விளையாட்டுக்கள் கற்றுத் தரும் ராஜநீதி

விளையாட்டுக்கள் எல்லாம் எங்கும் எப்பொழுதும் அறிவாலயமாகத்தான் விளங்குகின்றன. ராஜநீதி காக்கும் கொள்கைக் கோயிலாகவே காட்சியளிக்கின்றன.

வாருங்கள்! விளையாடுக்கள் கற்றுத் தரும் ராஜநீதி பற்றிப் பார்ப்போம்.

வாழவைக்கும் பயிற்சி

இரண்டு நாய்க்குட்டிகள் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து உருண்டன. கட்டிப்பிடித்துப் புரண்டன.

அந்த நாய்க்குட்டிகளை ஆசையோடு வளர்த்து வரும் சிறுவன், தன் தந்தையிடம் ஓடி, நாய்க்குட்டிகள் சண்டை போட்டுக் கொள்வதைப் பற்றிப் புகார் செய்தான்.

இனிமேல் சண்டை போடாதபடி, ஏதாவது ஏற்பாடு செய்துவிட வேண்டும் என்று தந்தையிடம் கேட்டுக் கொண்டான்.

தந்தையோ இதைக்கேட்டு சிரித்துக் கொண்டார். புகார் செய்த பையனுக்குக் கோபம்.

இப்படி சிரித்துத் தன்னை ஏளனப்படுத்துகிறாரே  என்று எரிச்சல்…ஏமாற்றம்…

“மகனே! அந்த நாய்க்குட்டிகள் சண்டை போடவில்லை. தங்கள் வாழ்க்கைக்காக பயிற்சிகள் செய்து கொள்கின்றன” என்றார்.

“எப்படி?” என்று இமைகளை உயர்த்தினான் பையன்.

இரண்டு குட்டிகளும் தங்கள் பசியென்னும் தேவையை தீர்த்துக்கொள்ள, போராட வேண்டியதாக இருக்கின்றன.

பெரிய நாயாக மாறிவிட்டால், எதிர்த்துவரும் இன்னொரு நாயுடன் சண்டைபோட்டு வென்றால் தானே தின்ன ஏதாவது அதற்குக் கிடைக்கும்!

அதற்காக, இப்பொழுதிருந்தே கவ்வுதல், பிடித்தல், கடித்தல், துரத்தல் போன்ற காரியங்களில் பயிற்சி பெறுகின்றன.

இப்பொழுது இரண்டு குட்டிகளும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. இந்த விளையாட்டுப் பயிற்சிதான் வாழ்க்கைக்கு உதவும் செயல்களாக மாறுகின்றன என்றார் அவர்.

அப்பாவின் விளக்கம் புரிந்தது. ஆமாம்! நாய்க்குட்டிகள் கடித்துக் கொள்கின்றன; காயம் இல்லை; தாக்கிக் கொள்கின்றன; வேகம் இல்லை; அடித்துக் கட்டிப் புரள்கின்றன; ஆத்திரம் இல்லை; விளையாடி மகிழ்கின்றன அவை!

விளையாட்டானது ஒருவரை வாழ்க்கைக்குத் தயார் செய்கிறது. ஆமாம் விளையாட்டுதான் மனிதர்களை மனிதர்களாக வாழவைக்கிறது.

வாழவைக்கும் பயிற்சியைத் தருகிறது. வாழ்வின் உண்மையைப் புரிந்து கொள்ளச் செய்கிறது.

 

தென் அமெரிக்காவில் வாழ்ந்த பழங்குடியினரான சிவப்பிந்திய மக்களில் ஒரு வகையினர், தங்களது குழந்தைகளை ஒன்று திரட்டி, அவர்களை இரண்டு குழுவாகப் பிரித்துக் காட்டுக்குள் அழைத்துச் செல்வார்களாம்.

ஒரு குழுவினர் கையில் வில்லும், விரைந்துபோகின்ற விறைப்போடு, குத்தினால் காயப்படுத்தாத வைக்கோலால் செய்த அம்புகளும் இருக்க, மற்ற குழுவினர் அதுபோலவே ஆயுதந்தாங்கி ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொள்வார்களாம்.

குறிப்பாக அம்பெய்வதுதான் நோக்கம். இடுப்பிற்குக் கீழே அம்பு பட்டுவிட்டால், அப்படி அம்பு பட்டவர்கள் கீழே விழுந்து விடுவார்கள். அவ்வாறு தங்கள் மீது அம்பு விழாமல், மற்றவர்கள் மீது குறியுடன் அம்பினை எய்ய முயல்வார்கள்.

இவ்வாறு தங்கள் எதிர்கால வாரிசுகளை வாழ்க்கைக்குத் தயார் செய்தார்கள் சிவப்பிந்தியர்கள்.

காட்டு வாழ்க்கைக்கு வேட்டையாடுவது முதற் குறிக்கோள்.

எதிரிகளோடு சண்டை போடுவது இரண்டாவது ஆற்றல்.

தற்காப்போடு வாழ்வது மூன்றாம் கலை.

இந்த மூன்று கலைகளிலும் முனைப்புடன் திகழ, இத்தகைய போர் விளையாட்டு அவர்களுக்கு உதவியிருக்கிறது.

தவறு செய்வது மனிதப் பண்பு

ஆகவே, விளையாட்டு என்பது, அதில் ஈடுபடுவோரை வாழ்க்கைக்குத் தகுந்த முறையில் தயார் செய்கிறது என்பதையே நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

அதற்காகப் பயிற்சி பெறுபவர்கள் அனைவரும் தவறு செய்யாமலேயே கற்றுக் கொள்வார்களா என்றால் அதுதான் இல்லை.

மனிதப் பண்பினை விளக்க வருகின்ற மேதைகள் இப்படிக் கூறுவார்கள் ‘தவறு செய்வது மனிதப் பண்பு’ என்று.

தவறு செய்வது சரிதான் என்று அனுமதித்துக் கொண்டே போனால், வாழ்க்கையே தவறிப் போய்விடும் அல்லவா!

தவறு நேர்வது இயற்கை தான். தவறினைத் தவிர்த்து வாழ்வதுதான் மனிதத்தனம். புத்திசாலித்தனமாகும்.

‘தவறுகள் இப்படித்தான்நேரும். நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று சுட்டிக் காட்டுவது விளையாட்டுக்களில் அதிகமாகவே உண்டு.

‘தெரியாமல் நேர்வது தவறு. தெரிந்து செய்வது குற்றம்’ என்ற விளக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விளையாட்டுக்களில் வேகம் உண்டு; மோதல் உண்டு; ஏய்க்கும் தந்திரம் உண்டு. ஆனால், அவற்றிலெல்லாம் நேர்மையும், நீதியும், நியாயமும் இருக்க வேண்டும் என்பதுதான் நியதி.

போராடத் தெரிய வேண்டும்; ஆனால், அங்கே புகைச்சலோ, புன்செயல்களோ நிகழக் கூடாது என்பதுதான் முறை.

இதற்காகத்தான் விளையாட்டுக்களிலே விதிமுறைகள் கடுமையாக இருக்கின்றன. அவற்றை முறையோடு பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயமும் இருக்கின்றன.

ராஜநீதி

‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்பது பழமொழி.

‘நன்னடை நல்கல் வேந்தருக்குக் கடனே’ என்பது புறநானூற்று வரி.

நன்கு வாழச் செய்யும் நெறிமுறைகளைக் கற்றுத்தரும் பொறுப்பு மன்னர்க்கு உண்டு.

ஆனால் நன்னடை மாறி, தீய நடைபோடுபவர்களை உடனே தண்டிக்கின்ற குணமும் மன்னர்க்கு உண்டு. அதைத்தான் ராஜநீதி என்பார்கள்.

தவறுகளை மன்னிக்கத் தூண்டுவது மனித நீதி.

தவறுகளை உடனே தண்டிப்பது ராஜநீதி.

இத்தகைய மனித நீதி, ராஜநீதி முறைகளையும் ஒன்று சேர்த்து பயிற்சிக்களமாக விளங்குவது தான் விளையாட்டுகளாகும்.

எதிர்த்து வருகின்ற எதிர்க்குழுவினரை சமாளித்துப் போராடி, வெற்றி பெற வேண்டும் என்பதுதான் விளையாட்டின் இலட்சியமாகும்.

உணர்ச்சிவசமாகிப் போராடும் பொழுது, தெரியாமல் தவறு நேர்வது இயற்கை. இதை FOUL என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

வெற்றி பெற வேண்டும் என்று வெறிக்கு வசமாகிப் போனவர்கள், விதிமுறைகளை ஏமாற்றி தெரிந்தே தவறிழைப்பார்கள். இதற்குக் குற்றம் என்று பெயர். இதை INTENTIONAL FOUL என்று விதிகள் கூறும்.

தவறிழைக்க அனுமதியுண்டு, இது மனித நீதி. இதற்காகவே விளையாட்டுக்கள் ஆட்டக்காரர்களை தவறிழைக்க அனுமதிக்கின்றன.

அதாவது தவறு செய்யும் பொழுது தான் சரியானது எது, மாற்றிக்கொள்வது எப்படி என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தவறு செய்கின்றவன் தான், சரியான பாதையை அறிந்து, நேர்வழி செல்ல முடியும். இதைத்தான் கற்பிக்கும் முறையில், TRIAL AND ERROR METHOD என்பார்கள்.

முயலாமல் தவறு செய்து, முயன்று திருத்திக் கொள்வது தான் மனிதப்பண்பு.

 

கூடைப் பந்தாட்டத்தில் பாருங்கள்!

ஒருவர் 4 முறைத் தவறிழைக்கலாம். 5 முறை தவறு செய்தால் அவர் தண்டிக்கப்படுகிறார். ஆமாம் ஆடுவதற்கே வாய்ப்பில்லாமல் வெளியேற்றப்படுகிறார்.

ஓட்டப்பந்தயத்தில் பாருங்கள்!

ஒருமுறை தவறாக ஓடத் தொடங்கலாம் (START). இரண்டாவதாக அவர் தவறிழைத்தால் ஓட்டத்திலிருந்தே வெளியேற்றப்படுகிறார்.

விளையாடும் வேகத்தில் ஆட்டக்காரர்களோடு மட்டும் ஒருவர் தவறிழப்பதில்லை. வெளியில் நிற்கும் ஒருவர், பயிற்சியாளர், மேலாளர் இவர்களிடமும் தவறிழைக்க நேர்வது உண்டு.

அப்பொழுதும் தவறிழைப்போர் திருந்த, மன்னிக்கும் நியதிகள் கடைபிடிக்கப்படுகின்றன.

மனிதர்கள் குறைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் நல்வாழ்க்கையின் இலட்சியமாகும்.

அவர்களை சிறப்புறத் தயார் செய்யும் பொறுப்பினை, சிறுவர்களிடமிருந்தே கற்றுத்தரத்தான் விளையாட்டுக்கள் முயல்கின்றன; வழிவழியாக வழிகாட்டிகளாக வருகின்றன.

ஆபத்து விளைவிக்கும் முயற்சியில் ஆடுவோரை, எந்த வித எச்சரிக்கையுமின்றி வெளியேற்றி விடலாம் என்கிற கடுமையான சட்டங்கள் உண்டு. அதையும் ஆராய்ந்த பிறகு தான் அனுமதிக்கப்படுகிறது.

ராஜநீதியும் அப்படித்தான்.

தவறுக்கேற்ற தண்டனை. அது மற்றவர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.

தவறை சுட்டிக் காட்டியும், தவறுக்கு எச்சரித்தும், தவறுக்குத் தண்டனை அளித்தும், ஓர் அமைதி காக்கும் ஆலயமாக விளையாட்டுக்கள் விளங்கி வருகின்றன.

எஸ்.நவராஜ் செல்லையா

 

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.