விருத்த குமார பாலரான படலம்

விருத்த குமார பாலரான படலம், தன்பக்தையான கவுரிக்கு வீடுபேற்றினை அளிக்கும் பொருட்டு சொக்கநாதர் முதியவர் வடிவில் காட்சி தந்து இளைஞராகி, குழந்தையாக மாறியதை குறிப்பிடுகிறது.

கவுரியின் சிவபக்தி, புகுந்த இடத்தில் கவுரிக்கு நேர்ந்த கொடுமை, கவுரி துன்பத்திலும் சிவனடியாருக்கு சேவை செய்தல் என ஒவ்வொரு நிகழ்வும் அழகாக இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.

இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் 23-வது படலமாக அமைந்துள்ளது.

கவுரியின் சிறப்பு

விக்கிரம பாண்டியனின் ஆட்சியில் மதுரையில் விருபாக்கன், சுபவிரதை என்ற அந்தண தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் சொக்கநாதரையும், மீனாட்சி அம்மையையும் போற்றி சிவனைப் வழிபாடு செய்து வந்தார்கள்.

அவ்விருவருக்கும் குழந்தைப்பேறு நீண்ட நாட்கள் கிடைக்கவில்லை. பின்னர் சொக்கநாதரின் திருவருளால் பெண்குழந்தையைப் பெற்றார்கள். அவளுக்கு கவுரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.

குழந்தை கவுரி சிறுவயதிலேயே அம்மையப்பரிடம் அன்பு பூண்டு இறைபக்தி மிக்கவளாய் விளங்கினாள். சிறிது விவரம் தெரிந்ததும் கவுரி ஒருநாள் தனது தந்தையிடம் “அப்பா எனக்கு வீடுபேற்றினை அளிக்கும் மந்திரத்தை கூறுங்கள்.” என்று கேட்டாள்.

விருபாக்கனும் பராசக்தியின் மந்திரத்தை தனது மகளுக்கு உபதேசித்தார். கவுரியும் இடைவிடாது பராசக்தியின் மந்திரத்தை உச்சரித்து வந்தாள். அவளுக்கு மணப்பருவம் எட்டியது.

கவுரியின் திருமணம்

விருபாக்கன் தனது மகளுக்கு ஏற்ற வரனைத் தேடத் துவங்கினார். அப்பொழுது ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு வைணவத்தைச் சார்ந்த இளைஞன் ஒருவன் பிச்சை கேட்டு வந்தான்.

அவனைப் பார்த்ததும் விருபாக்கன் ‘இவனே தனது மகளுக்கு ஏற்ற வரன்’ என்று முடிவு செய்து கவுரியை அவனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார் விருபாக்கன்.

வீடுபேற்றினை விருப்பிய கவுரி தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஏற்ப தந்தையின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டாள். இதனைக் கண்ட விருபாக்கனின் மனைவியும் அவனுடைய சுற்றத்தாரும் ‘ இவன் யார்?, ஊரும், பேரும் தெரியாத இவனுக்கு இப்பெண்ணை திருமணம் செய்து விட்டாரே. விதியின் வழியில் மதி செல்லும் என்பது இதுதானோ’ என்று எண்ணிக் கலங்கினர்.

பின் கவுரியை அவளது கணவனுடன் சீர்கொடுத்து அனுப்பி வைத்தனர். வைணவ இளைஞன் தன் மனைவியோடு தன் இல்லத்தை அடைந்தான்.

சிவநெறியைப் பின்பற்றி வாழும் கவுரியை அவளுடைய மாமனாருக்கும், மாமியாருக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் அவளை பெரிதும் துன்பப்படுத்தினர்.

சொக்கநாதர் சிவனடியாராக வருதல்

ஒருநாள் கவுரியின் வீட்டார் உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக வீட்டினைப் பூட்டிவிட்டு கவுரியை தனியே விட்டுவிட்டு சென்று விட்டனர்.

அப்பொழுது கவுரி ‘ஒரு சிவனடியாரையும் காணாது என்னுடைய கண்கள் இருண்டு விடும் போல் உள்ளதே’ என்று எண்ணினாள். அப்பொழுது சொக்கநாதர் முதிய சிவனடியாராக கவுரியின் முன் தோன்றினார்.

பலநாட்கள் உணவின்றி வருந்துபவர் போல் காணப்பட்டார். கவுரியும் அவரிடம் மிக்க அன்பு கொண்டு அவரை வரவேற்றாள். சிவனடியார் தான் பசியோடு வந்திருப்பதாக கவுரியிடம் தெரிவித்தார்.

அதனைக் கேட்ட கவுரி “வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டார்களே, நான் என்ன செய்வேன்?” என்று கேட்டாள். அதற்கு

சிவனடியார் “நீ உன் கையினை கதவின் பூட்டில் வை. கதவு திறந்து கொள்ளும்.” என்று கூறினார். அதனைக் கேட்ட கவுரி கதவின் பூட்டில் கைவைத்து கதவினைத் திறந்து உள்ளே சென்று சமைக்கத் தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் சமையலை முடித்து சிவனடியாரிடம் வந்து “ஐயா, திருவமுது செய்ய வாருங்கள்” என்று கூறினாள். கவுரியின் வேண்டுகோளை ஏற்ற முதிய சினவடியாரும் கவுரி அளித்த உணவினை தேவாமிர்தம் போல் உண்டு மகிழ்ந்தார்.

பின் முதிய சிவனடியார் இளமையான காளைப் பருவத்தினரைப் போல் மாறி கவுரி முன் காட்சி அளித்தார். அதனைக் கண்ட கவுரி திகைத்து நின்றாள். அப்போது திருமணத்திற்கு சென்ற கவுரியின் வீட்டார் வந்தனர்.

உடனே இறைவனார் சிறுகுழந்தையாக மாறி தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் அழுது கொண்டு கிடந்தார். குழந்தையின் நெற்றியில் திருநீறு பூசப்பட்டிருந்தது.

கவுரிக்கு வீடுபேற்றினை அளித்தல்

வீட்டிற்குள் வந்த கவுரியின் மாமியார் கவுரியிடம் “இக்குழந்தை யாது?” என்று கேட்டாள். அதற்கு கவுரி “தேவதத்தன் என்பவன் தன் மனைவியுடன் வந்து தன்குழந்தையை சிறிது நேரம் பார்த்துக் கொள்வாயாக என்று கூறிச் சென்றான்” என இறைவனின் அருளினால் கூறினாள்.

இதனைக் கேட்ட கவுரியின் மாமனும் மாமியும் கோபம் கொண்டு “சிவபெருமானிடம் அன்பு பூண்ட நீங்கள் இருவரும் வீட்டை விட்டுச் செல்லுங்கள்” என்று கூறி வீட்டைவிட்டு விரட்டி விட்டனர். வீட்டைவிட்டு வெளியேறிய கவுரி குழந்தையின் திருமுகத்தைப் பார்த்தவாறு அம்மையப்பரை மனதில் நிறுத்தி உமாதேவியாரின் திருமந்திரத்தை உச்சரித்தாள்.

என்ன ஆச்சர்யம்|. குழந்தை மறைந்து விட்டது. சிவபெருமான் இடப வாகனத்தில் காட்சியளித்தார். அக்காட்சியைக் கண்ட கவுரி சிவானந்த கடலில் ஆழ்ந்தாள். சிவபெருமான் கவுரிக்கு வீடுபேற்றினை வழங்கினார்.

இப்படலம் கூறும் கருத்து

தனது வீட்டினர் துன்புறுத்தியபோதிலும் இறைவனின் மீதும் தனது கொள்கையின் (வீடுபேற்றினை அடைதல்) மீதும் கவுரி கொண்டிருந்த நம்பிக்கையானது அவளுக்கு அதனைக் கிடைக்கச் செய்தது.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார், தன்னம்பிக்கை வெற்றி தரும் ஆகியவை இப்படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் யானை எய்த படலம்

அடுத்த படலம் கால் மாறி ஆடின படலம்

Comments are closed.