ஒருநாள் இரவு இராமுவும் சோமுவும் வெளியூரிலிருந்து தங்கள் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தொலைவில் ‘மினுக் மினுக்’ என்று வெளிச்சம் ஒன்று தெரிந்தது. இவர்களும் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தனர்.
அப்போது அவர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்.
“இவ்வளவு சின்ன வெளிச்சமாகத் தெரிகிறதே, சைக்கிள் தான் அது” என்றான் இராமு.
“இல்லை! இல்லை! இவ்வளவு மெதுவாக அசைவதைப் பார்த்தால் அது மாட்டு வண்டி தான்!” என்றான் சோமு.
இதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெளிச்சம் அவர்களை நெருங்கி வந்து விட்டது. அது என்னவென்று காணும் ஆர்வத்தோடு இருவரும் அதை நோக்கி முன்னிலும் வேகமாக முன்னேறிச் சென்றனர்.
எதிரில் யாரோ ஒரு கிழவன் கையில் விளக்கொன்றை ஏந்தி மெல்ல மெல்ல தள்ளாடி நடந்து வந்தான்.
இருவருக்கும் ஒரே ஆச்சர்யமாக இருந்தது. விளக்கைக் கொண்டு அவன் எதையோ தேடுவது போலவும் இருந்தது.
எனவே அவனை நெருங்கி “என்ன தேடுகிறாய்?” என்று இருவரும் கேட்டனர்.
கிழவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.
அப்போதுதான் இருவருக்கும் விஷயம் விளங்கியது. எதிரில் வந்தவன் ஒரு குருடன்!
“அடப்பாவமே! கண் தெரியாதா..? கண் தெரியாத உனக்கு விளக்கு எதற்கு? இது இருந்தாலும் இல்லையென்றாலும் உனக்கு ஒன்று தானே!” என்று கேலியாகச் சிரித்தனர்.
கிழவன் அமைதியாக “ஐயா, இது எனக்கல்ல! உங்களைப் போல் எதிரிலே வருகிறவர்களுக்காகத் தான் இதைக் கொண்டு போகிறேன். ஏனென்றால் நான் ஒருவன் வருவது உங்களுக்கெல்லாம் தெரிய வேண்டாமா…?”என்றான்.
அதன் பிறகு இருவரும் வாயைத் திறக்கவே இல்லை.
மறுமொழி இடவும்