விலங்குகளின் சமூக இடைவெளி பற்றி அறிவோம்

இன்றைக்கு கொரோனா என்ற வைரஸ் தொற்று நோய் காரணமாக, மக்கள் எல்லோரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் தொற்றுநோய் பரவுவதைத் தவிர்க்க, சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றன.

அதனை விளக்குவதே விலங்குகளின் சமூக இடைவெளி – ஓர் அறிமுகம் என்ற இக்கட்டுரை.

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் என்பது எல்லோருக்கும் அசௌரியமான ஒன்றுதான். ஆனால் இன்றைக்கு இதனைக் கடைப்பிடித்தல் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது.

மனிதனைத் தவிர விலங்குகள் பலவும், தன்னையும் தங்களுடைய இனத்தினையும் தொற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சமூக இடைவெளியை சத்தமில்லாமல் பின்பற்றி வருகின்றன.

இவ்விலங்குளில் எறும்பு முதல் மனிதக் குரங்கு வரை அடக்கம். அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

 

கட்டெறும்பு

கட்டெறும்பு
கட்டெறும்பு

 

எறும்புகள் கூட்டமாக‌ வாழும் இயல்புடையவை. மூளையில் உள்ள நியூரான்கள் கூட்டாகச் செயல்பட்டு, உடலியக்கம் நடைபெறுவதுபோல, இவை கூட்டாகச் செயல்பட்டு, சூப்பர் ஆர்கானிசம் என்று பெயர் பெறுகின்றன.

எறும்புகளில் தொற்றுநோய் பரவும்போது, அவை சமூக விலகலைக் கடைப்பிடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எறும்புகளின் சமூகஅமைப்பில், செவிலிய எறும்புகள் குழந்தை எறும்புகளை உணவளித்து பாதுகாக்கின்றன.

வேலைக்கார எறும்புகள் உணவினைத் தேடி வெளியில் செல்கின்றன. அவ்வாறு அவை வெளியே செல்லும்போது சிலசமயங்களில் நோய்க்கிருமிகளை கொண்டு வருகின்றன.

நோய்க்கிருமியால் பாதிப்படைந்த வேலைக்கார எறும்புகள், நோயின் தாக்கத்தை உடனடியாக அறிந்து கொண்டு, கூட்டிற்குச் செல்லாமல் வெளியே காலத்தைக் கடத்துகின்றன.

கூட்டத்தில் உள்ள மற்ற எறும்புகளுடன், குறைந்த அளவு தொடர்பினையே கொண்டிருக்கின்றன. இதுவே தொற்றுநோய் பரவாமல் இருக்க, எறும்புகள் பின்பற்றும் சமூக இடைவெளி ஆகும்.

 

தேனீக்கள்

தேனீக்கள்
தேனீக்கள்

 

தேனீக்கள் எறும்புகளைப் போன்று கூட்டு வாழ்க்கையைப் பின்பற்றுகின்றன. கூட்டமாக ஓரிடத்தில் ஒட்டி வாழ்ந்தாலும் இவை தொற்றுநோயை விரைவாகக் கண்டறிந்து, துரிதமாகச் செயல்பட்டு, தனிவழியைக் கடைப்பிடித்துத் தன்னினத்தைக் காக்கின்றன.

தேனீக்களின் லார்வாக்களில் பாக்டீரியல் தொற்று உண்டாகும்போது, பராமரிப்பு வேலைக்கார தேனீக்கள், தங்களின் முகர்திறன் மூலம் தொற்று உள்ள லார்வாக்களை இனம் கண்டு கொள்கின்றன.

உடனே தொற்று லார்வாவை, தேன்கூட்டிலிருந்து அகற்றி, நோய்ப்பரவலை தடுக்கின்றன.

 

அமெரிக்கன் புல் தவளை

அமெரிக்கன் புல்தவளைகளின் தலைப்பிரட்டை
அமெரிக்கன் புல் தவளைகளின் தலைப்பிரட்டை

 

அமெரிக்கன் புல் தவளைகள் தங்களின் தலைப்பிரட்டை (Tad Pole) பருவத்தில், ஆபத்தான ஒருவித பூஞ்சை தொற்றுநோயை தடுப்பதில், திறமையானவைகளாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வகை தலைப்பிரட்டையானது கேண்டிடா ஹுமிகோலா என்ற நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட தலைப்பிரட்டையை, எளிதில் அடையாளம் கண்டு கொள்கிறது.

பின் நோய்த்தொற்றை தவிர்க்கும் பொருட்டு, தான் கண்டறிந்த தகவலை ஏனைய தலைப்பிரட்டைகளுக்கும் தெரிவித்து, அவைகளை பாதுகாப்பாக இருக்கச் செய்கிறது.

 

குரங்கு

மேற்கு தாழ்நிலக் கொரிலா
மேற்கு தாழ்நிலக் கொரிலா

 

கூட்டு சமூகமாக வாழும் மேற்கு தாழ்நிலக் கொரிலாக்களில், பெண் கொரிலாக்கள் தொற்று நோயைத் தடுப்பதற்காக, ஒரு கூட்டத்தை விட்டு விலகி, மற்றொரு கூட்டத்தில் சேருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வகை விலங்குகளில் உண்டாகும் யாவ்ஸ் எனப்படும் பாக்டீரியல் நோய், பாதிக்கப்பட்ட விலங்குகளின் முகத்தில் புண்களை உண்டாக்குகிறது.

இதனைக் கண்டதும் நோய் தொற்றைத் தவிர்க்க பெண் கொரிலாக்கள், ஆண்களையும் அக்கூட்டத்தையும் விட்டு விலகி, ஆரோக்கியமான வேறு கூட்டத்துடன் இணைந்து கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

சிம்பன்சி
சிம்பன்சி

 

சமூகமாக வாழும் மற்றொரு குரங்கினமான மனிதக் குரங்குகள் (சிம்பன்சிகள்), முடக்குதலுக்கு வழிவகுக்கும் வைரஸ் நோயான போலியாவால் பாதிக்கப்பட்ட குரங்கினை, கூட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கின்றன.

மேலும் போலியோவில் இருந்து மீண்ட ஒரு சில குரங்குகளை, மீண்டும் இணைத்துக் கொள்வதாக குடால் என்னும் ஆய்வாளர் தெரிவிக்கிறார்.

 

எலி

எலி
எலி

 

சுவிட்சர்லாந்தில் உள்ள வீட்டு எலிகளில் ஆய்வு நடத்தியபோது, தொற்றுநோய் உள்ள எலிகள், தங்களின் கூட்டத்திலிருந்து, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கின்றன.

நோய்தொற்று உள்ள கூட்டத்தில் உள்ள மற்ற எலிகளுடன், அளவான தொடர்பினை மட்டும் கொண்டு, தொற்றுநோய் பரவாமல் தடுக்கின்றன.

 

மாண்ட்ரில்ஸ் குரங்கு

மாண்ட்ரில்ஸ் குரங்கு
மாண்ட்ரில்ஸ் குரங்கு

 

மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காபோனில் ஆராய்ச்சியாளர்கள், மாண்ட்ரில்ஸ் குரங்குகள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டபோது, தொற்றுநோய் உண்டாகும் போது, அக்குரங்குகளின் நடத்தைகள் ஆச்சர்யம் அளிப்பதாக இருந்ததாகக் கூறுகின்றனர்.

சமூகமாக வாழும் மாண்ட்ரில்ஸ் குரங்குகளின் கூட்டத்தில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குரங்கினை, ஏனைய குரங்குகள் கூட்டத்திலிருந்து முற்றிலுமாக விலக்குவதில்லை.

பாதிக்கப்பட்டவைகளை, சற்று தூரத்தில் தள்ளி இருப்பது உள்ளிட்ட, சீர்திருத்த நடவடிக்கைகளை ஏனைய குரங்குகள் மேற்கொள்கின்றன.

பாதிக்கபட்ட குரங்கின் மலத்தினை முகர்ந்து பார்த்து, நோய் பாதிப்பின் தன்மையை அறிந்து கொள்கின்றன.

நோய்வாய்ப்பட்ட குரங்கு மலத்தின் வேதித்தன்மையானது, ஆரோக்கியமான குரங்கு மலத்தின் வேதித்தன்மையிலிருந்து வேறுபட்டிருந்ததாக, ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து தெரிந்து கொண்டனர்.

நோயிலிருந்து மீண்ட குரங்குகளை, அவற்றின் மலத்தினை முகர்ந்து பார்த்து, ஆரோக்கியமான குரங்குகள் தங்களின் கூட்டத்தில்  சேர்த்துக் கொள்கின்றன.

 

குருதியுண்ணும் வெளவால்கள்

குருதியுண்ணும் வெளவால்கள்
குருதியுண்ணும் வெளவால்கள்

 

குருதியுண்ணும் வெளவால்கள், நூற்றுக்கணக்காக கூட்டமாக வாழும் இயல்புடையவை. ஒரு குருதியுண்ணும் வெளவாலுக்கு, ஒருநாளைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு இரத்தம் தேவைப்படுகிறது.

தொடர்ந்தாற் போல் மூன்று நாட்கள் குருதி உண்ணவில்லை என்றால், இவற்றால் உயிர் வாழ இயலாது.

ஆதலால் கூட்டத்தில் உள்ளவைகளில் சிலவற்றிற்கு, உணவான குருதி கிடைக்கவில்லை என்றால், உணவு உண்டவை தங்களிடமிருந்து குருதியை, பட்டினியாக உள்ளவைகளுக்கு வழங்குகின்றன.

உயிர் பிழைத்திருப்பதற்காக, அவைகள் சமூக வலைப் பின்னலைப் பின்பற்றுகின்றன.

கூட்டமாக இருக்கும் குருதியுண்ணும் வெளவால்கள், எவ்வாறு தொற்றுநோயிலிருந்து தங்களைப் பாதுகாக்கின்றன என்று ஆய்வு மேற்கொண்டனர்.

பாதிப்படைந்தவை கூட்டத்தில் இருக்கும் மற்றவைகளிடம், சமூக விலகலைப் பின்பற்றுகின்றன. அதே நேரத்தில் தங்களின் குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் தொடர்பில் இருக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

விலங்குகளின் சமூக இடைவெளி பற்றி அறிந்து கொண்டீர்கள் தானே.

அவை போல் நாமும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் இருக்க, சமூக இடைவெளியைப் பின்பற்றி, நம்மையும் நம்மினத்தையும் காப்போம்.

தொகுப்பு: வ.முனீஸ்வரன்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.