விழிகளைச் சேருமோ உறக்கம்?

இடப்பக்கம் வலப்பக்கம் என்று மாறி மாறிப் புரண்டு படுத்தார் செல்லம்மா. தூக்கம் வருவேனா என்றது.

கடந்த ரெண்டு வருட காலமாகவே இரவில் மாமி தூக்கம் வராமல் தவிப்பது வாடிக்கையாகி விட்டது.

அலோபதி, ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, நாட்டு வைத்தியம், மூலிகை மருத்துவம், ஹீலர் பாஸ்கர் ஆலோசனை, மருத்துவர் சிவராமன் சொல்வது, பத்மா மாமி சொல்லும் ஆலோசனை, விரல் முத்திரைகள் என்று ஒன்று விடாது யூடியூப் பார்த்து செய்முறைப் பயிற்சி செய்தும் பலன் பூஜ்யமே என்றானது.

மனித ஜென்மம் எடுத்தவர்கள் ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் தூங்க வேண்டும்; குறைந்தது ஏழு ஆறு அல்லது ஐந்து மணிநேரம் வரையாவது தூங்க வேண்டுமென்று அடித்துக் கூறினார்கள் யூடியூப் மருத்துவர்கள்.

அப்படிமட்டும் தூங்காதவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, கைகால் விழுந்து போதல், ஞாபக மறதி, சிறுநீரகக் குறைபாடு, ஹார்ட் அட்டாக், மவுத் அல்சர் போன்றவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது எல்லாமுமோ வர 99.9% வாய்ப்புள்ளதாக பயத்தைக் கலந்து ஆலோசனை கூறினார்கள்.

ஒருமுறை யூடியூப்பில் தற்செயலாய் தூக்கமின்மைக்கான காரணங்களும் மருத்துவ ஆலோசனைகளும் என்று யாரோ ஒருமருத்துவர் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்ட மாமி, மீண்டும் ஒருமுறை அதைக் கேட்க விரும்பி முடிந்து போன வீடியோவை விரலால் தொட, முடிந்தது கதை.

‘கிடுகிடு’ ‘குடுகுடு’ ‘சடசட’ ‘தொபதொப’ ‘திமுதிமு’வென வரிசைகட்டி வந்து நின்றன ஆலோசனை வீடியோக்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்ப் பயமுறுத்த மாமி அரண்டு போனார்.

வழக்கமாய் உடல் நலமில்லாது போனால் சென்று பார்க்கும் மருத்துவரிடம் சென்று தன் தூக்கமின்மைப் பிரர்ச்சனையைக்கூற, அவரும் Anxit 0.5mg மாத்திரையைக் கொடுத்து “மாமி! கவலையேபடாதேள்! இனிமே நன்னா தூங்குவேள்!” என்று சொல்லியனுப்பினார்.

‘அப்பாடி இனிமே ராத்தூக்கமில்லாம தவிக்க வேண்டாம். மாத்ரயப் போட்டுண்டு நன்னா தூங்கலாம்’ என நம்பிக்கையோடு படுத்தவர்க்கு மாத்திரை போட்டுக் கொண்ட முதல்நாள் லேசாய்த் தூக்கம் வருவது போல் கொட்டாவி கிட்டாவி யெல்லாம் வந்தது.

10.47PM என்று காட்டியது செல்திரை.

‘காலம்பர ஆறுமணிக்கு எழுந்தா போறும். ஆச தீர தூங்கணும். ஆறு மணி கூட வேண்டாம். ஒரு அஞ்சு அஞ்சர கூட போதும்’ என்று நினைத்தபடி கால்நீட்டி மல்லாந்து படுத்துக் கொண்டு வலது கால் மீது இடது காலைப் போட்டுக் கொண்டு நெஞ்சில் வலது கை வைத்து அதன்மீது இடது கையை வைத்து (யூடியூப் பார்த்து தெரிந்து கொண்டது) கண்களை மூடிக்கொண்டார்.

தூக்க மாத்திரை போட்டுண்டோம்; தூக்கம் நிச்சயம் வரும்’ என்ற நம்பிக்கையோ அல்லது மாத்திரை நிஜமாக வேலைதான் செய்ததோ மாமி லேசாகத் தூங்க ஆரம்பித்தார்.

ஆனாலும் தெருநாய்கள் குறைப்பதும், ஷிப்ட் முடிந்து திரும்பும் பக்கத்து வீட்டுக்காரரின் டூவீலரின் ஓசையும் மூளைக்குள் எட்டித்தான் பார்த்தன.

தினம் போல் ‘கொட்டு கொட்டெ’ன முழித்துக் கொண்டு கிடக்கவில்லை. டீப்பாக இல்லையென்றாலும் ஓரளவு மாமி தூங்கினார்.

சட்டென விழிப்பு வந்தது மாமிக்கு. ‘அப்பாடீ நன்னா தூங்கிட்டோம். மணி எத்தன இருக்கும் ஒரு அஞ்சு மணின்னா இருக்குமா?’ என்று நினைத்தவரை நடுநிசியில் இருக்கும் ஓர் இறுக்கமும் அமைதியும் யோசிக்க வைத்தது.

‘என்னது கல்லுனு அமைதியா இருக்கு; விடிஞ்சிருந்தா பறவேல்லாம் கத்துமே. ஒன்னயும் காணும். மணிய பாப்பம்’ என்று நினைத்தவர் செல்ஃபோனை எடுத்து ஆன் செய்து பார்க்க மணி 1.05AM என்று காட்டியது.

‘அட ராமா! மணி ஒன்னுதா ஆறுது. தூங்கரதுக்கு முன்னாடி மணிய பாத்தப்ப மணி பத்து நாப்பேத்தேழு ஆயிருந்துது. இப்ப மணி ஒன்னு. அப்ப, வெறும் ரெண்டேகா மணி நேரந்தான் தூங்கிருக்கேனா. என்ன கண்ராவியிது. தூக்க மாத்ரையும் வேஸ்ட்தானா?’ வெறுத்துப் போனார் மாமி.

மாத்திரை போட்டும் அடுத்த அடுத்த நாட்களில் இரண்டுமணி நேரத் தூக்கம் குறைந்து ஒருகட்டத்தில், ‘பழைய குருடி கதவைத் திறடி’ எனத் தூங்காத இரவுகளானது.

டாக்டருக்கு எதிரில் அமர்ந்திருந்தார் மாமி.

“சொல்லுங்கோ! எப்டி இருக்கேள்? நன்னா தூங்கறேளா?”

“ம்.. மாமி! பிபி 165 இருக்கு. அதா ரொம்ப படபடப்பா இருக்கு. ஒரு இசிஜினா எடுத்து பாத்துடுவமா”

“அதா போன மாசம் பாத்தமே!”

“ஓ! பாத்தாச்சுல்ல”

“மிடிலிங் லெஃப்ட் ஆக்ஸிஸ் டீவியேஷன்னு ரிப்போர்ட்ல இருந்துது பாத்தேன்”

“அட, அது ஒன்னும் பிரர்ச்சன இல்ல. அதுவும் வயசானவாளுக்கு; எதுக்கும் எக்கோ டெஸ்ட்னா செஞ்சுடலாம்”

“ஆனா ட்ரெட் மில் வேண்டாம். அதுல நடக்க முடியல. மூச்சு வாங்கறது”

“இப்பக்கி ஏற்கனவே சாப்புடற பிபி மாத்ர ஸ்டார்ப்ரஸ் 50XL லோட ஹில்டெல் 40 எழுதித் தரேன் சேத்து போட்டுக்கோங்கோ. தூக்க மாத்ர வேற எழுதித் தரேன். Clonazepam 1mg எழுதிருக்கேன். இதுக்கும் தூக்கம் வல்லேன்னா Zolecalm 5mg வாங்கிக்கோங்கோ. ஆனா எதாவது ஒருமாத்ரதான் போட்டுக்கணும். எது போட்டா தூக்கம் வருதோ அத கன்டினியு பண்ணுங்கோ. சரியா!”

“ம்.. சரி. ஷுகர், பிபி, கொலஸ்ட்ரால்னு ஒன்னு பாக்கி இல்ல. ப்ச்” என்றார் மாமி.

“மாமி! ஒங்க பசங்கள்ளாம் எங்க இருக்கா? பேசாம அவாளோட போய் இருங்கோளேன். வயசு எழுவத்தஞ்சாச்சு. இனிமேலும் தனியா இருக்கறது”

“ப்ச். புள்ள ஆஸ்த்ரேலியா, பொண்ணு அமெரிக்கா. மாப்ள, மாட்டுப்பொண்ணு, பேரம் பேத்தின்னு எல்லாருந்தா இருக்கா. ஆனா அங்கெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது”

“ஒங்க சாரும் இல்ல”

“ஆமா. அவர் போய் ரெண்டு வருஷமாச்சு”

“சொந்தக்காரா?”

“அதுக்கென்ன? அரசப் பிரதக்ஷனத்துக்குப் பட்சணம் போட்றாப்ல நூத்தியெட்டு சொந்தமிருக்கு. இருக்கியான்னு கேக்கதா யாருமில்ல”

“ஏ! புள்ள பொண்ணு ஒங்களப் பாக்க இந்தியா வரமாட்டா?”

“வருவா, வராத என்ன? வந்தா ஒருமாச லீவுல வருவா மாமியாராம் மச்சினனாம் மச்சினிச்சியாம் நாத்தனாராம் பழைய காலேஜ் ஃபிரண்ட்ஸ், குலதெய்வம் கோயில், நேர்த்திக்கடன் செலுத்தன்னு சில கோயில், துணிமணி எடுக்க டி.நகர், புதுத்தண்ணீன்னு நாலுநாள் சளி, ஜுரம்.

வாரம் ஒருநா ஃப்போன் பண்ணுவா. வீடியோகால் வருவா.

எங்கியோ இருந்துண்டு பேசினா போறுமா? சக்கரன்னு பேப்பர்ல எழுதி நாக்குல தேச்சா திதிக்குமான்ன? ஆனா அவாளசொல்லி குத்தமில்ல. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ன்னு சொல்லிருக்கே. இந்த வயசுல சம்பாதிச்சா தானே உண்டு. அம்மா பருப்புசாதம் அப்பா கொழம்புசாதம்னு இருந்தா முடியுமா?”

“அக்கம் பக்கம்?”

“அப்ப நீங்க யாரோடதாம் பேசுவேள்? அல்லது ஒங்ககிட்ட யாருதாம் பேசுவா?”

“வாரம் ஒருதடவ புள்ளயும் பொண்ணும் பேசுவா. மத்தபடி எப்பவாவது என்னோட ஃபோன் ரிங்காகும்.சிலசமயம் அது ராங் நம்பராகூட இருக்கும்” விரக்தியாய்ச் சிரித்தார் மாமி.

“சிலசமயம் நானே எங்கிட்டக்கப் பேசுவேன்.

“மளிக.. பால்.. காய்கறிலாம்?”

“டோர் டெலிவரி கொண்டு குடுப்பா. காசு குடுப்பேன். அவா என்னத்தப் பேசுவா? அவாளலாம் ஆத்துக்குள்ளதாங் கூப்புடுவாளா? காலங்கெட்டுக் கெடக்கு. அதும் தனியா இருக்கேன். வயசானவ வேற? டிவிலதா காட்றாளே. பாக்கவே பயமாருக்கு”

“எப்டிதான் பொழுது போறுது?”

“எங்க போறுது? டிவில ந்யூஸ்தாம் பாப்பேன். சீரியல், சினிமா, பிக்பாஸ்லாம் புடிக்காது. அந்த வயசெல்லாம் போயாச்சு. தெரிஞ்ச ஸ்லோகங்கள சொல்லிண்டு எதையோ சமச்சு சாப்டுண்டு, தோண்றப்ப யூட்யூப் பாத்துண்டு, புடிக்கில புடிக்கில எதுக்கு சோத்துக்குக் கேடா பூமிக்கு பாரமா இருந்துண்டு ராத்தூக்கமில்லாம தவிச்சுண்டு, ஏண்டா உயிரோட இருக்கோம்னு தோன்றது?”

“ஒங்குளுக்கு இருக்குற ஸ்ட்ரெஸ்தான் இத்தனைக்கும் காரணம், வயசாகி தனியா இருக்கறது ரொம்ப கொடும. பேச ஆளில்லாம, ஒடம்பு நன்னாருக்கேளா, சாப்ட்டேளான்னு இதமா விசாரிக்க ஒத்தருமில்லாம,

“சத்தியமான வார்த்த, நிஜந்தான். வயசான காலத்துல ஏன்னு கேக்க யாருமில்லாம பேச்சுத்தொணைக்கு ஆளில்லாம தனியா இருக்கறது ரொம்ப கொடும. ரொம்ப ரொம்ப கொடும” சொல்லிக் கொண்டே சட்டென எழுந்து கொண்டார் மாமி.

நாலு பேஷண்ட்ட பாக்கற நேரத்த நானே எடுத்துண்ட்டேன். மன்னுச்சுக்கோங்கோ நா கெளம்பறேன்”

டாக்டரின் ப்ரிஸ்கிரிப்ஷனை எடுத்துக் கொண்டு, “வரேன் டாக்டர் சார்” என்றபடி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு வெளியே செல்லக் கதவருகே சென்ற மாமியை பார்த்துக் கொண்டிருந்த மனிதாபிமானம் மிக்க டாக்டரின் கண்கள் கலங்கிப் போயிருந்தன.

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.