விளையாட்டு அர்த்தமும் விளக்கமும்

விளையாட்டு அர்த்தமும் விளக்கமும் என்ற இந்தப் பகுதி எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை.

விளையாட்டின் அர்த்தம்

அர்த்தம் உள்ளவைகள் தாம் விளையாட்டுக்கள். அப்படி இருப்பதால் தாம் மனிதகுல ஆரம்பத்திலிருந்தே ஆர்ப்பாட்டமாகத் தோன்றி, உயிரூட்டமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன; படர்ந்து கொண்டிருக்கின்றன.

அதனால் தான், விளையாட்டுக்களை மனிதர்களோடேயே தொடங்கி, மனிதர்களுடனேயே முடிவு பெறுகின்ற மகிழ்ச்சியான செயல்கள் என்று அறிஞர்கள் புகழ்கின்றார்கள்.

ஏனெனில் விளையாட்டுக்கள் என்பன, மனிதரது இயற்கையான இயக்கங்களின் இனிய தொகுப்புகளாகும்.

அதாவது, நிற்றல், நடத்தல், ஓடுதல், தாண்டுதல், தவ்வுதல், ஏறுதல், இறங்குதல், எறிதல், பிடித்தல், அடித்தல், போன்ற பல்வேறு வகையான உடல் உறுப்புக்களின் ஒருமித்த இயக்கங்களின் உன்னத வெளிப்பாடுகளாகவே இந்த விளையாட்டுக்கள் உருவாகி இருக்கின்றன.

ஆட்டம் என்கிறார்கள். விளையாட்டு என்கிறார்கள். இரண்டும், இருவேறு சொற்களாக இருந்தாலும், பெரும் பேறுமிக்கப் பயன்தரும் சொற்களாகவே தோன்றியிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

ஆட்டு என்றால் இயக்கம். அம் என்றால் அழகு. (ஆட்டு +அம்= ஆட்டம்) தனிமனிதர் ஒருவரின் உடல் உறுப்புக்களின அழகான ஆற்றல் மிகுந்த இயக்கங்களே ஆட்டம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

விளையாட்டு என்பது விளை +ஆட்டு என்று பிரிந்து நிற்கிறது. விளை என்றால் விளைந்த அல்லது விருப்பமுள்ள என்றும், ஆட்டு என்றால் இயக்கம் என்று பிரிந்து பொருள் தருவதைக் கண்டு நாம் இன்புறலாம்.

மனிதர்கள் பலர் ஒன்றுகூடி அழகாகவும் ஒழுங்காகவும், ஆன்ற விதிமுறைகள் அனைத்தையும் கடைப்பிடித்துக் கட்டுப்பாட்டுடன் களிப்புடன் ஆடுகின்ற முறைகளையே நாம் விளையாட்டு என்கிறோம்.

தனிமனிதர் ஈடுபடுவதை ஆட்டம் என்றும், பலர்கூடி ஆடுவதை விளையாட்டு என்றும் நாம் இங்கே பொருள் பொதிந்து வந்திருப்பதை அறியும் போது அர்த்தமுள்ளவைகளாக இருப்பதை அறிந்து மகிழ்கிறோம்.

விளையாட்டும் விளக்கமும்

விரும்பியவர்கள் எல்லோரும், தாங்கள் விரும்புகிற இடங்களில் ஒன்று சேர்கிறார்கள். விருப்பமான இயக்கங்களில் ஈடுபடுகின்றார்கள். கால நேரம் பாராமல், வயது வித்தியாசம் நோக்காமல், ஆடுகின்றார்கள்.

இப்படிப்பட்ட எளிமையான கவர்ச்சியுடன், இனிமையான எழுச்சியுடன், பெருகிவரும் புத்துணர்ச்சியுடன் பங்கு பெறுவோர் திகழ்வதால் தான், காலங்காலமாக மக்களினத்தோடு விளையாட்டுக்கள் இடம் பிடித்துக்கொண்டு ஒளிர்கின்றன;மகிழ்கின்றன.

ஆர்வத்துடன் வருபவர் அனைவரும் ஆனந்தம் பெறுகின்றார்கள் என்பது தான் விளையாட்டுக்கள் வழங்குகின்ற வித்தியாசமான பரிசுகளாகும்.

துன்பம் தராத இன்பம் தருகின்ற பொருட்கள் நான்கு என்று கூறவந்த தொல்காப்பியர், செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு என்று சுவைபடத் தொகுத்துக் காட்டுகின்றார்.

தொல்லைகளைத் தவிர்த்துவிட்டு, தொடரும் துயரங்களைப் போக்கிவிட்டு, எந்நேரமும் இன்பத்தையே எல்லோருக்கும் அள்ளித்தருவதால் தான், விளையாட்டுக்கள் எல்லாம் அழிந்துபோகாமல், விஞ்ஞான பூர்வமாக வளர்ந்து கொண்டே வருகின்றன.

விளையாட்டு அர்த்தமும் விளக்கமும் பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டதைப் போல, விளையாடி அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

எஸ்.நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.