வெங்காய பக்கோடா அனைவருக்கும் பிடித்தமான நொறுக்குத் தீனியாகும். இதனை தனியாகவோ, மாலை நேரங்களில் டீ, காப்பி ஆகியவற்றுடனோ உண்ணலாம்.
இதனை விருந்தினர்களின் வருகையின் போதும், விழாக்காலங்களிலும் செய்து அசத்தலாம்.
எளிய முறையில் சுவையான வெங்காய பக்கோடாவை வீட்டில் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 2 எண்ணம் (நடுத்தரமானது)
கடலை மாவு – 200 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)
பெருஞ்சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயப் பொடி – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 2 எண்ணம்
தண்ணீர் – குழிக்கரண்டி அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
வெங்காய பக்கோடா செய்முறை
பெரிய வெங்காயத்தைத் தோல் நீக்கி சுத்தம் செய்து, நேராக மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டு, இஞ்சியைத் தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
அகலமான தட்டில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி வெள்ளைப் பூண்டு விழுது, பெருஞ்சீரகம், மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பின்னர் எல்லாவற்றையும் ஒரு சேரக் கலந்து கொள்ளவும்.
பின்னர் மாவுக் கலவையுடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து அதனுடன் குழிக்கரண்டி தண்ணீரை லேசாக தெளிந்தவாறே மெதுவாகப் பிசையவும்.
அழுத்தி பிசையக் கூடாது. கலவையானது படத்தில் காட்டிய அளவிற்கு வரவேண்டும்.
வெங்காயத்தைச் சேர்த்ததும்
வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த கலவையில் சிறிது சிறிதாக எடுத்து, எண்ணெய் முழுவதும் பிசிறி விடவும்.
பக்கோடா வெந்து எண்ணெய் குமிழி அடங்கியதும் எடுத்து விடவும்.
சுவையான வெங்காய பக்கோடா தயார். இதனை தேங்காய் சட்னி சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் கரம் மசாலா பொடி சேர்த்து பக்கோடா தயார் செய்யலாம்.
மாவு பிசையும்போது அழுத்தி பிசைந்தால் பக்கோடா கடினமாகி விடும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!