விஷமம் செய்த வெங்காயம்

அந்த வயலில் மக்காச்சோளம் தன் மஞ்சள் நிறக் கதிர்களுடன் வளர்ந்து செழித்திருந்தது. மறுபுறம் பச்சைப் பசேலென மிளகாய்ச் செடிகள் நன்கு வளர்ந்திருந்தன.

வேலியோரத்தில் வெள்ளரிக் கொடிகள் வளைந்து நெளிந்து படர்ந்திருந்தன. வாய்க்கால் கரைகளில் வாழை மரங்கள் குலைகளுடன் அழகாக இருந்தன.

சற்று மேடான இடத்தில் வெங்காயச் செடி ஒன்றும் இருந்தது.அப்போதெல்லாம் வெங்காயத்திற்குச் சரியான சுவை கிடையாது. அதனால் அதை யாரும் பயிரிடுவது இல்லை.

ஆனால் மிளகாயோ காயிலும் இனித்தது. கனிந்த பழமான பின்னர் அதைவிட அதிகமாக இனித்தது.

வெள்ளரிக்காய்களோ இளநீரை போல தனக்குள் தண்ணீரைச் சுமந்த விதமாக இருந்தன.
மக்காச்சோளம் முள்போன்ற சுனைகள் இல்லாமல் வழவழவென அழகான செடியாகவும், வாழை மரம் இன்றிருப்பது போலவும் இருந்தன.

வெங்காயத்திற்கு சற்று வாய்த்துடுக்கு அதிகம். ஒவ்வொருவரிடமும் சென்று வம்பளந்து கொண்டிருப்பது தான் அதனுடைய வேலை அப்படித்தான், அன்றும் மெதுவாக மக்காச் சோளத்தின் அருகே சென்றது.

 

“தங்க நிறத்து சோளக்கதிரை

தலையில் சுமக்கும் பயிரக்கா

தட்டை உடலில் நீபெற்ற

தங்கச் சோளம் தின்பதற்கே

வெட்டி உன்னை சாய்த்துவிட்டு

கதிருடன் வீட்டிற்குச் சென்றிடும் மக்கள்

கட்டி உன்னுடல் காயவைத்து

காய்ந்த சருகென கூறிடுவர்

அடுத்துள்ள வேற மரத்தைப்பார்

அதனுடலில் முட்கள் உள்ளதைப் பார்

அதுபோல் நீயும் பெற்றிருந்தால்

உன்னை இங்கே யார் தொடுவர்?

சின்னவன் எந்தன் பேச்சைத்தான்

சிறிது யோசனை செய்து பார்”

என்று மக்காச்சோளத்தின் மனதைக் கலைத்து விட்டு சென்று விட்டது. வெங்காயத்தின் பேச்சைக் கேட்ட மக்காசோளமும் சற்று யோசனை செய்தது.

உடனே அது தன் உடலைச் சுற்றி மெல்லிய ஈர்க்குகளால் மூடிக்கொண்டது. தன் தோகை முழுவதும் மெல்லிய சுனைகளால் நிரப்பிக் கொண்டது. வெறுமனே திறந்தபடி இருந்த தன் கதிரை மெல்லிய சருகுகளால் மூடிக்கொண்டது.

 

அன்று மாலை தோட்டக்காரர் வந்தார். மக்காச்சோளம் மாறியுள்ளதைக் கண்டார்.

“உனக்கு என்னவாயிற்று” என்று அதனிடம் கேட்டார்.

“போமையா பொல்லாதவரே

இன்று என்னுடல் ஈர்க்குக்குள்

என் தோகை முழுவதும் சுனைகளுடன்

கதிரைக் கூட மூடிக் கொண்டேன்

வெறும் கையால் என்னை நீர் தொட்டால்

சுனையால் கையைக் கடித்திடுவேன்

ஈர்க்கால் விரலைக் கிழித்திடுவேன்

மனதால் என்மேல் பயம் கொண்டு

மனிதா நீர்தான் போய் வாரும்” என்ற மக்காச்சோளம் கோபத்துடன் கூறியதும் மக்காச்சோளத்தின் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது புரியாமல் தோட்டக்காரர் தன் வீட்டிற்குச் சென்று விட்டார்.

 

அடுத்த நாள் வெங்காயம் மெல்ல மெல்ல மிளகாய்ச் செடியின் அருகே சென்றது.

“பச்சை மிளகாய்ச் செடியக்கா

பார்வைக்கு நீயும் அழகக்கா

எச்சில் ஊறிடும் உன் காய்கண்டு

எதுதான் இணையுண்டு உன் சுவைக்கு?

பச்சைக் காயாய் இருந்தாலும்

பழுத்து பழமாய் கிடந்தாலும்

இச்சையோடு மக்கள் உன்னை

எடுத்து உண்டு மகிழ்ந்திடுவர்

துச்ச மென்றே உன்னுடலை

தூர எறிந்தும் போய்விடுவர்

சுத்த இனிப்பை நீதுறந்து

சுள்ளென எரிச்சலை உனக்குள்ளே

பத்திரமாக வைத்துக் கொள்

கத்தியே உந்தன் காய்தின்று

கதறி அழட்டும் மக்களுமே!”

என்று மிளகாய்ச் செடியிடம் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தது வெங்காயம்.
சின்னவன் வெங்காயத்தின் பேச்சைக் கேட்ட மிளகாய் அன்று முதல் தனது இயல்பான இனிப்புச் சுவையைத் தொலைத்து விட்ட எரிச்சலூட்டும் காரச் சுவையைத் தனக்குள் புதைத்துக் கொண்டது.

அன்று மாலை மீண்டும் வந்த தோட்டக்காரர் நேராக மிளகாய்ச் செடியின் அருகே வந்து காய்களைப் பறிக்க எத்தனித்தனர்.

“தொடாதே என்னைத் தோட்டக்காரா

தொல்லை தரும் காட்டுக்காரர்

வாடாத என்காயில் இன்று

வலிக்கும் காரமே உள்ளதய்யா

நாடாதே இனிமேல் என் உறவை

நலமுடன் தனித்து வாழ்ந்திடுவேன்”

என்ற மிளகாய்ச் செடியின் பேச்சைக் கேட்ட தோட்டக்காரர் மிளகாய்ச் செடியின் மாற்றத்திற்கு யார் காரணம் என்பது புரியாமல் தன் வீட்டை நோக்கி நடந்தார்.

மறு நாள் சின்னவன் வெங்காயம் மெல்ல அங்கு வேலியோரம் படர்ந்திருந்த வெள்ளரிக் கொடியிடம் சென்று

“வேலியில் படர்ந்த வெள்ளரிக் கொடியே

வெள்ளை உள்ளம் கொண்டவள் நீயே!

நாவின் வறட்சியைப் போக்கிடவே

நல்ல காயினைத் தருகின்றாய்

பாவிகள் உன்னுடல் ஒடித்தேதான்

பறித்துச் சென்றனர் காய்களையே

உன் காயில் உள்ள நீரளவை

நீயும் சற்றுக் குறைத்துக் கொள்

மெல்ல மெல்ல மக்கள் உன்

முகத்தை மறந்து போய்விடுவர்

தொல்லைகள் இன்றி வாழ்ந்திடலாம்

தினமும் சுகமாய் இருந்திடலாம்!”
என்றது.

வெங்காயத்தின் பேச்சைக் கேட்ட வெள்ளரிச் செடியும் பஞ்சு போல் இருந்த தன் காய்களைக் கல்போல கெட்டியாக்கிக் கொண்டது.

அன்று மாலை அங்கு வந்த தோட்டக்காரர் வெள்ளரிச் செடியின் அருகே வந்து காய்களைப் பறிக்க முயன்றவர் திகைத்து நின்றார்.

“வாருமையா தோட்டக்காரா

வழியைப் பார்த்து போமையா

மெல்லிய பூவாய் இருந்த காயைக்

கல்லாய் நானும் ஆக்கிவிட்டேன்.

நல்ல நீருடன் இருந்த காயில்

நாருடன் சதையும் கலந்துவிட்டேன்” என்ற வெள்ளரிக் கொடியின் பேச்சைக் கேட்டு ஏதும் செய்வதறியாது அவர் திரும்பி தன் வீட்டிற்குச் சென்று விட்டார்.

மறுநாள் சின்னவன் வெங்காயம் மெல்ல மெல்ல அந்த வயலின் கிணற்றோரம் நின்ற வாழை மரத்தை அடைந்தது. அதை அழைத்து,

“வளைந்த வாழை மரமக்கா

வணக்கம் சொன்னேன் நானக்கா

குலையுடன் உனைக் காண்பதற்கு

கோடிக் கண்கள் வேணுமக்கா

இலையோடு காயும் நீதந்து

இம்மக்கள் உண்டிட கனி தந்து

பலவிதமாகப் பலன் தந்தும்

பழுத்த கனியை எடுத்த பின்

பாவம் உன்னை வெட்டிடுவர்

உரித்து உரித்து நாராக்கி

உன்னுடலை அங்கே சிதைத்திடுவர்

உன்னுடலை கெட்டியாய் மாற்றிக் கொள்

உன் கனியில் சுவையைக் குறைத்துக் கொள்

உன் இலையில் முட்களைத் தைத்துக் கொள்

உன் குலையை உயரே மறைத்துக் கொள்

அன்போடு நான் சொன்ன வார்த்தைகளையே

அறிவோடு யோசனை செய்து பார்” என்றது.

வெங்காயத்தின் பேச்சைக் கேட்ட வாழை மரம் யோசனை செய்யாமலேயே பதில் கூறியது.

“குட்டிப்பயலே வெங்காயம்

குசும்போ உனக்கு ரொம்பதான்

வெட்டித் தனமாய் இருப்பதனால்

வீணான சேட்டைகள் செய்கின்றாய்

சோளத்தின் மனதைக் குலைத்திட்டாய்

மிளகாய் மனதை மாற்றிவிட்டாய்

தளரா என்னையும் தாக்கிடவே

தகுந்த சொற்களை விதைத்திட்டாய்

மாலையில் தோட்டக்காரர் வந்தபின்

மற்றவை அவர் செயலில் பார்”

என்ற வாழை மரம் பதில் கூறியதும் பயந்து ஓடிச் சென்ற வெங்காயம் தன்னுடலை மண்ணுக்குள் புதைத்து மறைத்துக் கொண்டது.

அன்று மாலை வந்த தோட்டக்காரரிடம் வாழை மரம் நடந்ததை கூறியது. தோட்டக்காரர் அங்கிருந்த எல்லாப் பயிர்களையும் அழைத்தார்.

“அழகுப் பயிர்களே வாருங்கள்

அருமைப் பயிர்களே வாருங்கள்

சின்னவன் சொன்னதைக் கேட்டுத்தான்

சிந்தையில் குழப்பம் உங்களுக்கே

மக்களின் பசி நோய் தீர்ப்பதற்கு

மக்காச்சோளம் மருந்தாகும்

நல்ல காயைத் தந்து வெள்ளரி

நாவின் வறட்சியை போக்குகிறது

மிளகாய் காயும் காரம் தான்

இருந்தும் அதன் சுவை தேவைதான்

நலமாய் உலகம் வாழ்வதற்கு

நாரும் காயும் கனியும்

இலையும் வாழை தருவதனால்

உலகம் அதனைப் போற்றிடுதே!

உங்களின் துணை இல்லையெனில்

உயிர்கள் நிலைதான் என்னவாகும்?

உள்ளத்தில் மகிழ்வோடு இனி நீங்கள்

உயர்வான வாழ்வை வாழுங்கள்”

என்று அங்கிருந்த பயிர்களை சமாதானப்படுத்த, மன நிறைவோடு பயிர்களும் அன்று இருந்தபடியே இருந்து தாம் மீண்டும் மாறாமல் இருப்போம் என உறுதி கொடுத்துச் சென்றன.

இவற்றை அனுப்பி விட்ட தோட்டக்காரர் வெங்காயத்தைத் தேடினார். அவர் கண்களுக்குப் புலப்படவில்லை. காடு முழுவதும் தோட்டக்காரரோடு வாழை மரம், வெள்ளரிக் கொடி, மக்காச்சோளம், மிளகாய்ச் செடி என அனைவரும் தேடி மண்ணுக்குள் புதைந்து மறைந்திருந்த வெங்காயத்தைக் கண்டுபிடித்து விட்டனர்.

இத்தனை குழப்பத்திற்கும் காரணமான வெங்காயத்தை வித்தியாசமாக தண்டிக்க வேண்டுமென நினைத்தார் தோட்டக்காரர்.

அதன்படி மிளகாய்ச் செடியைப் போல காரச் சுவையை அவன் பெற வேண்டும்; மக்காச் சோளக் கதிர் போல் உருண்டை வடிவ உடலைப் பெற வேண்டும்; வாழையின் உடலைப் போல உரிக்க உரிக்க வருமளவுக்கு அதன் உடல் இருக்க வேண்டும்; வெள்ளரிக் காயில் உள்ளதைப் போல் நீர்ச்சத்தை அவன் பெற வேண்டும் என்று தோட்டக்காரர் தண்டனை கொடுத்தார்.

யாருடைய கண்களுக்கும் தெரியாமல் மண்ணுக்குள் மறைந்து கொண்டதால் இனி வரும் காலங்களில் மக்கள் இவனை தமது வீடுகளில் அனைவரும் தெரியம்படி வைத்திருந்து இவனை உரித்து தினசரி சமையலுக்கு பயன்படுத்துவர் என்றும்  தண்டனை கொடுத்தார்.

பாவம் அன்று முதல் சின்னவன் வெங்காயம் தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டான்.

சின்னவன் வெங்காயத்தால் இவ்வளவு மாறுதல்களையும் எளிதில் சுமக்க முடியவில்லை. பாவம் அவன் சுமையைத் தாங்க முடியாமல் அழுவதோடு தன்னைக் தொடுகின்ற ஒவ்வொருவரிடமும் தன் சோக கதையைக் கூறி அழச் செய்கின்றான்.

– இராசபாளையம் முருகேசன்  (கைபேசி: 9865802942)