வீம்பு!

தொலைக்காட்சியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. தினேஷ் அதைத் தீவிரமாக ரசித்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது அவன் மனைவி கீதா அங்கே வந்து, கூட்டி பெருக்கி சுத்தம் செய்தாள்.

“கீதா! மேட்ச் டி.வி-ல போயிட்டிருக்கு. கொஞ்சம் வழி விட்டு நில்லு. மறைக்குது!” தினேஷ் கிரிக்கெட் போட்டியில் ஆழமாக மூழ்கி, அதில் பைத்தியமாக இருந்தான்.

“இல்லைங்க! வெறும் அஞ்சி நிமிஷம் தான். கொஞ்சம் பொறுத்துக்கோங்க. கூட்டி பெருக்கிட்டு சுத்தம் செஞ்சிட்டு போயிடுறேன்”

“இல்லை. நீ அப்புறம் பெருக்கு. இப்போ நீ கிளம்பு. டிஸ்டர்ப் பண்ணாத!” கீதா சொல்வதை கேட்காமல் தினேஷ் பிடிவாதம் பிடித்தான்.

இதை கேட்ட கீதாவிற்கு கோபம் கடுமையாக வந்தது. பல்லைக் கடித்தபடி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

அன்று மாலை குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தான் தினேஷ். அவன் உடம்புக்கு சோப் போட்டுவிட்டு, ஷாம்பு பாட்டிலை திறந்தபோது வெறும் காலி பாட்டிலாக இருந்தது.

“கீதா! ஷாம்பு பாட்டில் எடுத்திட்டு வா!” உரக்க சத்தமிட்டான் தினேஷ்.

“நான் டீவியில சீரியல் பார்த்துகிட்டு இருக்கேன். இப்ப என்னால வர முடியாது’’

“ரெண்டு நிமிஷம் தான் ஆகும். எடுத்து தந்துட்டுப்போ”

”இல்லைங்க, நீங்க நாளைக்கு குளிக்கும் போது ஷாம்பு போட்டுக்குங்க. இப்போ பேசாம குளிச்சிட்டு வாங்க”’

தினேஷுக்கு காலையில் நடந்த நிகழ்வு நினைவுக்கு வர மேற்கொண்டு அவனிடமிருந்து குரல் எதுவும் வரவில்லை.

M.மனோஜ் குமார்
சென்னை
கைபேசி: 9789038172