வீட்டுத் தோட்டத்தில் பயிர் செய்யப்படும் செடி வகைகளை காய்கறிச் செடிகள், மூலிகைச் செடிகள், கீரை வகைகள் மற்றும் பூச் செடிகள் என வகைப்படுத்தலாம்.
காய்கறிச் செடிகள்
வீட்டுத் தோட்டத்தில் கத்தரி, வெண்டை, தக்காளி, கொத்த அவரை, மிளகாய் ஆகிய காய்கறிச் செடிகளை வளர்க்கலாம்.
வெண்டை, கொத்தவரங்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை விதை மூலம் பயிர் செய்யவேண்டும். நேரடியாக விதைகளை தரையில் ஊன்ற வேண்டும்.கத்தரி, தக்காளி, பெரிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை நாற்றுகள் மூலம் நடவு செய்ய வேண்டும்.
வீட்டுத் தோட்டம் என்பதால் 1 அடி X 1 அடி மண்ணை கிளறி விட்டு அவற்றில் விதைகளை இட்டு அவற்றின் மேல் மணல் அல்லது சாம்பல் அல்லது மணல் கலந்த சாம்பலை இட்டு மூட வேண்டும்.
விதைகள் அதிக பட்சமாக 1 செ.மீ ஆழம் வரை செல்லலாம். அதற்கு மேல் ஆழமாக சென்ற விதைகள் முளைத்து மேலெழும்பி வராது.
பூச்செடிகள்
பூச்செடிகள் என்றவுடன் நம் நினைவில் நிற்பது ரோஜா. தமிழ்நாட்டில் எல்லா மண்ணிற்கும் தட்ப வெப்ப நிலைகளுக்கும் ஏற்ற ரோஜா ரகம் எட்வர்டு ரோஸ் என்கின்ற பன்னீர் ரோஜா, ஆந்திர ரெட் ஆகியவன ஆகும்.
ரோஜா வகைகளை ஒட்டுக் கன்றுகளாகவும் நடலாம் அல்லது போத்து (குச்சி) நடவு முறையிலும் நடலாம்.
மல்லிகையைப் பொறுத்த மட்டில் அடுக்கு மல்லி, இருவாச்சி மல்லி, குண்டுமல்லி என்று மூன்று ரகங்கள் உள்ளன. இருவாச்சி மல்லி கொடி வகையைச் சேர்ந்தது. குண்டு மல்லியை நாம் குத்துச் செடியாகவும் வளர்க்கலாம். அல்லது அதிகம் உயரம் இல்லாத கொடி வகையாகவும் வளர்க்கலாம். அடுக்கு மல்லி செடி வகைதான். இதன் பூ பார்ப்பதற்கு ரோஜா போன்று இருக்கும்.
முல்லையை கொடியாகவும் அல்லது செடியாகவும் வளர்க்கலாம். முல்லையை கொடியாக வளர்ப்பதனால் சுவரிலிருந்து 1½ முதல் 2 அடி இடைவெளியில் குழி வெட்டி தாவரத்தை வளர்க்க வேண்டும். முல்லையின் அருகே குச்சியை ஊன்றி கொடியை வளரவிட வேண்டும்.பின் குச்சியின் நுனியிலிருந்து நூலினைக் கட்டி மொட்டை மாடியில் அல்லது பால்கனியில் படர விடலாம். முல்லைக் கொடி இரண்டு மாடி உயரம் வரை வளரும்.
இதே போல் பிச்சியையும் கொடியாகவோ அல்லது செடியாகவோ நடலாம். ஆனால் கொடியாகவே வளர்ப்பது நல்லது. பிச்சியில் இரண்டு ரகங்கள் உள்ளன. ஒன்று வெள்ளை பிச்சி மற்றொன்று கலர் பிச்சி. வெள்ளை பிச்சிக்கு மணம் அதிகம்.
கொடி வகை காய்கள்
அவரை, புடலை, பீர்க்கு, பாகல், பூசணி ஆகியவை கொடி வகை காய்கள் ஆகும். அவரையை செடியாகவோ, கொடியாகவோ வளர்க்கலாம். புடலை, பீர்க்கு, பாகல், பூசணி ஆகியவற்றை கொடியாக மட்டுமே வளர்க்க முடியும்.
கொடி காய்களுக்கு ஏற்ற நடவு பருவம் (நாட்டு ரகத்திற்கு) ஆனி, ஆடி ஆகிய மாதங்களாகும். ஒட்டு ரகத்தினை எந்த காலத்திலும் நடவு செய்யலாம்.
கீரைகள்
அரைக்கீரை, தண்டுக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பாலாக்கீரை, முளைக்கீரை, காசினிக் கீரை, வெந்தயக் கீரை ஆகியவை கீரை வகைகளைச் சார்ந்தது. அரைக்கீரை, தண்டுக் கீரை, பாலாக்கீரை, காசினிக் கீரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை நேரடி விதைப்பு முறையிலே பயிர் செய்யலாம். பொன்னாங்கண்ணிக் கீரையை போத்து (குச்சி) நடவ முறையில் பயிர் செய்ய வேண்டும்.
நேரடி விதைப்பு முறை
நிலத்தை நன்கு கொத்திவிட்டு விதைத்து கிளறி தண்ணீர் தெளித்து வர விதை முளைக்கும். வெந்தயக் கீரை விதையை மட்டும் முதல் நாள் தண்ணீரில் ஊற வைத்து மறு நாள் விதைத்து நீர் தெளிக்க வேண்டும்.
குச்சி (போத்து) நடவு முறை
பொன்னாங்கண்ணி கீரையை குச்சிகள் மூலம் நடவு செய்ய வேண்டும். நிலத்தை நன்கு கொத்தி விட்டு பாத்தி கட்டி குச்சியை சாய்வாக ஊன்ற வேண்டும்.
வல்லாரைக் கீரையை வேர் உள்ள செடியாக நடவு செய்ய வேண்டும்.
மூலிகைகள்
துளசி, திருநீற்றுபச்சிலை, தூதுவளை, ஆடாதோடை, கற்பூரவல்லி, சிறியாநங்கை (நிலவேம்பு) செம்பருத்தி ஆகியவற்றை செடியாகவே வாங்கி நட்டு பயன்பெறலாம்.
வீட்டுத் தோட்டத்தில் கட்டாயம் இருக்க வேண்டியது பப்பாளி.
பப்பாளி மரத்தில் ஆண், பெண் என இரண்டு மரங்கள் உண்டு.ஆண் மரம் பூக்க மட்டும் செய்யும். பெண் மரம்தான் காய் கொடுக்கும்.
பப்பாளி விதையை சின்ன சின்ன பிளாஸ்டிக் பைகளில் மண்ணிட்டு அவற்றில் பப்பாளி விதையை ஊன்றி வைத்தால் 15 நாட்களில் முளைத்து விடும். 30வது நாள் கன்றினை நடவு செய்யலாம்.
அதே போல் வீட்டுத் தோட்டத்தில் இருக்க வேண்டிய மரங்கள் கருவேப்பிலை, முருங்கை. முருங்கையில் இரண்டு வகைகள் உள்ளன. 1.செடிமுருங்கை 2.மரமுருங்கை இரண்டையுமே விதைகளை நேரடியாக மண்ணில் ஊன்றுவதன் மூலம் நடவு செய்ய முடியும்.
செடி முருங்கை கீரைக்காகவும், மரமுருங்கை கீரை மற்றும் அதன் காய்களுக்காகவும் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம். கருவேப்பிலை மரத்தின் விதைகளை நேரடியாக மண்ணில் ஊன்றுவதன் மூலம் நடவு செய்யலாம்.
இது போன்று பல வகையான செடிகள், கொடிகள் மற்றும் மரங்களை வீட்டுத்தோட்டத்தில் வளர்த்து பயன்பெறலாம்.
– இரா.அறிவழகன்