விளையாட்டுகள் தோன்றிய வரலாறு

விளையாட்டுகள் தோன்றிய வரலாறு என்ற இந்த கட்டுரை, எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை.

விளையாட்டின் இயல்புகள்

விளையாட்டுகள் என்பன, மனிதர்களுக்குள்ளே இயற்கையாக அரும்பி மலர்ந்துவரும் அருமை நிறைந்ததாகும்.

விளையாட்டுகள் எப்பொழுதும் எல்லோராலும் விரும்பப்படும் இனிமை நிறைந்ததாகும்.

எந்த வயதினரும் எந்தப் பிரிவினரும், சாதிமத பேதமின்றி, ஆண்பெண் வேறுபாடின்றி, ஏழை செல்வர் என்ற ஏற்றத்தாழ்வின்றி, சமமாகப் பங்கு பெறுகின்ற அளவுக்கு எளிமை நிறைந்ததாகும்.

இத்துடன், பங்கு பெறுகின்ற எல்லோருமே கூடுதல் குறைச்சலின்றி இன்பம் கொடுக்கும் பெருமை நிறைந்ததாகும்.

விளையாட்டுகள் தோன்றிய வரலாறு

விளையாட்டுகளின் தோற்றத்தை நாம் ஆராயும் பொழுது, மனித வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும், மறுமலர்ச்சிக்காகவும் தோன்றியது போலவேதான் நமக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கின்றன.

காட்டிலே ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதர்கள், மிருகங்களின் பசிவேகத் தாக்குதல்களுக்குப் பயந்து, பல சமயங்களில் இரையாகிப் போயினர். சில சமயங்களில் தப்பித்துக் கொண்டனர். எப்படி?

வேகமாக ஓடி, பள்ளங்களைத் தாண்டி, கற்களை எறிந்து, மரத்தில் ஏறி, கனமானவைகளை நகர்த்தி வைத்து, இப்படிப் பல முறைகளில் பயந்தவர்கள் தப்பி ஓடி, தலை மறைவாகிப் போயினர் என்பது தான் வரலாறு.

அவற்றைக் கொஞ்சம் நாம் கூர்ந்து கவனித்தால் இன்றைய விளையாட்டு இலட்சியங்கள் எளிதாகவே புரியும்.

விளையாட்டுகள் தோன்றிய விதம்

தப்பி ஓட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளில் வேகமாக ஓடியது ஓட்டப் பந்தயமாக மாறியது.

பள்ளங்களைத் தாண்டியது நீளத்தாண்டலாக மாறியது.

புதர்களை, தடைகளைத் தாண்டியது உயரத்தாண்டலாக மாறியது.

கற்களை கம்புகளை வீசி மிருகங்களை விரட்டிய முறை எறியும் நிகழ்ச்சிகளாக (இரும்புகுண்டு, வேலெறிதல்) மாறியது.

இது விளையாட்டுக்களில் முதல் கட்டத் தோற்றம் என்றால், இரண்டாவது சட்ட வளர்ச்சியையும் நாம் காணுவோம்.

மிருகங்களை எதிர்த்துத் தாக்கிக் கொல்லத் தொடங்கி அவைகளின் மாமிசங்களை உண்ணத் தலைப்பட்டபோது மாமிசத்தின் சுவையை மனிதன் தெரிந்து கொண்டான்.

மாமிசத்தின் சுவை மிருகங்களைத் தேடிக் கொல்லத் தூண்டியது. அதன் ஆரம்பம் தான் வேட்டையாடுதல்.

கொல்லப் பயன்பட்ட ஆயுதங்கள்தான் கூரான கற்கள், கூரான தடி, வேகமாக வேலைசெய்யும் வில் அம்பு போன்றவையாக மாறின.

மூன்றாவது கட்ட விளையாட்டுத் தொடக்கம், கற்கால மனித இனம், ஓரிடத்தில் தங்கி, ஓய்வினை அனுபவித்து, ஒன்றுகூடி சமுதாய வாழ்க்கையை வாழத் தொடங்கியபோது ஏற்பட்டிருக்கக் கூடும்.

இயற்கைத் தாக்குதல்களுக்குப் பயந்து ஒன்று சேர்ந்த மனித இனம், மற்றவர்களை அடிமைப்படுத்தி தலைமைப் பதவியை பெற முனைந்த போது சிறுசிறு கூட்டமாகப் பிரியத் தொடங்கியது.

அந்தந்தக் கூட்டத்திற்கு ஓர் எல்லை, ஒரு தலைவன், அவர்களுக்கென்று பத்திரமான முறைகள், வீரம், பாதுகாப்பு வழிகள் என்றெல்லாம் ஏற்பட்டன.

மற்றவர்களை எதிரிகளாக எண்ணும் வெறித்தனம் மேலோங்கிய போது, அவர்களை அழிக்கப் புதுப்புது ஆயுதங்கள் தயாராயின. போர்கள் அடிக்கடி ஏற்பட்டன.

அமைதி வேண்டி அச்சத்திற்கு ஆட்பட்டு சமுதாயமாக சேர்ந்தவர்கள் இடையே ஆக்ரமிப்பு உணர்ச்சியும் ஆவேச எழுச்சியும் ஏற்பட்டதால், போர்களும் போராயுதங்களும் அளவில் பெருகி, வடிவில் பலப்பல விதங்களில் பிறப்பெடுத்தன.

1. வில் அம்பு

2. வேல்

3. கனமான பொருளை எறிதல்

4. குறிபார்த்து வீசுதல்

5. கத்திச்சண்டை

6. கம்புச் சண்டை

7. குதிரையேற்றம்

8. யானை மீதமர்ந்து சண்டை

9. தேர் மீதேறி சண்டை

10. மல்யுத்தம்

11. குத்துச்சண்டை

இவைகள் எல்லாம் போரில் பயன்படுத்தப்பட்ட சண்டை வழிகள். ஆயுதத் தாக்குதல்கள்.

ஒருவரை ஒருவர் தாக்கி அடக்க மேற்கொண்ட பயங்கர முறைகள் எல்லாம், தற்போது மாறி, புதிய வழியில் மென்மை முறையில் மக்களிடையே பிரபலமாகிக் கொண்டன. இது நாகரிக காலத்தின் நனி சான்ற பெருமை என்று கூறலாம்.

போர்முறைகள் விளையாட்டுக்களாக மாறிய விதம்

உயிர்போகத் தாக்கிக் கொண்ட பயங்கர முறைகள் இன்று வெற்றி  தோல்விக்காக, திருப்தி உணர்வுக்காக திசை மாறி வந்து விட்டன.

வில் அம்பு முறை வில் வித்தையாகிக் கொண்டது.

வேல் எறிந்து தாக்குதல் வேலெறிதலாகி விட்டது.

கனமான பொருள் எறி முறை இரும்புக் குண்டு வீசுதலாகியது.

கத்திச் சண்டை, கம்புச் சண்டை, குத்துச் சண்டை, மல்யுத்தம், எல்லாம் பாதுகாப்புச் சண்டைகளாகி விட்டன.

இப்படியாக விளையாட்டுக்கள் ஒரு அர்த்தம் உள்ளவைகளாகத் தோன்றி, மனிதர்களுக்கு உதவுவதையே ஒரு இலட்சியமாகக் கொண்டு விட்டன.

இயற்கையான உதைக்கும் பண்பிற்கு – கால் பந்தாட்டம்

இயல்பாக பிடிக்க, எறிய – கைப்பந்தாட்டம், எறிபந்தாட்டம், கூடைப்பந்தாட்டம்

கோல்களால் அடித்து அல்லது தள்ளி மகிழும் பண்புக்கு – கிரிக்கெட் ஆட்டம், மென் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், கோல் பந்தாட்டம், பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர் போன்ற ஆட்டங்கள்.

சுண்டி ஆடும் பண்பிற்கு – கேரம் போன்ற ஆட்டங்கள்.

இப்படிப்பட்ட விளையாட்டுக்கள், மனித தேவைக்கேற்ப மனித ஆசைகளுக்கேற்ப பிரிந்து விரிந்து வந்திருப்பது தான் நமக்குப் பேராச்சரியத்தைக் கொடுப்பதாகும்.

உதைக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்க வந்த கால்பந்தாட்டத்தில் இன்று 11 வகை ஆட்டங்கள்.

கோல்களைப் பயன்படுத்தி ஆடும் ஆட்டங்களில் 20 வகை.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்து ஆடும் ஆட்டங்களில் 40 வகை.

மேசையின் மீது அல்லது அட்டைகள் மீது ஆடப்படுகின்றதாக 100 வகைகள், சீட்டாட்டம் என்றாலோ 1000 வகை.

இப்படி ஆயிரக்கணக்காகப் பிரிந்த விளையாட்டுக்கள் அனைத்தும் அர்த்தம் நிறைந்தவைகளாகவே இருக்கின்றன.

விளையாட்டுகள் தோன்றிய வரலாறு தெரிந்து கொண்டோம்; இனி விளையாடி மகிழ்ச்சி கொள்வோம்.

எஸ்.நவராஜ் செல்லையா

 

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.