வெங்காய தாள் – விட்டமின் கே மூலம்

வெங்காய தாள் நம் நாட்டில் பரவலாகப் பயன்படுத்தக் கூடிய உணவுப் பொருள் ஆகும். இதில் இலைப்பகுதியே உணவாகக் கொள்ளப்படுகிறது.

இளமையான பருவத்திலேயே இது அறுவடை செய்து பயன்படுத்தப்படுகிறது. இப்பயிரானது இதனுடைய இலைப்பகுதிக்காக மட்டுமே பயிர் செய்யப்படுகிறது.

இது சாலட் வெங்காயம், சுருள் வெங்காயம், பச்சை வெங்காயம் என்று எல்லாம் அழைக்கப்படுகிறது. இது சாம்பார் வெங்காயம், பல்லாரி, பூண்டு ஆகியவற்றிற்கு உறவினர் ஆகும்.

இது வெள்ளை நிற வேர்களையும், அடர்பச்சை நிற துளை கொண்ட தண்டுகளையும் கொண்டுள்ளது. இது வெங்காயத்தைப் போன்ற லேசான மணத்தையும், சுவையும் கொண்டது.

இது ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. வெங்காய தாளின் மேற்பகுதியானது பச்சையாகவும், அடிப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும்.

 

வெங்காய தாள்

 

வெள்ளைப் பகுதியானது வெங்காயச் சுவையை அதிகமாகவும், பச்சைப்பகுதி வெங்காயச் சுவையை குறைவாகவும் கொண்டுள்ளது.

ஜப்பானிய, கொரிய, சீன உணவுகளில் இது முக்கிய உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

நறுக்கப்பட்ட வெங்காய தாள்
நறுக்கப்பட்ட வெங்காய தாள்

 

தண்டின் பகுதியானது அதிகமாக பருக்கும் முன்பு (சுமார் ½ அங்குலம் அளவு) இதனை அறுவடை செய்கின்றனர். அதற்காகவே இப்பயிர்கள் நெருக்கமாக வயலில் பயிர் செய்யப்படுகின்றன.

 

வெங்காய தாள் முளைக்கும்போது
வெங்காய தாள் முளைக்கும்போது

 

வெங்காய தாளானது அல்லியம் எனப்படும் வெங்காயக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் அல்லியம் ஃபிஸ்டுலோஸம் என்பதாகும்.

மத்திய ஆசியா மற்றும் சீனா தான் இதனுடைய தாயகம் ஆகும். தற்போது இது ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா உட்பட்ட பல இடங்களில் பயிர் செய்யப்படுகிறது.

இதனை குறுக்காக வெட்டினால் இலைகள் முழுமையான வட்ட வடிவத்தில் இருக்கும். ஏனைய வெங்காயக் குடும்பத் தாவரங்களின் இலைகளை குறுக்காக வெட்டினால் அரைவட்ட வடிவமாக இருக்கும்.

 

வெங்காய தாளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

வெங்காய தாளில் விட்டமின் கே மிக அதிகளவும், விட்டமின் சி மற்றும் ஏ அதிகளவும் உள்ளன.

மேலும் இதில் விட்டமின்கள் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), பி9(ஃபோலேட்டுக்கள்) ஆகியவையும் உள்ளன.

இதில் தாதுஉப்புக்களான கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலீனியம், துத்தநாகம் ஆகியவையும் காணப்படுகின்றன.

இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து பீட்டா கரோடீன்கள், லுடீன் ஸீஸாக்தைன் ஆகியவையும் இருக்கின்றன.

 

வெங்காய தாள் – மருத்துவ பண்புகள்

ஆரோக்கிய உடல்எடை இழப்பிற்கு

வெங்காய தாளானது குறைந்தளவு கலோரியையும், அதிகளவு ஊட்டச்சத்தினையும் கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்தில் 10 சதவீதத்தை இது பூர்த்தி செய்கிறது.

இதனால் இதனை உண்ணும்போது நீண்ட நேரம் வயிறுனை நிரம்பிய உணர்வு ஏற்படுவதால் பசி உண்டாவது தடுக்கப்படுகிறது.

மேலும் இதில் உள்ள குறிப்பிட்ட புரதமானது கொழுப்புச்சத்தினை சிதைக்க உதவுகிறது. எனவே இதனை குறைந்த கலோரிகள் கொண்ட காய்கறிகள், பழங்களுடன் சேர்த்து உண்ணும்போது ஆரோக்கியமான உடல் இழப்பினைப் பெறலாம்.

 

இரத்தத்தை உறையச் செய்தல்

வெங்காய தாளில் காணப்படும் விட்டமின் கே இரத்த உறைதலுக்கு மிகவும் அவசியமானது ஆகும். காயங்கள் உண்டாகும்போது இரத்தம் உறைதல் என்பது மிகவும் அவசியமானது.

இந்நிகழ்வால் அதிகளவு இரத்தப்போக்கு நிகழ்வது தடுக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகள் மற்றும் பிளாஸ்மாக்களால் இந்நிகழ்வு உண்டாகிறது.

விட்டமின் கே குறைபாடு மூக்கு மற்றும் ஈறுகளில் அதிகளவு இரத்தப்போக்கினை அடிக்கடி உண்டாக்கிவிடும். இரத்த உறைதலில் குறைபாடு உள்ளவர்கள் வெங்காய தாளினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

 

நோய் எதிர்ப்பாற்றலைப் பெற

வெங்காய தாளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்களான ப்ளவனாய்டுகள், குவர்செடின் மற்றும் அன்டோசைனின் போன்றவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகின்றன.

மேலும் இதில் காணப்படும் செலீனியமானது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலுக்குள் நோய்கிருமிகளின் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே வெங்காய தாளினை உட்கொண்டு நோய் எதிர்ப்பாற்றலைப் பெறலாம்.

 

இதய நலத்திற்கு

வெங்காய தாளில் உள்ள விட்டமின்கள் ஏ மற்றும் சி வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடுத்து இதயநலத்தை மேம்படுத்துகிறது.

மேலும் இதில் உள்ள விட்டமின் கே-வானது இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடைசெய்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.

இதனை அடிக்கடி உண்ணும் போது டிரைசைக்கிளாய்டுகள், கெட்டகொழுப்புகள், கொலஸ்ரால்களின் செயல்பாடுகள் தடைசெய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இதில் உள்ள அலிசின், சல்பர் மற்றும் செலீனியம் போன்றவை இதய நலத்தை மேம்படுத்துகின்றன.

 

எலும்புகளின் நலத்திற்கு

வெங்காய தாளில் உள்ள விட்டமின் கே-வானது எலும்புகளில் உள்ள கால்சியத்தை பராமரிக்க உதவதோடு எலும்புகளின் அடர்த்தியையும் பாதுகாக்கிறது.

எலும்புக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் விட்டமின் கே நிறைந்த வெங்காய தாளினை உண்ணுவதால் எலும்புப் பாதிப்புகள் சரி செய்யப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே விட்டமின் வெங்காய தாளினை உண்டு எலும்புகளின் நலத்தினைப் பாதுகாக்கலாம்.

 

புற்றுநோயினைத் தடுக்க

வெங்காய தாளானது புற்றுநோய் வளர்ச்சியினைத் தடுக்கிறது. இதில் உள்ள அலிசின் பொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.

குடல், வயிறு, தலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் புற்றுநோய் உருவாக்கத்தை இது தடைசெய்கிறது.

 

சருமப் பாதுகாப்பிற்கு

வெங்காய தாளில் உள்ள அலிசின் பொருளானது சரும மேம்பாட்டிற்கு உதவுகிறது. இப்பொருளானது இளம் வயதிலேயே சருமச்சுருக்கம் ஏற்படுவதைத் தடைசெய்கிறது.

மேலும் சருமப்பொலிவையும் இப்பொருள் உண்டாக்குகிறது. இதில் உள்ள விட்டமின் சி-யானது ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

 

கண்களின் பாதுகாப்பிற்கு

வெங்காய தாளில் உள்ள விட்டமின் ஏ-வானது ராடாப்சின் என்ற புரத உருவாக்கத்திற்கு உதவுகிறது. ராடாப்சினானது கண்கள் ஒளியை அதிகம் உட்கொள்ள உதவுகிறது.

இது மாலைக்கண் நோயினை நீக்கி பார்வைத் திறனை கூர்மையாக்குகிறது. கண்புரை உள்ளிட்ட கண் பிரச்சினைகளிலிருந்து இது பாதுகாப்பு அளிக்கிறது.

 

வெங்காய தாளினை வாங்கும் முறை

வெங்காய தாளினை வாங்கும்போது ஒரே அளவிலான, சீரான நிறத்துடன், விறைப்பாகவும், கனமாகவும் உள்ளவற்றை வாங்க வேண்டும்.

அதிக பருமன், சீரற்ற நிறம் மற்றும் உலர் இலைகள் கொண்டவற்றை தவிர்க்க வேண்டும்.

இதனை வாங்கி அலசி ஈரப்பதம் இல்லாமல் குளிர்பதனப் பெட்டியில் ஒருவாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

வெங்காய தாளினைப் பயன்படுத்தும்போது மேற்புறம் உள்ள இரண்டு அடுக்குகளை நீக்கி அலசி உலர வைத்து உபயோகிக்கலாம்.

வெங்காய தாள் வாடியது போல் இருந்தால் தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் புதிதுபோல் இருக்கும்.

வெங்காய தாளானது சூப்புகள், சாலட்டுகள், பான்கேக்குகள், பாஸ்தா, நூடுல்ஸ் தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

சத்துக்கள் நிறைந்த வெங்காய தாளினை அடிக்கடி உணவில் சேர்த்து வளம் பெறுவோம்.

வ.முனீஸ்வரன்

 

One Reply to “வெங்காய தாள் – விட்டமின் கே மூலம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.