விருதுநகர் மதுரை திருநெல்வேலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் இவ்வூர் பல வரலாற்றுச் சான்றுகளைத் தன்னகத்தே கொண்டது. பழங்காலத்தொட்டு 20-ஆம் நூற்றாண்டு வரையான வரலாற்றுச் செய்திகளையும் தருகின்றது.
விருதுநகர் தொடக்க காலத்தில் விருதுக்கால்பட்டி என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு அழைக்கப்பட்டதற்கான கதை ஒன்று மக்களிடையே நிலவி வருகின்றது. பல வருடங்களுக்கு முன் பல விருதுக் கொடிகளைப் பெற்ற மாவீரன் ஒருவன் இவ்வூர் மக்களிடம் வந்து தன்னை வெல்வார் உண்டோ என்று சவால் விட்டான். இவ்வூர் மக்கள் அவன் சவாலை ஏற்றுக் கொண்டு அவனோடு போரிட்டு அழித்து அவனது விருதுக் கொடிகளைக் கைப்பற்றினர். அதனால் இவ்வூர் ‘விருதுக்கால்பட்டி’ என்றழைக்கப்பட்டு நாளடைவில் ‘விருதுப்பட்டி’ என்ற வழங்கலாயிற்று.
விருதுநகர் ஊரின் பழமையைப் பெருங்கற்காலத் தடையங்களைக் கொண்டு அறிந்து கொள்ள முடிகின்றது. முதுமக்கள் தாழிகள் பல இவ்வூரில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இதனால் இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பது தெரிகிறது.
மேலும் விருதுநகர் சிவன் கோயிலும் பழமைத் தொடர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு ஒன்று, சண்டிகேசுவரர் எழுந்தருளியிருக்கும் தனிக்கோயிலின் சுவர்ப் பகுதியில் காணப்படுகின்றது. அக்கல்வெட்டு – அரசு அதிகாரிகளான: புங்கநாட்டு விழுப்பதரையன், மல்லி நாட்டுச் ‘சோரன் உய்ய நின்றாடுவானான குருகுலத்தரையன்’ ஆகியோர் செய்த பணிகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. சிவன் கோயில் முற்றிலுமாகத் திருப்பணி செய்யப்பட்டு விட்டதால் கல்வெட்டுகள் காணப்படவில்லை. அதனால் கல்வெட்டுகள் மூலம் விருதுநகர் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை அறியமுடியாது போயிற்று.
விருதுபட்டி என்றழைக்கப்பட்ட விருதுநகர் 1923-ஆம் ஆண்டில் தான் விருதுநகர் என பெயர் மாற்றம் பெற்றது எனலாம். விருதுநகர் ஊரிலுள்ள மாரியம்மன் கோயில் புகழ் பெற்றதாகும். பங்குனி மாதத்தில் நடைபெறும் இக்கோயில் திருவிழாவில் ‘அலகு குத்துதல்’ ‘பூக்குழி இறங்குதல்’ (தீ மிதித்தல்) போன்ற திருவிழாச் சடங்குகள் புகழ் பெற்றன. வெயில் உகந்த அம்மன் கோயிலும் இத்தகு சிறப்பைக் கொண்ட ஒரு கோயிலாகும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!