விவசாயம் அன்றும் இன்றும் என்பது நம்மை யோசிக்க வைக்கும் ஓர் அருமையான கட்டுரை.
ஒரு ஆண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து
1.இளவேனில்
2.முதுவேனில்
3.கார்காலம்
4.குளிர் காலம்
5.முன்பனிக்காலம்
6.பின்பனிக்காலம் என இயற்கை நமக்களித்துள்ளது.
இப்பருவங்கள் சுழற்சியாக வந்து சென்றுகொண்டிருக்கும். உலகம் சுழல்கின்றது என்பதை நம் முன்னோர்கள் அன்றே அறிந்திருந்தனர்.
ஒரு விவசாயியானவன் இளவேனில் காலத்தில், தான் சேமித்து வைத்துள்ள இயற்கை உரத்தை வயலில் இட்டு, முதுவேனில் கால முதலில் உழுது செப்பனிடுவர் (கோடை உழவு), சம்பா பருவ விதைப்பு செய்வர்.
அக்காலத்தில் செலவினம் குறைந்த சாகுபடி சம்பா சாகுபடியாகும். அதுவே ஆடிப்பட்டம் தேடிவிதை என்பர். தென்மேற்குப் பருவ மழை காலத்தில் களையெடுத்துப் பயிரை வளப்படுத்துவர்.
அடுத்த மழைக்காலத்தில் ஏரி, குளங்களில் நீரைச் சேமித்து வைப்பார்கள். முன்பனிக்காலத்தின் முதல் கட்டத்தில் அறுவடை செய்து முடிப்பர்.
முன்பனிக்காலத்தின் இரண்டாம் கட்டத்தில் சேமித்த நீரின் அளவைப் பொறுத்து, கார் பட்டம் பயிர் செய்வார்கள்.
இப்படி, காலத்தே பயிரிட்ட காலத்தில் பூச்சிகள் குறைவாக இருந்தன. அதற்குண்டான செலவும் மிகவும் குறைவாக இருந்தன. நீர்வளம் மிகுந்த இடங்களில் மூன்றாவது போகமான சொர்ணவாரி பட்டத்தில் பயிர் செய்வர்.
“மாதம் மூன்று மழையுள்ள நாடு
வருடம் மூன்று விளைவுள்ள நாடு” (குற்றாலக் குறவஞ்சி)
மூன்று போகம் அன்றைக்குப் பருவத்தே பயிர் செய்ததை அறிகின்றோம். அக்காலம் விவசாயி, விவசாயியாக இருந்த காலம்.
கிராம வாழ்க்கையில் குடும்பத் தேவைகள் மிகவும் குறைவாக இருந்தன. நாகரீக வளர்ச்சியினால் தேவைகள் சிறிது சிறிதாக அதிகரித்தன. விவசாயமும் மெல்ல நவீன முறைக்கு மாறத் தொடங்கிது.
கால்நடை பராமரிப்பு குறைந்தது. இயற்கை உரங்கள் சேமிக்க, செலவினம் அதிகமாகவும் சிரமமாகவும் உணரப்பட்டன. காரணம், இயற்கை தொழு உரமிட்டால் புற்கள் அதிகமாக வளரும்.
வயலில் புற்கள் முளைக்க, முளைக்க உழவு செய்யவேண்டும். அப்படி உழுவதற்கு விவசாயி சொந்தமாக உழவு மாடுகளைத் தங்களுக்கு இருக்கும் நிலப்பரப்பிற்கு ஏற்பச் சொந்தமாக வைத்திருந்தனர்.
அவற்றைப் பராமரிக்க போதிய ஆட்கள் குறைந்ததனால் உழுவதற்கு இயந்திரப் பயன்பாட்டிற்கு மாறினர். உழவு வேலைக்கு ஆட்கள் இல்லாததால் மாடுகள் குறைந்தன.
மாடுகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இயந்திரங்களைத் தேவைக்கு பயன்படுத்திவிட்டு சும்மா வைத்துக்கொள்ளலாம். இயற்கை உரம் இல்லாமல் போனது.
மேலும் இயற்கை உரம் சேமிக்க, கொண்டுபோக, உழவு எனச் சிரமம் நிறைந்ததாக உணரப்பட்டது. இரசாயன உரங்கள் வேலையைக் குறைத்ததாக எண்ணப்பட்டது.
அன்றைக்கு விளைச்சல் இயற்கையாக இருந்ததால், மகசூல் குறைவாக இருந்தது. மக்கள் தொகையும் குறைவே.
பிற்காலத்தில் மக்கள் தொகை அதிகரித்ததால் வேலைக்கு ஆட்கள் கிடைத்திருக்க வேண்டும். நேர்மாறாக விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்கவில்லை.
மாறாக மாற்று வேலைக்குப் போக விரும்பினர். வேலையில்லா நிலைமைப் பெருகியது. இங்கு நாம் சிந்திக்க வேண்டும்.
நம் அணுகுமுறை சிதைந்ததால் ஒருபக்கம் வேலைக்கு ஆட்கள் இல்லை. மறுபக்கம் ஆட்களுக்கு வேலையில்லை.
மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் தானியங்கள் விளையவில்லை. அப்போதுதான் பசுமை புரட்சி எனப்படும் விளைச்சல் கூட்ட இரசாயன உரத்தின் பயன்பாடு கொண்டு வரப்பட்டது.
பாரம்பரிய வகைகள் மறைந்து வீரிய ஒட்டுரக விதைகள் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. அதனால் விளைச்சல் பெருகின. உணவுப் பற்றாக்குறை தீர்ந்தது. நாடு தன்னிறைவு அடைந்தது. இவற்றை யாரும் மறுக்க முடியாது.
இரசாயன உரங்களை அளவின்றிப் பயன்படுத்தினோம். அதனால் மண்வளம் முற்றிலும் மாறிப்போனது. சுழற்சியாகக் காலம் காலமாக நடந்து வந்த முறை மாறியது.
சில நேரம் இயற்கையும் பொய்த்து விடும். அதற்கேற்ப நன்செய் பயிரைத் தவிர்த்துப் புன்செய் பயிர்கள் செய்வர். நவீன இயந்திரங்கள் துணையால் புன்செய் நிலங்களிலும் நன்செய் பயிர்கள் செய்யத்துவங்கினர்.
அக்காலத்தில் நன்செய் நிலங்களில் நெற்பயிரும் (நீர்ப் பயிர்), புன்செய் நிலங்களில் சிறுதானியங்களும், பயறு வகைகளும், நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் தரும் பயிர்களும் செய்து வந்தார்கள். இந்நிலை பிறழ்ந்ததால் ஒன்றுக்கொன்று தட்டுப்பாடுகள் ஏற்பட்டன.
அக்காலத்தில் கரும்பைப் பயிரிட்டு அவர்களே ஆலையிலிட்டு வெல்லம் எடுத்து வந்தனர். அதற்கு நேரம் அதிகம் செலவிட்டனர். அதனால் மற்ற வேலைகளும் தொடர்ந்து நடைபெற ஏதுவாக இருந்தன.
இன்று நிலைமை மாறிவிட்டது. நவீன ஆலைகள் வந்துவிட்டன. ஒரு விவசாயி குறைந்தது இரண்டு மூன்று மாதங்கள் செய்யக்கூடிய வேலைகள் இல்லாமல் போயின.
கரும்புகள் ஆலைக்குச் சென்று வெள்ளைச் சர்க்கரையாக வந்துவிட்டது. அதனால் மக்களுக்கு நாளடைவில் நோய்கள் பெருகி விட்டன.
இன்றைக்கு எவ்வளவோ விளம்பரங்கள் மூலமாக வெள்ளை சர்க்கரையை தவிர்க்கச் சொன்னாலும் முடியவில்லை.
விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் போனதற்கு ஆட்சியாளர் கொள்கைகளும் ஒரு காரணம்.
கோழி மேய்ப்பதானாலும் அரசாங்க வேலை என்றால், தனி மரியாதையாக உணரப்பட்டது.
விவசாயம் இரண்டாம் பட்சமாக மாறியது.மரியாதையும் குறைந்தது. விவசாயம் செய்பவருக்குப் பெண் கொடுக்கக்கூடத் தயங்கினர்.
அக்காலத்தில் ஒரு கிராமம் என்றிருந்தால் அக்கிராமத் தேவைக்கு ஏற்ற ஆட்கள் அந்தக் கிராமத்தில் இருந்தார்கள்.
அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்களின் உரிமையென அந்தக் கிராம விவசாயிகள் தவறாது கொடுத்து வந்தார்கள்.
கிராமத்தில் உள்ள கோயில்களுக்குப் பூஜை செய்வதற்கென ஆட்கள் நியமனம் இருந்தது. அந்தணர் அல்லாதவராக அவர்கள் இருந்தனர். அவர்களுக்கும் விவசாய நிலம் மானியமாக இருந்தது. அந்நிலத்தின் வருவாயை அவர்கள் பெற்று வந்தனர்.
இன்றைக்கு ஒருமைப்பாட்டைப் பற்றிப் பெருமையாகப் பேசுகின்றனர். ஆனால் அன்றைக்கு இருந்த சிறந்த ஒருமைப்பாடு காணாமல் போய்விட்டது.
அன்றைய விவசாயத்திற்குக் கிராமமே துணையாக இருந்தது. ஒருசாரார் எலித்தொல்லையை அழித்து வந்தனர். ஒருவர் பாசனத்தைக் கவனித்து வந்தார். சிலர் நீர் நிலைகளைச் சுற்றிப் பார்த்துப் பாதுகாப்பாக இருக்க ஆவண செய்வார்.
அந்தக் கிராமத்தவரே சாகுபடி கணக்குகளைப் பராமரிப்பார். இவையெல்லாம் விவசாயத்தையே சுற்றிவந்தவையாகும். அன்றைக்கு மக்களின் மற்ற தேவைகள் இரண்டாம் பட்சமாக இருந்ததன.
நாகரீக மோகத்தால் தேவைகள் பெருகிவிட்டன. அந்நியர் வந்தபின், நிலவரி வசூலிக்கும் முறையில் ஏழை விவசாயிகளின் மாடுகள் மற்றும் பொருட்களை ஜப்தி செய்து துன்புறுத்தினர்.
நிலவரி வசூலிக்கும் உரிமையை ஜமீன்தார்களுக்கு வழங்கப்பட்டது. அதனால் எத்தனையோ ஏழைகள் வரிகட்டமுடியாமல் நிலங்களை இழந்தனர்.
தவிர்க்க முடியாத காரணங்களால் இயந்திரங்கள் தேவை அதிகரித்தன. அவற்றால் எரிபொருள் தேவை அதிகமானது. மோட்டார்களை இயக்க மின்சாரம் தேவைப்பட்டது.
கிராமத்தில் மரங்களை அழித்தோம்; புழுக்கம் அதிகமாகி வட்டது. மின்சார விசிறிகள் அதிகரித்தன; இன்று குளிர்சாதன இயந்திரங்களும் அதிகரித்துள்ளன. இது போன்ற தேவைகள் அதிகரித்து விட்டன.
இந்த மாற்றங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
நம்மிடம் இருப்பது ஒரே ஒரு பூமிதான். அதை எப்போது நினைவில் கொள்வோம்.
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 94444104