வீட்டுத்தோட்டம் மூலம் அன்றாட தேவைக்கான உணவுப் பொருட்களில் 60% வரை பூர்த்திசெய்ய முடியும். மேலும் இதன் மூலம் “உணவு விஷம்” இல்லாத உணவுப் பொருட்களை உண்டு சுகமான வாழ்விற்கு அடித்தளம் அமைக்க முடியும்.
இன்றைக்கு நாம் அன்றாடம் உண்ணும் உணவு பொருட்கள் முதல், அமிர்தம் என்று சொல்லக்கூடிய தாய்ப்பால் வரை “உணவு விஷம்” பரவியுள்ளது. இதற்கு காரணம் இன்று நாம் செய்யும் விவசாய முறைதான்.
இன்றைய விவசாயத்திற்கு செயற்கை உரம், பூச்சி மருந்து, களைகொல்லி, வேர்பூச்சி கொல்லி என்று செயற்கை உரங்களையும், “மலட்டு விதை உற்பத்தி” என்று சொல்லக்கூடிய மரபணு மாற்று விதைகளையும் பயன்படுத்தி விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம். இது இதை உண்ணும் மனிதனுக்கும் மலட்டுத் தன்மையை உருவாக்கும் என்ற உண்மையை மறந்துவிட்டோம்.
பொதுவாக வீட்டுத் தேவைக்கான உணவு மற்றும் பயன்பாட்டுப் பொருட்கள் மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் மூலம் பூர்த்தியடைகின்றன.
வீட்டுத்தோட்டம் மூலம் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய தென்னை, மா, கொய்யா, எலுமிச்சை, மாதுளை, வாழை, சப்போட்டா போன்ற பழ மரங்களையும், முருங்கை, கருவேப்பிலை போன்ற மரங்களையும் நட்டு வளர்க்கலாம்.
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடிய செடி வகைகளை காய்கறி செடிகள் மற்றும் கீரை வகைகள், பூச் செடிகள், மூலிகைச் செடிகள் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
காய்கறிச் செடிகள்
வீட்டுத்தோட்டம் மூலம் கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், தக்காளி, மிளகாய், வெங்காயம், கொத்தவரங்காய் போன்ற காய்கறிச் செடிகளை வளர்க்கலாம்.
கீரை வகைகள்
வீட்டுத்தோட்டம் மூலம் அரைக்கீரை, தண்டுக்கீரை, மணித்தக்காளிக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பாலாக்கீரை, முருங்கைக்கீரை, முளைக்கீரை போன்ற கீரை வகைகளை வளர்க்கலாம்.
பூச்செடிகள்
வீட்டுத்தோட்டம் மூலம் ரோஜா, மல்லிகை, முல்லை, பிச்சி, மஞ்சள் அரளி, செவ்வரளி, செம்பருத்தி, கேந்தி என்று சொல்லக்கூடிய செண்டு மல்லி போன்றவற்றை வளர்க்கலாம்.
மூலிகைச்செடிகள்
துளசி, தூதுவளை, சிறியாநங்கை, (நிலவேம்பு) கற்பூரவல்லி, திருநீற்று பச்சிலை, செம்பருத்தி, சோற்றுக் கற்றாழை போன்ற மூலிகை வகைகளையும் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.
கொடி வகைகளில் புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், வெள்ளரிக்காய், பூசணிக்காய், பாகற்காய் ஆகியவற்றை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.
வளையத்தோட்டம்
நிலத்தை வட்டமாகத் தோண்டவும். இதன் சுற்றளவு 3 அடி இருக்க வேண்டும். நடுவில் மட்டும் ஆழம் ஒன்றரை அடி வரை இருக்க வேண்டும். தோண்டப்பட்ட குழி வாணலி போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும்.
இதில் தோட்ட மற்றும் சமையலறைக் கழிவைப் போடவும். மாட்டுச் சாணம் கிடைத்ததால் அதையும் சேர்க்கவும். தண்ணீர் தெளிக்க வேண்டும். அன்றாடக் கழிவுகளைச் சேர்த்து வரவேண்டும்.
பதினைந்து நாட்களுக்குப் பிறகு இதனைச் சுற்றிலும் குவிந்திருக்கும் மண்ணில் வெண்டை, கத்தரி, மிளகாய், தக்காளி போன்றவற்றை நட்டு வைக்கலாம்.
7 சாடி முறை
ஏழு சாடிகளைத் தயார் செய்து கொள்ளவும். ஞாயிறிலிருந்து சனி வரை அவற்றில் கிழமைகளைக் குறிப்பிடவும். கிழமை குறிப்பிட்ட சாடியில் அன்றைய கிழமையில் சேரும் கழிவுகளைப் போடவும். ஆரம்பத்தில் அசைவக்கழிவுகளைத் தவிர்க்கவும். கழிவு மிகவும் ஈரமாக இருந்தால் சிறிது மண் சேர்க்கவும்.
பூச்சாடிகள் நிறைவதற்கு சுமார் 3 லிருந்து 4 மாதங்கள் வரை பிடிக்கும். பூச்சாடிகள் நிறைந்த பிறகு அவற்றை 20 லிருந்து 30 நாட்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். அவ்வப்போது கிளறி விடவும். பிறகு இதில் 7 விதமான காய்கறிச் செடிகளை நட்டு வைக்கலாம்.
வீட்டுத் தோட்டத்தில் பயிர் செய்யப்படும் பயிர் வகைகளுக்கு இயற்கை உரங்கள், இயற்கை பூச்சி விரட்டிகள், இயற்கை நுண்ணுயிர் ஊக்கிகள், இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும்.
இயற்கை உரங்கள் எனப்படுபவை பசுந்தாள் உரம், பசுந்தழை உரம், மண்புழு உரம் ஆகியவை ஆகும்.
வீட்டுத்தோட்டம் மூலம் செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்தி நல்ல பொருட்களை விளைவித்து நலமுடன் வாழ்வோம்.
– இரா.அறிவழகன்