விஷ்ணுக்கிராந்தி முழுத்தாவரமும் கசப்பு மற்றும் காரச்சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது, நோய் நீக்கி உடலைத் தேற்றும்; காய்ச்சலைக் குணமாக்கும்; கோழையகற்றும்; வியர்வை பெருக்கும்; தாதுக்களைப் பலமாக்கும்; தாகத்தைக் கட்டுப்படுத்தும்; குடல் புழுக்களைக் கொல்லும்.
விஷ்ணுக்கிராந்தி தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி வகைத் தாவரம். இலைகள், நீள்வட்டமானவை, நுனிகள் ஈட்டி வடிவமானவை, முழுமையானவை, சொரசொரப்பானவை. பட்டுப்போன்ற வெண்மையான ரோமங்களால் சூழப்பட்டவை.
விஷ்ணுக்கிராந்தி மலர்கள் வட்டமானவை, சக்கர வடிவமானவை, பொதுவாக நீலநிறமானவை. காலை நேரத்தில் மட்டும் பூத்திருக்கும். மாலை நேரத்தில் முட்கள் முதல் பூக்கள் வரை சுருங்கத் தொடங்கிவிடும்.
அரிதாக, வெள்ளை, சிவப்பு நிறமான மலர்களைக் கொண்ட விஷ்ணுக்கிரந்தியும் உண்டு. தமிழகமெங்கும், தரிசு நிலங்கள், முட்புதர்க் காடுகள் மற்றும் வளமற்ற மணற்பரப்பில் கூட ஏராளமாக விளைகின்றது. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.
காய்ச்சல் குணமாக விஷ்ணுக்கிராந்தி முழுத்தாவரம் மற்றும் ஆடாதோடை இலைகள் இரண்டும் ஒரு பிடி அளவாக நசுக்கிச் சேர்த்து, ½ லிட்டர் நீரில் இட்டு, ¼ லிட்டராக சுண்டக்காய்ச்சி, வடிகட்டி சாப்பிட வேண்டும். தினமும் 2 வேளைகள், 3 நாட்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும்.
நரம்புத் தளர்ச்சி கட்டுப்பட விஷ்ணுக்கிரந்தி, ஓரிதழ்த்தாமரை, கீழாநெல்லி, அனைத்தும் சேர்த்து ஒரு பிடியளவு, நன்றாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவாக, காலை, பகல், இரவு உணவுக்கு முன்னர் உட்கொண்டு வரவேண்டும். இதை ஒரு நீண்டகால சிகிச்சை முறையாகச் செய்துவர வேண்டும்.
கருப்பை தொடர்பான நோய்கள் குணமாக முழுத் தாவரத்தையும் நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொண்டு 1 தேக்கரண்டி அளவு, காலையில் மட்டும், வெந்நீருடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும். 1 மாதம் வரை தொடர்ச்சியாகச் சாப்பிடலாம். இவ்வாறு செய்ய, பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் குணமாகி, கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டாகும். இது ஒரு பாரம்பரிய வைத்திய முறையாகும்.
வெள்ளை விஷ்ணுக்கிராந்தி: கணுக்களில் நிலம் படிந்த வேர்கள் உள்ள தரையோடு படரும் சிறுசெடி. விஷ்ணுக்கிராந்தியைப் போன்றே இருந்தாலும் மலர்கள் வெண்மையான நிறமுடையவை. இலைகள், நாற்கோணம், உருண்டையானவை, கிளிப்பச்சை நிறமானவை. இந்தத் தாவரம் இயற்கையில் அரிதாகவே காணப்படுகின்றது. காடுகள், ஈரப்பாங்கான பாழ்நிலங்களில் வளர்கின்றது.
காய்ச்சல், உடல்சூடு போன்றவை குணமாக வெள்ளை விஷ்ணுக்கிரந்தி முழுத்தாவரம், 1 கைப்பிடி அளவு, நீரில் கழுவி சுத்தம் செய்து, 2 டம்ளர் நீரில் இட்டுக் காய்ச்சி, 1 டம்ளராக்கி, வடிகட்டிக் குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை, இரண்டு நாட்களுக்கு இவ்வாறு செய்யலாம்.