வெங்காய வடகம் / வத்தல் செய்வது எப்படி?

வெங்காய வடகம் / வத்தல் அருமையான சைடிஷ். இதனைச் செய்வதற்கு சின்ன வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது சின்ன வெங்காயம் விலை குறைவாக இருப்பதோடு, கோடைகாலத்தின் துவக்கமும் ஆதலால் இதனை செய்து பயன்படுத்தலாம்.

இதனை செய்யத் தேவையான பொருட்களை சரியான விகிதத்தில் கலந்து பயன்படுத்துதால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

இனி சுவையான வெங்காய வடகம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 1 கிலோ கிராம்

உளுந்தம் பருப்பு – 100 கிராம்

மிளகாய் வற்றல் – 30 எண்ணம்

பெருங்காயப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

கடுகு ‍ – 3/4 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

எல்லா வெங்காயத்தையும் சதுரத் துண்டுகளாக்கி வாயகன்ற பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

நறுக்கிய வெங்காயம்

மிளகாய் வற்றலை காம்பு நீக்கி வெயிலில் நன்கு காய வைத்து மிக்ஸியில் நைசாக பொடியாக்கிக் கொள்ளவும்.

காம்பு நீக்கிய மிளகாய் வற்றல்
மிளகாய் பொடி

பெருங்காயப் பொடிக்கு பால் பெருங்காயத்தை வெயிலில் காய வைத்து ஒன்றிரண்டாகத் தட்டி, பின் மிக்ஸியில் பொடியாக்கி தேவையானதை உபயோகித்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவி ஒன்றிரண்டாக பிய்த்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலை

உளுந்தம் பருப்பினை தண்ணீர் ஊற்றிக் களைந்து கொள்ளவும்.

களைந்த பருப்புடன், பருப்பினைப் போன்று இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

உளுந்தம் பருப்பு ஊறியதும் உளுந்தினை வடைக்கு அரைப்பது போல் மிகவும் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

உளுந்தினை அரைக்கும் போது

உளுந்தினை தோண்டுவதற்கு முன் அதில் மிளகாய் வற்றல் பொடி, பெருங்காயப் பொடி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி தோண்டிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றல் பொடி, பெருங்காயப் பொடி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்ததும்
தேவையான பதத்தில் மாவு

சின்ன வெங்காயத்துடன் கடுகு, சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.

சீரகம் மற்றும் கடுகு சேர்த்ததும்

உளுந்த மாவினை நறுக்கிய சின்ன வெங்காயத்துடன் சேர்த்து ஒரு சேர கலந்து கொள்ளவும்.

வெங்காயத்துடன் உளுந்தம் மாவினைச் சேர்த்ததும்
மாவினை ஒருசேரக் கலந்ததும்

சுத்தமான பிளாஸ்டிக் மேற்பரப்பு உள்ள அரிசி சாக்கினை வெயில்படும் இடத்தில் விரித்து, அதில் வெங்காயக் கலவையை சிறிது சிறிதாக கிள்ளி சாக்கு முழுவதும் வைத்து காயவிடவும்.

வெங்காயத்தைக் கிள்ளி காய வைத்ததும்

ஒருநாள் முழுவதும் காயந்ததும் வெங்காய வடகம் / வத்தலைப் பிய்த்து அதே சாக்கில் போட்டு காய விடவும்.

பிய்த்து காய விடும் போது

சுவையான வெங்காய வடகம் / வத்தல் தயார்.

உபயோகிக்கத் தயார் நிலையில் வெங்காய வடகம்

வடகத்தின் உள்ளே ஈரப்பதம் இல்லை என்பதை உறுதிபடுத்திய பின் அதனை காற்றுப் புகாமல் டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

இதனை தயார் செய்து ஆறுமாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

உண்பதற்கு

வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி எண்ணெய் லேசாகக் காய்ந்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து, காய்ந்த வெங்காய வத்தல் / வடகம் நான்கு சேர்த்து லேசாக நிறம் மாறியதும் எடுத்துவிடவும். இல்லையெனில் வடகம் கருகி சுவை மாறி விடும்.

வறுக்கும் போது

இவ்வடகத்தை சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் ஆகியவற்றுடன் சுவைத்து உண்ணலாம்.

குறிப்பு

வெங்காய மாவுக் கலவை தயார் செய்ததும் உடனே கிள்ளி வெயிலில் காய விடவும். இல்லையெனில் உப்பு சேர்த்த வெங்காயம் தண்ணீர் விட்டு விடும்; காய வைக்க இயலாது.

உளுந்தம் மாவினை அரைக்கும் போது கவனமாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். மாவு நீர்த்து இருந்தால் அதனுடன் வெங்காயம் சேர்க்கும் போது மேலும் நீர்த்து வெங்காயத்தைக் கிள்ளி காய வைக்க இயலாது.

வடகம் காய வைக்க ஓலைப் பாயினை பயன்படுத்தலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.