விவசாயம் சார்ந்த தொழில்கள்

ஆடு வளர்ப்பு

விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழில்கள் பலவற்றைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும்.

வேளாண்மையில் பயிர்சாகுபடி என்பது ஒரு அங்கம்தான். பல்வேறு பயிர்களை விதைத்து, பராமரித்து, அறுவடை செய்வது மட்டுமே முழுமையான விவசாயம் ஆகாது. இப்படி பயிர்களை மட்டுமே நம்பி நடக்கும் விவசாயத்தில் லாபமும் குறைவுதான். தவிர இந்தவகை விவசாயத்தில் மண்வளம் மளமளவென குறைந்து கொண்டே போகும்.

இந்த நிலைமையை தவிர்க்கவே இணைத்தொழில்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும், மழைவளமும், நீர் வளமும் குறைந்து கொண்டு வரும் தற்போதைய சூழலில் அதற்கேற்றவாறு சுயதொழில்களைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும்.

 

இணைத்தொழில்களின் நன்மைகள்

வறட்சியிலும் வருமானம், கூடுதல் வருவாய், தினசரி, மாதாந்திர வருவாய், முழுநேர வேலைவாய்ப்பு, குடும்பத்தில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு, எதிர்பாராத இழப்பை ஈடுசெய்தல், இலவச இயற்கை உரம், பண்ணைக் கழிவுகளை வீணாகாமல் பயன்படுத்திக் கொள்ளுதல், லாபகரமான பொழுதுபோக்கு – இவ்வளவு நன்மைகள் இணைத்தொழில்களில் உள்ளன.

 

இணைத் தொழில்களைத் தேர்வு செய்தல்

அவரவர் பண்ணைக்குப் பொருத்தமான தொழில்களைக் கீழ்க்கண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

1.கிராமத்தின் மழைவளம்

2.பண்ணையின் நீர்வளம்

3.விற்பனை வாய்ப்பு

4.தொழில்நுட்ப உதவி

5.முதலீடு, கடனுதவி

6.வறட்சி பாதிப்பு

7.வேலையாள் கிடைத்தல்

8.காலநிலை, சுற்றுச்சுழல்

9.ஆர்வம், நேரம் கிடைத்தல்

10.அறிவு, அனுபவம்

 

மரம் வளர்ப்பு

மண்வளம், மழைவளம் குறைந்த பகுதிகளில் மரம் வளர்க்கலாம். வேம்பு, மலைவேம்பு, புளி, பீயன், வாகை, சூபாபுல், தைலாமரம் போன்றவை ஏற்ற மரங்கள். மாதுளை, சீத்தா, இலந்தை போன்ற பழமரங்களும் வறட்சியைத் தாங்கிக் கொண்டு லாபகரமான மகசூல் தருபவை. மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதம் முன்பே நடவு குழிகள் எடுத்து வைக்க வேண்டும்.

6 முதல் 2 வருட‌ வயதுடைய மரக்கன்றுகளை நடவேண்டும். ஆடு, மாடு கடிக்காமல் இருக்க சாணிக்கரைசல் தெளிக்கலாம். வரப்பு ஓரங்களில் பனை மரங்கள் வளர்க்கலாம். தரிசு நிலங்களில் வெவ்வேல் மரம் வளர்த்து, ஊடுபயிராக கால்நடைகளுக்கு கொழுக்கட்டைப் புல் விதைக்கலாம்.

 

கறவைமாடு வளர்ப்பு

வறட்சிப் பகுதிகளில் கறவை மாடு வளர்ப்பது பெரிய அளவில் ஆதாயம் தருவதில்லை. பசுந்தீவனம் கிடைத்தால் சமவெளிப் பகுதிகளில் ஜெர்சி கலப்பு இன மாடுகளை வளர்க்கலாம். ஹோல்ஸ்டீன் ஃபிரிசியன் கலப்பு இனப்பசுக்கள் மலைப் பகுதிகளுக்கு பொருத்தமானவை.

எருமை பராமரிப்பு, மாடு பராமரிப்பை விட சுலபமானது. கறவை மாடு வளர்ப்பைவிட கிடேரிக்கன்று வளர்ப்பு லாபகரமானது. பசுந்தீவனப் பற்றாக்குறை இருந்தால், பால் உற்பத்தி குறைந்துவிடும்.

ஒரு கறவைக்கு குறைந்தபட்சம் தினசரி 15 கிலோ பசுந்தீவனம் தேவை. ஆகவே ஒரு கறவைக்கு 2 சென்ட் பரப்பு என்ற அளவில் கோ-4, கம்பு – நேப்பியர் ஒட்டுப்புல் சாகுபடி செய்து பசுந்தீவனப் பற்றாக்குறையை சமாளிக்கலாம்.

கொழுக்கட்டைப் புல் வறட்சியைத் தாங்கும் மேய்ச்சலுக்கு ஏற்ற புல்வகை, வறட்சிப் பகுதிகளில் பெரிய அளவில் கறவைமாடு வளர்ப்பில் ஈடுபடுவது நல்லதல்ல. இரண்டு முதல் மூன்று மாடுகளை சமாளிக்கமுடியும். மிக வறட்சியான பகுதிகளுக்கு நாட்டு மாடுகள் பொருத்தமானவை.

 

ஆடு வளர்ப்பு

மேய்ச்சல் வசதியும், ஆள்வசதியும் இருந்தால் ஆடு வளர்ப்பு லாபகரமானது. வெள்ளாடு வளர்ப்பை விட செம்மறியாடு வளர்ப்பு சுலபமானது. பெட்டையாடுகளை வளர்ப்பதைவிட கிடாய் குட்டி வளர்ப்பு லாபகரமானது.

இரண்டு முதல் மூன்று மாத வயதுடைய செம்மறி கிடாய் குட்டிகளை வாங்கி 3 முதல் 4 மாதங்கள் வளர்த்து விற்பது நல்ல லாபம் தரும் தொழில். கோ-4 கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல் மற்றும் வேலி மசால் ஆடுகளுக்கு சிறந்த பசுந்தீவனமாகும்.

பலா இலைகள் வெள்ளாடுகளின் எடையை விரைவில் அதிகரிக்கும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் அவசியம். வெள்ளாடுகளை 4 அடி உயர பரணிலும் வளர்க்கலாம். ஒரு ஆட்டிற்கு 10 சதுர அடி இடம் தேவை.

நிலக்கடலை பயிர் செய்து அறுவடைக்குப்பின் கடலைச் செடிகளை சேமித்து வைத்துக் கொண்டால், வறட்சிக் காலங்களில் தீவனப்பற்றாக்குறையை சமாளிக்கலாம்.

 

கோழி வளர்ப்பு

நாட்டுக்கோழி வளர்ப்பு லாபகரமானது. 10 கோழிகளுக்கு ஒரு சேவல் தேவை (புறக்கடை வளர்ப்பு), ஒரு மாத வயதுடைய கோழிக்குஞ்சுகள் வாங்கி வளர்த்தால் 6 முதல் 7 மாதங்களில் விற்கலாம். கம்பு மற்றும் கருவாடு கோழிகளின் எடையை விரைவில் அதிகரிக்கும். ‘அசில்’ என்ற இன கட்டு சேவல் வளர்ப்பும் நல்ல லாபம் தரும் தொழில்.

 

முயல் வளர்ப்பு

விற்பனை வாய்ப்பு குறைவு; பராமரிப்பது சுலபமில்லை; ஆனால் முதலீடு அதிகம் தேவைப்படாது. தாய் முயல்கள் மாதாமாதம் குட்டிகளை ஈணும்.

 

வெண்பன்றி வளர்ப்பு

விற்பனை வாய்ப்பு இருந்தால், வெண்பன்றி வளர்ப்பு மிகவும் லாபகரமான தொழில், ஹோட்டல் மற்றும் விடுதிக் கழிவுகள் கிடைத்தால் செலவு மிகவும் குறைவு, பன்றிக்குட்டிகள் மிக வேகமாக வளர்ச்சி அடையும்.

 

காளான் வளர்ப்பு

எந்த வாய்ப்பும் இல்லாத பகுதிகளில் உணவுக் காளான் வளர்க்கலாம். முதலீடு மிகவும் குறைவு. அறுவடை செய்த காளான்களை ஓரிரு நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது. விற்பனை வாய்ப்பை அறிந்து செயல்பட வேண்டும்.

 

வண்ணமீன் வளர்ப்பு

கண்ணாடித் தொட்டிகளில் சுலபமாக வளர்க்கலாம். ஏஞ்சல் மீன், தங்க மீன், வாஸ்து மீன் வகைகள் ஏற்றவை. வாராவாரம் தண்ணீர் மாற்ற வேண்டும். குடிநீர் குழாய்த் தண்ணீரில் குளோரின் கலந்திருப்பதால் மீன் வளர்ப்பிற்கு ஏற்றதல்ல. ஆகவே கிணற்று நீரைப் பயன்படுத்த வேண்டும். அருகில் நகரங்கள் இருந்தால் வண்ணமீன்களை விற்பனை செய்வது சுலபம்.

 

விதைப் பண்ணை அமைத்தல்

வறட்சியைத் தாங்கி வளரும், கம்பு, துவரை, ஆமணக்கு போன்ற பயிர்களில் தனியார் மற்றும் விவசாயத்துறை மூலம் விதைப் பண்ணை அமைத்து கூடுதல் வருமானம் பெறலாம். பசுந்தாளுரப் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, சீமை அகத்தி போன்ற விதைகளை உற்பத்தி செய்தும் வருவாய் ஈட்டலாம்.

 

நிறைவாக

தண்ணீர் வசதி குறைவான வறண்ட பகுதிகளில், இதுவரை சொல்லப்பட்ட விவசாயம்  சார்ந்த தொழில்கள் பலவற்றில் பொருத்தமான ஒன்றிரண்டைத் தேர்வு செய்து ஈடுபட்டு, குறைந்த முதலீட்டில் வருடம் முழுவதும் வருமானம் பெறலாம்.

ஆனால், ஆர்வமிகுதியால் எதையும் பெரிய அளவில் ஆரம்பித்துவிட்டு அவதிப்படக்கூடாது. சிறிய அளவில் தொடங்கி, போதிய அனுபவம் கிடைத்தவுடன் விரிவாகச் செய்வதே நல்லது.

 

Visited 1 times, 1 visit(s) today