் வியர்த்தலின் அளவு மாறுபடுகிறது.
பொதுவாக, கடினமாக உழைக்கும் பொழுதும், உடற் பயிற்சி செய்யும் பொழுதும் வியர்வையின் அளவு அதிகரிக்கிறது. அதீத உணர்ச்சி வெளிப்பாடு, மன அழுத்தம் முதலிய காரணங்களாலும், வியர்வை அதிகரிக்கிறது.
இப்பதிவில், வியர்வைக்கான காரணத்தையும், அதன் பகுதி பொருட்களையும் பற்றி காண்போம்.
வியர்த்தலின் அடிப்படையே, உடலின் அதிகப்படியான வெப்பத்தைக் குறைத்து, சராசரி உடல் வெப்பநிலைக்கு கொண்டு வருவது தான்.
உடலின் சராசரி வெப்பநிலை 36.5 –லிருந்து 37.5 டிகிரி செல்சியஸ் (அல்லது 97.7–லிருந்து 99.5 ஃபாரன்ஹீட்) ஆகும். ஆரோக்கியமான உடற் செயல்களுக்கு, இவ்வெப்பநிலை அவசியம்.
இருப்பினும், முன்னர் பார்த்தது போல், கடின உடல் உழைப்பு, அதிகப்படியான உணர்ச்சி வெளிப்பாடு முதலிய செயல்களின் மூலம், உடலின் சராசரி வெப்பநிலை சற்று உயர்வடைகிறது. அதிகரித்த உடல் வெப்பத்தை, வியர்வை தணிக்கிறது.
வியர்வை, உடல் வெப்பத்தை எப்படி தணிக்கிறது?
இக்கேள்விக்கான விடையை, ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம்.
கோடை காலத்தில், வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள பல வழிமுறைகள் கையாளப்படுகிறது. இதில், குறிப்பாக, மொட்டை மாடி வீட்டின் மேல் (கான்கிரீட்) தளத்தில் நீரை தெளிக்கும் முறையினை அறிவீர். இதன் காரணம் என்ன?
கடுமையான வெயிலின் வெப்பத்தால், வீட்டின் தளம் அதிகமாக வெப்பமடைந்திருக்கும். ஊற்றப்படும் நீர், தளத்தின் வெப்பத்தை உறிஞ்சிக்கொண்டு நீராவியாக மாறுகிறது. இதனால், கான்கிரீட் தளத்தின் வெப்பம் குறைக்கப்படுகிறது. இதன்மூலம், இரவு நேரத்தில், வீட்டினுள் (வெப்பத்தால்) புழுக்கமாக இருப்பதில்லை.
இது போன்றே, உடலின் சூட்டைக் குறைக்க, வியர்வை பயன்படுகிறது. அதாவது, வியர்த்தலின் பொழுது வெளிவரும் நீர், உடலின் வெப்பத்தால், நீராவியாகி, உடலின் சூடு தணிகிறது.
சரி, அதிகரிக்கும் வெப்பத்தை, உடல் எப்படி உணர்ந்து, வியர்வையைச் சுரக்கிறது?
எல்லா செயல்களையும் கட்டுப்படுத்தும் மூளையின் மூலம் தான், இது சாத்தியப்படுகிறது! குறிப்பாக, மூளையில் இருக்கும், வெப்ப உணர் நரம்புகளின் மூலமாக, உடலில் அதிகரிக்கும் வெப்பத்தை மூளை கண்டுபிடிக்கிறது.
உடனே, இத்தகவல், தோலின் அடிப்புறத்தில் இருக்கும் எக்கிரைன் (Eccrine), மற்றும் அப்போக்கிரைன் (Apocrine) வியர்வை சுரப்பிகளுக்கு அனுப்பப்படுகிறது. உடனே, இச்சுரப்பிகள் வியர்வையைச் சுரக்கின்றன.
பொதுவாக, உணர்ச்சியின் மூலம் உள்ளங்கை, நெற்றி, உள்ளங்கால், அக்குள் போன்ற பாகங்களில் வியர்வை சுரக்கிறது. உடல் வருத்தம் காரணமாக, உடலின் எல்லா பகுதிகளிலும் வியர்வை சுரக்கிறது.
வியர்வையில் இருக்கும் வேதிபொருட்கள் யாவை?
வியர்வையின் பெரும் பகுதி நீர் ஆகும். இதனைத் தவிர, சில கனிம உப்புக்கள், லாக்டிக் அமிலம், யூரியா போன்றவைகளும் வியர்வையில் குறைந்த அளவு இருக்கின்றன.
கனிம உப்புக்களின் அளவு பல காரணிகளை பொருத்து மாறுபடுகிறது. இருப்பினும், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மற்றும் மெக்னீசியம் முதலிய கனிம உப்புக்கள், பொதுவாக, வியர்வையில் இருக்கின்றன.
இவைகளை தவிர, மிகமிக குறைந்த அளவு (trace elements), இரும்பு, காப்பர், துத்தநாகம் உள்ளிட்ட உலோக அயனிகளும், வியர்வையின் மூலம் வெளியேற்றப்படுகின்றன.
(உடம்பில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது சிறுநீரகம் என்பதை நினைவில் கொள்க).
வியர்வை, உடல் சூட்டினை குறைக்கிறது. சரி, ஆனால், இரும்பு, காப்பர் போன்ற உலோக அயனிகளையும் வெளியேற்றுகிறதே! இதனால், ஏற்படும் உப்புக்களின் இழப்பை ஈடு செய்ய வேண்டுமா?
இது குறித்து, நிபுணர்களின் பொதுவான கருத்து, தேவையில்லை என்பதே! அதாவது, தேவையற்ற உப்புக்களே, வியர்வையின் மூலமாக வெளியேற்றப்படுவதால், நம் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது நிபுணர்களின் கருத்து.
நம்மை அறியாமல் நிகழும் சிறுசிறு மாற்றங்களையும், உடல் தானே விரைந்து கண்டறிந்து, அதன் பாதிப்புகளை விரைந்து சரி செய்கிறது.
இதற்கான இயற்கையின் (உடல்) கட்டுமான தொழில்நுட்பம் பிரம்மாண்டமானது. இப்பிரம்மாண்டத்தில் ஒரு கூறுதான், வியர்வை!
ஆம், உடல் (அதிகப்படியான) சூட்டை கண்டறிந்து, அதனை தணிப்பதோடு, தேவையற்ற கழிவுகளையும் வெளியேற்றுகிறது.
சரி, வியர்வையின் அறிவியலை அறிவதன் நோக்கம் என்ன?
காரணம் இருக்கிறது! ஒருவரது உடலில் சுரக்கும் ஒரு துளி வியர்வையை மட்டும் வைத்து, அவருக்கு இருக்கும் உடல் உபாதைகளை கண்டறிவது சாத்தியமே! இதற்காக, வியர்வை உணரிகள் (sweat sensor) பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இதுகுறித்த ஆய்வுகளும், மேம்பாட்டு முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் கனிம வேதியியல் துறை
கன்செப்ஷன் பல்கலைக்கழகம், சிலி
sureshinorg@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!