விவசாயி எதை இழந்தான்?

விவசாயி எப்படி இருந்தான்; ஏன் இன்று இழிநிலை அடைந்தான்? என்பதைச் சுருக்கமாகச் சொல்லும் கட்டுரை. படித்துப் பாருங்கள்; படித்ததை யோசித்துப் பாருங்கள்.

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடி மன்னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடையர் ஆனாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. (ஏரெழுபது.கம்பர்)

பாடலின் பொருள்

எல்லோரும் வணங்கும் குலத்தில் பிறந்தால் என்ன?

அரச குலத்தில் குலத்தில் பிறந்தால் என்ன?

வணிகர் அல்லது செல்வர் குலத்தில் பிறந்தால் என்ன?

இவர்களை எல்லாம் விட உழவர்களே மேலானவர்கள்.

ஏனென்றால் அவர்கள்தான் மனிதர்கள் உயிரோடு வாழ உணவு படைக்கின்றார்கள்.

இதுதான் விவசாயியின் அன்றைய நிலை.

இன்று இருப்பதோ அவல நிலை.

விவசாயி வாழ்வில் மாற்றங்கள்

விவசாயம் செய்யும் நிலத்திற்கு உரம் இன்றியமையாதது. அதற்காக ஆடு, மாடுகளை விவசாயிகள் வளர்த்தார்கள்.

அந்த மாடுகள் மேய்ச்சலுக்காக அந்த கிராமத்தில் மேய்ச்சக்கால் புறம்போக்கு என்று ஒரு பகுதி நிலம் இருந்தது. ஆக்கிரமிப்புக்களால் அவ்விடம் இழந்தனர். அவ்விடம் போனதால் ஆடுமாடுகள் குறைந்தன. இயற்கை உரம் குறைந்தது.

பின்பு ஏரிகளில் ஆடுமாடுகளை மேய்த்துவந்தனர். அதுவும் நாளடைவில் ஆக்கிரமிக்கப்பட்டு மேய்ச்சல் இடம் போனது.

ஏரிகளுக்கு மழைக்காலங்களில் நீர்வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்க வீட்டுக்கு ஒரு ஆள் என்று அனைவரும் சென்று கால்வாய்களைச் சீரமைத்தனர்; மழைக்காலங்களில் எளிதில் நீர் நிரம்பின. நாளடைவில் அப்பழக்கத்தை இழந்தனர். நாளடைவில் ஏரிகளும் காணாமலும் சுருங்கியும் போனது.

நிரம்பிய நீரைப் பராமரிக்க, நீர்க்கட்டி என்று ஒருவரைக் கிராமத்தார்கள் நியமித்து பாய்ச்சல் முறைகளை முறைப்படுத்தினர். நாளடைவில் அம்முறைகளையும் இழந்தனர்.

சம்பா, கார், சொர்ணவாரி என்ற விதைப்புப் பட்டங்களை முறையாக காலத்தில் செய்துவந்த நிலையை இழந்தார்கள். ஆடிப் பட்டம் தேடி விதை என்பது போய் நெடுநாளாகிவிட்டது. எல்லா மாதங்களும் பட்டமாகி விட்டன.

ஏரிகள் வேண்டாம் ‘போர்கள்’(ஆழ்துளைக் கிணறு) இருந்தால் போதும் என்ற நிலையை எடுத்துச் சத்தான நீரினை இழந்து உவர்நீரினைப் பெற்று மண்ணைக் கெடுத்தார்கள். நில வளத்தை இழந்தார்கள்.

கிராமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஏரிகள் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் சென்றன. ஆக ஏரிகளையும் இழந்தார்கள்.

மேழிச்செல்வம் என்று விவசாயிகளின் மேம்பாட்டிற்காக வேளாண் செய்திகளைத் தாங்கி வீடு வீடாக வந்த இதழினை இழந்தார்கள்.

கிராம வளர்ச்சி அலுவலர்

விவசாயிகள் மேம்பாட்டிற்காகக் கிராம வளர்ச்சி அலுவலர் என்ற ஒருவர் கிராம மக்களிடையே நெருங்கிப் பழகி விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளைச் எடுத்துச் சொல்லி வந்தனர். அதனால் விழிப்புணர்வு பெற்ற வந்த நிலையினை இழந்தார்கள். அவர்கள் மூலமாகக் கோழிவளர்ப்பு கால்நடைகள் வளர்ப்பு மேம்படுத்தினர். நாளடைவில் அதையும் இழந்தனர்.

விலைப் பொருட்களைத் தக்க விலை வரும் வரை சேமித்துக் கொள்ள, விவசாயி வீட்டிலேயே கிடங்காக வைத்துக் குறிப்பிட்ட நாள் வரை இருப்பு வைக்க, அதிகாரியால் சீல்வைத்து இருப்பிற்கேற்ற கடன் வழங்கி, விவசாயி வேண்டும்போது விளைபொருட்களை விற்கவும் கொடுத்த கடனைத் திரும்பப் பெறவும் வழிசெய்து வந்தனர்.

இம்முறை மிகவும் பயனுள்ளதாக விவசாயிகளுக்கு இருந்து வந்தது நாளடைவில் இம்முறையினால் பெற்ற வசதியை இழந்தார்கள்.

இயற்கையாய் பெய்த மழைநீரைச் சேமித்துச் செய்துவந்த விவசாயத்தை இழந்தார்கள். இதனால் கிராமப்புறச் சூழல் மாறிப்போனது.

வீடுவீடாகக் கிடைத்த இயற்கை உரத்தை இல்லாமல் செய்து, இரசாயன உரங்களைப் புகுத்தியதால் மண்வளம் இழந்து பொருள் வளமிழந்து இரசாயன உரத் தொழிற்சாலைகளை நோக்கி இருக்கும் அளவிற்குத் தன்னிலை இழந்தார்கள்.

விவசாய இடுபொருட்களுக்கே பெரும் பங்கைச் செலவிட்டனர்.

கிராமக் கர்ணம், கிராம முனுசீப், மற்றும் கிராமத் தலையாரி என்று கிராமத்தினர்களே நிர்வகித்த சாகுபடி கணக்கு முறையினை இழந்தார்கள். யார் என்ன மாதிரியான சாகுபடி செய்துள்ளார்கள் என்று ஒழுங்கான கணக்கு முறை இருந்தது அம்முறையினை இழந்தார்கள்.

விவசாயக் கூட்டுறவு வங்கிகளை அரசியல்வாதிகளிடம் இழந்தார்கள். உண்மையில் சொல்லப்போனால் விவசாயி என்ற கவுரவத்தை இழந்தார்கள்.

சமூக முக்கியத்துவம்

ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் நடிகர் நடிகைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் நூற்றில் ஒருபங்குகூட விவசாயிகளுக்குக் கொடுக்கவில்லை.

புடவைக் கடைக்காரரும் வளையல் கடைக்காரரும் ஒரு விவசாயி அணிந்தால் நன்றாக இருக்கும் என்று காட்டுவதில்லை. தங்கள் விளம்பரத்திற்கு பணம் தந்து நடிகைகளைக் காட்டுகின்றார்கள். ஏன்?

ஒரு விவசாயத் தொழிலாளியை காட்டி பின்பு அவர்கள் பொருட்களை அணிவித்து அவர்களுக்குண்டான கவுரவத்தைக் காட்டினால் என்ன தவறு? உண்மையாக உழைப்பவனுக்கு மதிப்பில்லை. நடிக்கின்றவர்களுக்கே மதிப்பு. அவர்கள் பின்னால் ஓடவைத்தனர்.

அரசியல்வாதிகளும் ஓட்டுக்காகத்தான் விவசாயிகளைப் பற்றிப் பேசுகின்றார்களே தவிர உண்மையில் விவசாயிமீது அக்கறை இருந்தால் விவசாய சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற குரல் கொடுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்? குரல் கொடுக்க மாட்டார்கள்.

சுதந்திரம் வந்த பிறகு, ஏரிகளை ஆழப்படுத்தினர்களா ? இல்லை நீர்த்தேக்கங்களை ஆழப்படுத்தினார்களா? இல்லை. நீர்வரத்தைப் பெருக்கினார்களா? இல்லை. நகரத்திற்குத் தண்ணீர் வேண்டும் என்று பேசுகின்ற அளவிற்கு விவசாய பாசனத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் அரசாங்கம் ஏன் செய்ய வேண்டும்.?

விவசாயி விரும்பும்போது விற்றுக் கொள்ள ஆதரவு தர வேண்டும். அதற்கான வழிமுறைகளைச் சீர்ப்படுத்தினாலே போதும்.

இலவசங்கள் கொடுப்பதெல்லாம் ஓட்டுக்காகவே தவிர, விவசாய மேம்பாட்டிற்காக அல்ல. இதை, ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும். விளைபொருட்களைத் தவிர மற்ற பொருட்கள் விலையேறுவதற்கு யார் காரணம்.? சிந்திக்க வேண்டும்

ஏசி அறைத் திட்டங்கள்

கிராமப் பகுதிகளில் விவசாய வேலையில் ஈடுபட்டுக் கொண்டு, மற்ற நேரங்களில் வயல்வெளிகளில் இருக்கும் வரப்புகளில் எலிகளை அழித்து, பாம்புகளைப் பிடித்து அதன் தோலை விற்பதும் தொழிலாகக் கொண்ட ஒரு சமூகத்தின் திறமையை வீணாக்கி, அவர்களின் உழைப்பை அழித்தார்கள்.

பாம்பு இருந்தால்தான் எலிகள் ஒழியுமாம். வீணான யோசனை. இன்று எலிகள் ஒழிந்தனவா? விவசாயியிடம் கேட்டுப்பாருங்கள். நிலைமை புரியும்.

அச்சமூகத்தினர்தான் விவசாயிகளின் உற்ற தோழர்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் இவ்வேலையையே தெரிந்து கொள்ளாமல் மற்ற வேலைகளுக்குப் போய்விட்டார்கள்.

இன்று அவர்கள் செல்லாத வயல்வெளிகளில் எலிகளும் பெருகிவிட்டன பாம்புகளும் பெருகிவிட்டன. அவர்கள் வாழ்வாதாரமும் பறி போய்விட்டது.

ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு அஹிம்சைபேசும் ஒரு சிலருக்கு விவசாயம் தெரியாது. கம்பெனிகளின் பூச்சிக் கொல்லி மருந்துகளை ஏன் தடை செய்ய‌வில்லை.?

அம்மருந்துகளால் மீனினம் அழிந்தது. அயல் மீனினம் வந்தது. இயற்கையாய் பெருகி வந்த மீனினம் அழிக்கப்பட்டது. பணம் கொடுத்து மீன் குஞ்சுகளை வாங்க வைத்தார்கள்.

தற்சார்புள்ள விவசாயிகளைப் பக்குவமாக அழித்தார்கள். இயற்கை விவசாயத்தில் செலவினம் அதிகமாக இல்லாமல் இருந்தது.

செலவினம் அதிகரிக்க ஆராய்ந்து பற்பல செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் கொடுத்து, மெதுவாக இயற்கையை அழித்தார்கள். விவசாயத்தில் பகட்டைப் புகுத்தி விவசாயியைக் கெடுத்தார்கள். நவீனம் என்று கூடவே நஞ்சையும் புகுத்தினார்கள்.

பசுந்தழைகளை உரமாகப் போட்ட காலம்போய் முழுக்க இரசாயன‌ உரக் காலமாகி விட்டது. இயற்கை விவசாயத்தில் ஒன்றை ஒன்று சார்ந்திருந்தது, அதை இத்தலைமுறையினருக்குத் தெரியாமல் செய்தார்கள்.

கையேந்தும் விவசாயி

ஒரு விவசாயிக்கு உரம் முக்கியமாக இருந்தது. அதற்குத் தேவையான கால்நடைகள் வைத்திருந்தார்கள். ஆடுகள் வைத்திருந்தார்கள். கோழிகள் வைத்திருந்தார்கள். அவர்களுக்குத் தேவையான இறைச்சிக்கும் முட்டைக்கும் கடைக்குச் செல்ல வேண்டிய நிலை இல்லாமலிருந்தது. அதை மாற்றி மெதுவாகக் கடைகளை எதிர் நோக்க வைத்தார்கள்.

விவசாயிகள் தங்கள் நெல்லைச் சிறு ஆலைகளின் மூலாக அரிசியாக்கி வந்தார்கள். அதை அழித்தார்கள். இன்று விவசாயிகள் தம்முடைய நெல்லை விற்றுக் கடையில் அரிசி வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

பாரம்பர்யமாக இருந்த நெல்லை ஒழித்தார்கள். சொந்த விதை நெல்லை மறந்தார்கள். விதைக் கடைகளை தேடினர். பருவத்தே பயிர் செய் என்ற நிலையை மாற்றினார்கள். காலத்தில் பயிர் செய்தால் விளைச்சல் நன்றாக இருக்கும். செலவினமும் குறைவாகும் இந்த நிலையை மாற்றினர்கள்.

கிராமத்தில் இருக்கும் விவசாயிகளும் காய்கறிகள் பயிரிடுவதை விட்டுக் காய்கறிகடைக்குச் செல்லும் நிலையில்தான் உள்ளது. கறவை மாடுகள் வைத்துக் கொண்டு பால் பெற்று வந்ததை விடுத்துப் பவுடர் பாலுக்கு போக வேண்டியதாகி விட்டது.

வீட்டில் கோழி வளர்ப்பை விடுத்து நாட்டுக் கோழிக் கடைக்கு சென்று வண்ணக் கோழிகள் வாங்கும் நிலைக்குப் போனார்கள்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்

என்ற நிலை மாறி விவசாயிதான் தொழுதுண்டு பின் செல்லும் நிலை வந்துவிட்டது.

அன்றுபோல் மேழிச் செல்வம் பெருகுமோ!
இன்றுபோல் என்றும் இழிநிலைதானோ!

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்

திருநின்றவூர் ‍ 602024
கைபேசி: 9444410450

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.