வீதி நாடகம் சோலைமலை

வசந்தா நிலையத்தின் மற்றொரு பெரிய போர்ஷனில் தமது மனைவி திருமகளுடன் வசித்து வரும் பருமானான உடல்வாகு கொண்ட மூத்த குடிமகன் சோலைமலை.

ஆளைப் பார்த்தால் நாற்பது வயதுக்காரரைப் போல் இருப்பார். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் மலர்ந்த முகத்துடனும் இருப்பார்.

அரசு திட்டங்கள், வங்கி விஷயங்கள் குறித்து விவரம் தெரியாதவர்கள், இவரை அணுகி கேட்டு தெளிவு பெறுவார்கள். பொறுமையாக அவர்களுக்கு அவர் எடுத்துரைப்பார்.

அவருடைய தலையில் கேசம் இல்லாத போதும் அவருடைய முகம் பொலிவுடன் இருக்கும்.

இத்தனை காலம் ரோலிங் ஸ்டோன் போல், பல தனியார் நிறுவனங்களில் மேலாளராகப் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த சோலைமலை, இப்பொழுது அவரது அண்ணன் மகன் நடத்தி வரும் விளம்பர ஏஜென்சியில் நிர்வாகப் பணிகளைப் பார்த்து வருகிறார்.

வேலை நேரம் போக மற்ற நேரங்களில் வீதி நாடகங்களுக்கான ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுப்பார்.

பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அம்சங்களை அடிநாதமாகக் கொண்டதாக அவரது நாடகங்கள் இருக்கும்.

அவர் எழுதித் தரும் நாடகங்களை அவரது நண்பர் தயாளன் தமது குழு மூலமாக ஜனங்கள் நிறைந்த இடங்களில் வீதி நாடகமாக நடத்துவார்.

இதனால் தான் அவர், காம்பவுண்டில் ‘வீதி நாடகம் சோலைமலை’ என்று அழைக்கப்பட்டார்.

அவரைக் காதலித்துக் கரம் பிடித்த அவரது மனைவி திருமகள் அவரை விட ஒரு வயது மூத்தவர் என்பது குடும்ப ரகசியம். ஆனாலும், கனமான தேகம் கொண்ட திருமகள், இளமை மாறாத தோற்றம் உடையவர்.

“பேரிளம் பெண்ணான பின்னரும் அழகான இளம் பெண்ணாக ஒளிர்பவள் நீ!” என்றெல்லாம் பேசி சோலைமலை தமது மனைவியின் தோற்றத்தைப் புகழ்வார்.

சின்னத்தம்பி படத்தில் வருவது போல் மூன்று அண்ணன்களின் தங்கை திருமகள். பாசத்தைப் பொழிந்து வளர்க்கப்பட்டவர். அவர்கள் மூவரும் பெரும் புள்ளிகள்.

தங்கை, சொத்து பத்து இல்லாத, செல்வம் சேர்க்க தெரியாதவரை, பணத்தில் நாட்டம் இல்லாதவரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்து விட்டாளே என்று தாளாத, தீராத கோபம் இன்று வரை.

அவரது அண்ணன்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தான் அவரை வீட்டுக்கு வந்து பார்ப்பார்கள்.

தங்கையிடம் மட்டும் பேசுவார்கள். சோலைமலையிடம் பேசாமல் சென்று விடுவார்கள்.

அவர்கள் சென்ற பிறகு திருமகள் முகம் வாடுவதைக் கண்டு ஏதேதோ பேசி மனைவியை சிரிக்க செய்வார் சோலைமலை.

இந்த ஜோடிக்குக் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. அதற்காக அவர்கள் வருத்தம் கொள்வதில்லை.

திருமகள், வசந்தா நிலையத்தின் அருகில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அன்றொரு நாள். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளை. படுக்கை அறையில் திருமகள் படுத்திருந்தார். சோலைமலை அவர் அருகில் வந்தார்.

“என்ன திரு! பகல்ல படுத்துக்க மாட்டியே! உடம்பு சரியில்லையா?“

“எனக்கு ஒண்ணும் இல்லை. நீங்க கிட்ட வந்தா என்ன ஆகும்ன்னு தெரியும். காலிங் பெல் அடிக்குது போய் பாருங்க!“ என்றார் திருமகள்.

வாசற் கதவைத் திறந்தார். அங்கே சூரிதார் அணிந்த ஒடிசலான இளம்பெண் நின்று கொண்டிருந்தாள்.

அவளருகே ஆறடி உயரம் கொண்ட மழித்த முகத்துடன் கட்டுடல் இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

இளைஞி பேசினாள் :

“வணக்கம் பெரியப்பா! நான் தான் ஒங்க கசின் ராஜதுரையோட பொண்ணு வசந்தி!“

“அடடே வாம்மா! நீ குழந்தையா இருக்கும் போது பார்த்தது. உட்காரு அப்பா அம்மா சௌக்கியமா?“

கூடத்திற்கு முன்னால் இருந்த சிறு அறையில் உள்ள சோபாவில் அந்த இளம்பெண் அமர்ந்தாள்.

அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்த சோலைமலை, அவளிடம் தண்ணீர் புட்டியைக் கொடுத்தார்.

பேச்சுக் குரல்கள் கேட்டு திருமகள் அங்கு வந்து நின்றார்.

“இவங்க ஒங்க பெரியம்மா! திரு! என் பங்காளி ராஜதுரையோட மூத்த பொண்ணு!“

இளம்பெண் பேசினாள் :

“வணக்கம் பெரியம்மா! அப்பா அம்மா ஒங்கள பத்தி நிறைய சொல்லி இருக்காங்க! பெரிய இடத்து பெண் நீங்க சாதாரணமான எங்க பெரியப்பாவை கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்த கால்ல நின்னு பண்ணிக்கிட்டிங்களாமே!“

“இவர் பெரிய மனுஷர் தான்! ஒங்க அப்பா அம்மாவுக்கு இவரைப் பத்தி தெரிஞ்சது அவ்வளவு தான்“ நின்றபடியே திருமகள் பேசினார். அமராமல் அங்கேயே இருந்தார்.

“அப்பா! கணவரை விட்டு கொடுக்காம பேசறீங்க பெரியம்மா கிரேட்!“

மனைவியின் முகத்தைப் பார்த்து, பேச்சின் போக்கை மாற்ற நினைத்த சோலைமலை, “மதிய வேளை வெய்யிலில் வந்து இருக்கே ஏதாவது விஷயமா?“

வசந்தி, தன்னுடைய கையில் இருந்த பழங்கள் நிறைந்த பையை சோலைமலையிடம் கொடுத்தாள். பேசினாள் :

“ பெரியப்பா! ஒங்க அண்ணன் மகன் தீபக், ஆட் ஏஜன்சி நடத்தறாரு. நான் பி ஆர் ஏஜென்சி அதாவது பப்ளிக் ரிலேஷன்ஸ் ஏஜென்சி நடத்தறேன்!“

“வெரி குட்! நீ தொழில் முனைவோர் ஆயிட்டே வாழ்த்துக்கள்!“

“ஒங்க நம்பர் அப்பா கிட்ட இல்லை!“

“இருந்தாலும் யார் இப்ப போன் பண்ணி பேசறாங்க?“

“அது கரெக்ட் பெரியப்பா! பி.கே இண்டஸ்ட்ரீஸ் என்னோட கிளையன்ட். நீங்க அவங்க ஆலைக் கழிவு, நீர் ஆதாரத்துல கலக்குதுன்னு அந்த ஏரியால வீதி நாடகம் போடறீங்க!

அதைப் பத்தி எழுதாம மரம் வளர்த்தல், மழைநீர் சேகரிப்பு, பெண் குழந்தை படிப்பு இப்படி பொதுவான டாபிக் ல ஒங்க நாடகத்தை எழுதுங்க. நீங்க எழுதறதால தான் தயாளன் ட்ரூப் போடறாங்கன்னு கேள்விப்பட்டோம். அதனால் அந்த டாபிக் வேணாம்னு அவங்கள பகைச்சுக்க வேணாம்னு “

திருமகள் குறுக்கிட்டார்.

“என்னம்மா! அந்த கம்பெனி ஒன்னோட கிளையன்ட். அதுக்காக சூதானமா நடந்துக்கன்னு ஒங்க பெரியப்பாவுக்கு எச்சரிக்கை விடறே! அதானே?“

“இல்லை பெரியம்மா!“

“காலம் போன காலத்தில் இதெல்லாம் வேண்டாத வேலைன்னு இவர் கிட்ட நான் எப்பவுமே சொல்லிகிட்டு இருந்தேன். இனிமேல் இந்த மாதிரி எழுதறதை நிறுத்தாதீங்கன்னு சொல்லப் போறேன்.

புரிய வைக்க வேண்டிய வேலையைத்தான் இவரும் தயாளன் தம்பியும் பார்த்துக்கறாங்க. இவரையும் தேடி சொந்தம் வருதேன்னு ஒரு நிமிடம் சந்தோஷப்பட்டேன்.

நீ அந்த பலூன் ல ஊசியை வைச்சு குத்திட்டே! இதை பேசறதுக்கு அடியாள் மாதிரி ஒருத்தரை ஒங்க அப்பாவோட கசின் வீட்டுக்கு கூட்டிகிட்டு வரே!“ முடித்தார் திருமகள்.

“இல்லை பெரியம்மா! விளைவுகளை சந்திக்க நேரிடும்… ன்ன்னு… “

“அதை அவர் பேஸ் பண்ணிப்பாரு!“

இது வரை பேசாமல் இருந்த இளைஞன் “ மேடம்! “ என்று பேசத் தொடங்கி உடனேயே திருமகள், “அவங்க கிட்ட சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்!“என்றார்.

வசந்தி ஏதும் பேசாமல் எழுந்து நின்று “வரேன்!“ என்று புறப்பட்டாள்.

இளைஞன் அவளைப் பின் தொடர்ந்தான். அவர்கள் இருவரும் காம்பவுண்டின் வாசலை நோக்கிச் சென்றதும், திருமகள் வாசற் கதவைத் தாழிட்டார்.

“பழங்கள் பையை திருப்பி கொடுத்து இருக்கலாம் இல்ல!“

“மூஞ்சில அடிச்சா மாதிரி ஆயிடும்ன்னு பார்த்தேன்!“ என்ற சோலைமலை, கூடத்தில் நின்று கொண்டிருந்த மனைவியின் அருகில் வந்தார்.

“மனைவி என்பவள் கணவனின் பாதிங்கறத நீ நிரூபிச்சுட்டே! நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்ங்கறத காமிச்சுட்டே!“ என்று கூறி மனைவியைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

“இது புரிய இத்தனை வருசம் ஆச்சா! விடுங்க! என்ன இது காலம் போன காலத்தில் ரொமான்சா? சகிக்கல விடுங்க!“ என்று விடுபட முயற்சி செய்தார் திருமகள். கணவர் விடவில்லை.

மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com

Comments

“வீதி நாடகம் சோலைமலை” மீது ஒரு மறுமொழி

  1. […] வீதி நாடகம் சோலைமலை காமாட்சி மெஸ் சபேசன் […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.